PUBLISHED ON : பிப் 27, 2022

மார்ச்-1 சிவராத்திரி
சிவராத்திரி சிவனுக்குரிய திருநாளாக இருந்தாலும், நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் அன்று, குலதெய்வ வழிபாடும் செய்கின்றனர். சிவாலயங்களில் அன்று இரவு, நான்கு கால பூஜை செய்யப்படுகிறது. ஆனால், எதற்காக இரவில் வழிபாடு செய்ய வேண்டும் என்பது, பலருக்கும் தெரியாத விஷயம்.
'அன்பே சிவம்' என்பர். சிவம் என்றால் அன்பு. அந்த அன்பு யாருக்குள் இருக்கும்? ஒவ்வொருவர் உள்ளத்திலும் இருக்கும். இதை அடுத்தவர் மீது எப்படி கொட்டுவது என்பதைத் தான், இன்னும் அறியாமல் இருக்கின்றனர்.
காரணம், அன்பிருக்கும் உள்ளத்தை இருள் சூழ்ந்திருக்கிறது. இந்த இருளே, 'தான்' எனும் ஆணவம். இந்த இருளை விலக்க, மனச்சுத்தம் தேவைப்படுகிறது. பிரார்த்தனை, தியானம் மூலமாக மட்டுமே ஆணவத்தை விரட்ட இயலும். அதற்கு உடல் ஒத்துழைக்க வேண்டும்.
உடலுக்குள் உணவு சென்று விட்டால், சிந்தனை சிதறும். பசியோடு இருந்தால் மனம் ஒருமைப்படும். 'குத்துப்பட்டவன் கிடந்தாலும், குறை வயிற்றுக்காரன் கிடக்க மாட்டான்...' என்று சொலவடை உண்டு. ஆம்... பசியில் துாக்கமும் வராது.
உணவும், துாக்கமும் இல்லையென்றால், நாம் நாமாக இல்லை. நாம் ஒன்றுமே இல்லை. அந்த மயக்கத்தில் எதிரே இருக்கும் சிவலிங்கம் மட்டுமே கண்ணுக்கு தெரியும். அதில் மட்டுமே மனம் லயிக்கும். அன்பின் அடையாளம் சிவன்; அன்பே சிவம். ஆக, இருளாகிய ஆணவத்தை அகற்றி விட்டால் மனதில் அன்பு என்ற வெளிச்சம் பிறக்கிறது.
இரவில் பூஜை செய்து, அதிகாலையில் விரதம் முடிப்பதன் தத்துவம் இதுவே. சிவராத்திரியன்று பட்டினி கிடந்து, துாங்காமல் இருக்கும் விரத முறை, இதனால் தான் உருவாக்கப்பட்டது.
மனம் ஒன்றிணைந்து விட்டால், மனிதர்கள் ஒன்றிணைந்து விடுவர். முதலில், நம் குடும்பம் ஒன்று சேர வேண்டும். குடும்ப ஒற்றுமைக்கு குலதெய்வ வழிபாடு மிகச்சரியானது. எந்த ஊரில் இருந்தாலும் ஒட்டுமொத்தமாக குல தெய்வ கோவிலுக்கு சிவராத்திரியன்று வந்து விடுவர்.
சிவராத்திரியன்று குல தெய்வத்தை வணங்கும் முறை முதன் முதலில், மகாராஷ்டிரா மற்றும் கர்நாடக மாநிலத்தில் தான் பிறந்தது.
மகாராஷ்டிரா மாநிலம், புனே அருகிலுள்ள ஜெஜுரி கிராமத்தில், கண்டோபா கோவில் இருக்கிறது.
தமிழகத்தில் சிவனின் அம்சமாக பைரவர், பிட்சாடனர் என்றெல்லாம் வழிபடுவது போல், காடுகளில் வசிக்கும் பழங்குடியின மக்கள், சிவனின் ஒரு அம்சமான கண்டோபாவை குல தெய்வமாக வழிபடுகின்றனர். இவர்கள், சிவராத்திரியன்று இரவில் குடும்பத்துடன் கூடுவர். விடிய விடிய விழித்திருந்து பூஜை செய்வர்.
இந்த வழக்கம் தென் மாநிலங்களை நோக்கி நகர்ந்தது. தமிழகத்திலும், சிவராத்திரியன்று இரவில், பல ஊர்களில் குல தெய்வ வழிபாடு நடத்துவதைக் காணலாம்.
மொத்தத்தில் சிவராத்திரி என்பது, ஒற்றுமை திருவிழா. மனதில் அன்பு விளைந்தால் ஒற்றுமை பிறக்கும். குடும்பங்கள் ஒன்றிணைந்தால், ஊர் ஒற்றுமையாகும். ஊர் இணைந்தால் நாடும், உலகமும் ஒற்றுமையாகும். உலகெங்கும் அன்பே சிவம் என்ற கோஷம் ஒலிக்க, சிவராத்திரி விரதம் மேற்கொள்வோம்.
தி. செல்லப்பா
