தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/நான் ஏன் பிறந்தேன்? எம்.ஜி.ஆர்., (1)

நான் ஏன் பிறந்தேன்? எம்.ஜி.ஆர்., (1)

நான் ஏன் பிறந்தேன்? எம்.ஜி.ஆர்., (1)


PUBLISHED ON : ஜன 15, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 15, 2017


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

உலகில் பிறந்த ஒவ்வொருவரும் இக்கேள்வியை தங்களுக்குள் எழுப்பலாம்; ஆனால், முற்றுப் புள்ளியிடும் அளவுக்கு, முடிவான விடையை, யாராலும் உறுதியாக கூறி விட முடியாது. ஆயினும், இக்கேள்வியின் அடிப்படையில் பிறக்கும் விடைகளும், விளக்கங்களும், கடந்த காலத்திலிருந்து நிகழ்காலத்திற்கும், நிகழ்காலத்திலிருந்து எதிர்காலத்திற்கும் நம் சிந்தனையை அழைத்துச் செல்லும் தன்மையை பெற்றிருப்பதால், இப்பணியில் ஈடுபட துணிகிறேன்.

எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்

எண்ணுவம் என்பது இழுக்கு!


ஆம்... நான் துணிந்து விட்டேன்; அதிலும், வினோதமானது என்னுடையது துணிவு! காரணம், வாசகர்களின் உள்ளத்தை ஈர்த்து, அப்படியே அசைவற்று ஊண், உறக்கம் ஏதுமின்றி நினைவிழந்து, அடுத்த தொடர்ச்சி எப்போது வருமென்று ஏங்கி தவிக்கும்படியான நிலையை ஏற்படுத்தக் கூடிய அளவுக்கு எனக்கு எழுதும் திறமை கிடையாது என்பது தான்!

எனினும், என்னை பற்றி அன்பர்கள் பலர், குறிப்பிடும் போது, 'நினைத்ததை, நம்புவதை அப்படியே வெளியிடும் மனப் போக்கு படைத்தவர்...' என்று கூறுவதுண்டு.

ஆனால், நான் நினைப்பதெல்லாம் சரியாகத் தான் இருக்கும் என்று கூற முடியாதென்பது எனக்கே தெரியும். ஏனெனில், என் வாழ்வில், நான் அப்படி நம்பி ஏமாந்த நிகழ்ச்சிகள் ஏராளம். அனுபவம் வாயிலாக கண்டறிந்த உண்மைகள், என்னை அங்கணம் எண்ண வைக்கின்றன.

நான் பங்கு கொண்ட நாடக அமைப்புகளிலும், பட நிறுவனங்களிலும், என்னுடன் தொழில் செய்த நடிக, நடிகையர், திரைப்பட துறையினர், அரசியல் கட்சி தலைவர்கள், தொண்டர்கள் வெவ்வேறு தொழில்களில் ஈடுபட்டிருப்போர், குடும்ப நண்பர்கள் மற்றும் என்னுடன் உறவாடிய, உறவாடுவோர் என, இப்படி பலரையும் பற்றி எழுத வேண்டியிருக்கிறது. அதனால், மேலே குறிப்பிட்ட தரப்பினர்களில் எனக்கு உதவி செய்தோர், கை தூக்கி விட முயன்றோர், முன்னேற இருந்த என்னை பின்னுக்கு இழுத்து படுபாதாளத்தில் தள்ளி அழிக்க முயன்றோரை பற்றியும் குறிப்பிடுவேன் என்று நண்பர்கள் எதிர்பார்ப்பர். ஒருவகையில், அது தவிர்க்க முடியாததும் கூட!

நியாய உணர்ச்சியும், நேர்மையும் உள்ளவர்கள், உண்மையை மறுக்க முன் வர மாட்டார்கள். ஆயினும், 'எதிர்ப்புகளும், மனத்தாங்கலும் வரலாம் என்று தெரிந்தும், எதற்காக அவர்களை பற்றி எழுதி, பொல்லாப்படைய வேண்டும்...' என்று சிலர் கேட்கலாம்; அவர்களுக்கெல்லாம் நான் வணக்கத்தோடு சொல்கிற ஒரே பதில், 'நல்லதோ, கெட்டதோ அது, மற்றவர்களுக்கு பயன்படும் என்றால், அதை, துணிந்து கூறலாம்...' என்ற பெரியோரின் வார்த்தையை நம்பி, துணிவுடனும், அடக்கத்துடனும் என் வாழ்க்கை பாதையில், நான் கடந்து வந்த விவரத்தை எழுத நினைக்கிறேன்.

பார்த்தீர்களா... ஆரம்பத்திலேயே தவறு வந்து விட்டது. 'கடந்து வந்தேன்...' என்று கூறுவது தவறு; 'கடத்தி வரப்பட்டேன்...' என்பது தான் சரி.

உதாரணமாக, ஒருவன், கிராமத்திலிருந்து, நகரத்திற்கு செல்ல விரும்புகிறான் என்று வைத்துக் கொள்வோம். அவன், ரயில் நிலையத்திற்கு மாட்டு வண்டியில் தான் செல்ல முடியும் என்ற நிலைமை இருந்தால், மாட்டு வண்டியிலும், அங்கிருந்து நகரத்திற்கு வர, புகை வண்டியிலும், பின், தான் செல்ல வேண்டிய இடத்திற்கு, மோட்டார், ரிக் ஷா போன்ற வாகனங்களிலும் கடத்தி வரப்பட்டு, குறிப்பிட்ட இடம் சேருகிறான்.

இதைப் போன்றே, ஒவ்வொரு மனிதனும், தன் வாழ்வில் மற்றவர்களாலே நடத்தி (கடத்தி) செல்லப்படுகிறான்.

பிறப்பென்னும் ஊரிலிருந்து புறப்பட்டு, இறப்பென்னும் ஊரை நோக்கி பயணம் செய்யும் நான், இதுவரை, கடந்து வந்த பாதையில் அடைந்த அனுபவத்தின் குறிப்புகளே, 'நான் ஏன் பிறந்தேன்?' என்ற கேள்விக்கு, விடை கூறக்கூடிய சான்றுகள்.

என் வாழ்க்கைப் பாதையில், வறண்ட பாலை வனத்தில், நடக்கவும் சக்தியற்று, துன்பப்பட்டும் இருக்கிறேன்; நல்ல நீரோடைகளும், குளிர் தரும் சோலைகளும், அன்ன தாதாக்களின் ஆதரவால், அறுசுவை உண்டியும் கிடைக்கப் பெற்று ஆனந்தத்தில் திளைத்தும் இருக்கிறேன்.

சில சமயங்களில், என் இன்னல்களுக்கிடையே பிறருக்கு ஏற்பட்ட துன்பத்தை அறிந்து, அதை களையவும், முயற்சி செய்திருக்கிறேன். நொந்தவன், துன்பப்பட்டவன் மற்றும் ஆதரவற்றவன் என்ற என் நிலையை உணர்ந்து, இந்நிலை மற்றவர்களுக்கு வரக்கூடாது என்று எண்ணி, என் சக்திக்குட்பட்ட உதவியை செய்துள்ளேன். அதற்கு, பிரதிபலனாக, முட்டாள், பைத்தியக்காரன், வாழத் தெரியாதவன், ஊதாரி, சிக்கனத்தின் பெருமை அறியாதவன் என்றெல்லாம் தூற்றப்பட்டு, அவமானப்படுத்தப்பட்டு, பரிகசிக்கப்பட்டும் இருக்கிறேன்.

இருப்பினும், அவையனைத்தையும் ஏற்று, எப்படியோ என் வாழ்க்கையில் முன்னேறி வந்திருப்பதை போல், இத்தொகுப்பை எழுதுவதன் மூலம், எனக்கு கிடைக்கப் போகும் இகழ்ச்சி, புகழ்ச்சி, தூற்றுதல், போற்றுதல், தீமை, நன்மை, போன்ற பரிசுகளையும், மனமார ஏற்றுக் கொள்வதென்று துணிந்து எழுதுகிறேன்.

என் வாழ்க்கையில் நிகழ்ந்த, சில, பல நிகழ்ச்சிகளை, இத்தொடரில் வெளியிடுவதன் மூலம், யாரையும் துன்புறுத்தும் நோக்கமோ, அனாவசியமாக புகழ, பாராட்ட வேண்டும் என்ற நோக்கமோ சிறிதும் இல்லை. இதை, சம்பந்தப்பட்ட அன்பர்கள் நம்ப வேண்டும் என்று, தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

தொடரும்.

நன்றி: கண்ணதாசன் பதிப்பகம்,

சென்னை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us