தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/மனைவியின் அனுமதி!

மனைவியின் அனுமதி!

மனைவியின் அனுமதி!


PUBLISHED ON : ஆக 28, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 28, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வாரணாசியில், கிரிகலா - சுகலா என்ற தம்பதி வாழ்ந்து வந்தனர். வியாபாரியான கிரிகலாவுக்கு, திடீரென்று, தீர்த்த யாத்திரை செல்ல வேண்டும் என்று தோன்றியது. அதை, தன் மனைவியிடம் கூறினார். உடனே அவள், 'நானும் உடன் வருவேன்...' என்றாள்.

'வழியில், ஏதாவது இடையூறு ஏற்பட்டால் என்ன செய்வது...' என நினைத்து, 'இவளை அழைத்துச் செல்லக் கூடாது...' என்று முடிவு செய்தார், கிரிகலா.

ஒருநாள், மனைவியிடம் சொல்லாமல், தனியே தீர்த்த யாத்திரைக்கு சென்று விட்டார், கிரிகலா. கணவரை காணோம் என்றவுடன், நடந்ததை புரிந்து கொண்டாள் சுகலா.

கணவர் மீது மிகுந்த அன்பு கொண்ட அவள், 'என்னிடம் சொல்லாமல் தீர்த்த யாத்திரைக்கு செல்கிறார் என்றால், என்னிடம் ஏதோ தவறு இருக்கிறது; அதற்கு தண்டனையாக அவர் வரும் வரையில், விரதம் இருக்கப் போகிறேன்...' என்று முடிவெடுத்து, ஒரு வேளை மட்டுமே உணவு உண்டு, தரையில் படுத்து உறங்கினாள்.

உறவினர்கள் எவ்வளவு கூறியும் கேளாமல் தொடர்ந்து, பல மாதங்களாக விரதம் இருந்து வந்தாள்.

ஒருநாள், தேவேந்திரனின் உதவியாளன், சுகலாவிடம் வந்து, 'பெண்ணே... உன் கணவன் தீர்த்த யாத்திரைக்கு சென்று, மூன்று ஆண்டுகளுக்கும் மேலாகி விட்டன. அவன் எங்குள்ளான் என்பதே உனக்கு தெரியவில்லை. அவனை நினைத்து ஏன் நீ, உன் இளமையை வீணாக்கி கொள்கிறாய்... எங்கள் தலைவரான தேவேந்திரன், உன்னை மணக்க தயாராக இருக்கிறார்...' என்றான்.

'அப்படியா... உன் தலைவரை இங்கு வர சொல்...' என்றாள், சுகலா.

அலங்கார ரூபத்துடன் அவள் எதிரில் வந்தான் தேவேந்திரன். 'இந்திரா... தேவர்களுக்கு தலைவனான நீ, உத்தம பெண்கள் மேல் இச்சை கொள்ளும் பாவச் செயலை செய்ய நினைக்கலாமா...' என்று கேட்டு, அவனுக்கு பல்வேறு அறிவுரைகள் கூறி, திருப்பி அனுப்பினாள்.

இந்நிலையில், ஒரு புண்ணிய தீர்த்தத்தில் நீராடினார், கிரிகலா.

அப்போது, 'கிரிகலா... உன் மனைவியை விட்டு, தனியே நீ மட்டும் வந்ததால், எத்தனையோ புண்ணிய தீர்த்தங்களில் நீராடிய போதும் உனக்கு கடுகளவு கூட புண்ணியம் கிடைக்கவில்லை. இன்றளவும் உன் முன்னோர் நரகத்தில் தான் அழுந்திக் கிடக்கின்றனர்...' என்று அசரிரீ ஒலித்தது.

இதைக் கேட்டதும், உடனே, தன் யாத்திரையை முடித்து, வீடு திரும்பிய கிரிகலா, மனைவியிடம் நடந்ததைக் கூறி, மன்னிக்குமாறு வேண்டினார். அப்போது, அங்கு வந்த தேவேந்திரன், 'கிரிகலா... உண்மையிலேயே நீ கொடுத்து வைத்தவன்; உன் மனைவியின் மனதை கலைப்பதற்காக எவ்வளவோ முயற்சிகள் செய்தேன். அவளோ எனக்கே அறிவுரை கூறி, திருந்த சொன்னாள். உங்களுக்கு என்ன வரம் வேண்டும் கேளுங்கள்...' என்றான்.

'தேவேந்திரா... நாங்கள், எங்கள் வாழ்நாள் முழுவதும் நேர்மையான வழியை பின்பற்றவே விரும்புகிறோம்; அதிலிருந்து விலகாமல் இருக்கும் மனதை, வரமாக தந்தால் போதும்...' என்றனர்.

'அப்படியே தந்தேன்...' எனக் கூறி மறைந்தான் தேவேந்திரன்.

காசியில் நடந்த இந்த வரலாறு, கணவன் - மனைவி எப்படி இருக்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது.

பி.என்.பரசுராமன்

திருவாசகம்!

உழி தரும் காலும் கனலும் புனலொடு

மண்ணும் விண்ணும்

இழி தரு காலம் எக்காலம்

வருவது வந்ததற்பின்

உழி தரு காலத்த உன் அடியேன்

செய்த வல்வினையைக்

கழி தரு காலமும் ஆய் அவை

காத்து எம்மைக் காப்பவனே!

விளக்கம்: காற்று, நீர், நெருப்பு, பூமி மற்றும் ஆகாயம் அழிகின்ற காலமானது, எப்போது வரும்... அந்த இறுதிக் காலம் உண்டான பின்பும், நிலைத்து இருக்கும் கால தத்துவத்திற்கு தலைவனே... சிருஷ்டிகளையும், பிரளயத்தையும் உண்டாக்க வல்ல காலத்தை ஆளும் இறைவா... என் கொடிய வினையை நீக்கி, அருளுக!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us