பல லட்சம் ரூபாய் செலவழித்து பெண் தேடும் தொழில் அதிபர்!
பல லட்சம் ரூபாய் செலவழித்து பெண் தேடும் தொழில் அதிபர்!
PUBLISHED ON : ஆக 12, 2012

சீனாவைச் சேர்ந்த பிரபலமான தொழில் அதிபர், தனக்கு பொருத்தமான வாழ்க்கை துணையை தேர்வு செய்யும் பணியை, தனியார் கன்சல்டன்சி நிறுவனத்திடம் ஒப்படைத்துள்ளார்.
இந்நிறுவனம், சீனாவில் உள்ள முக்கிய பத்திரிகைகளில் விளம்பரம் வெளியிட்டது. அதில், 'சீனாவின் மிகப் பிரபலமான தொழில் அதிபருக்கு, வாழ்க்கைத் துணை தேவை. 50 வயதானாலு<ம், மிகவும் நல்ல உடல் நலத்துடன் இருக்கிறார். ஆர்வமுள்ள பெண்கள், நேர்முகத் தேர்வுக்கு வரவும்!' என, குறிப்பிடப்பட்டு இருந்தது. அந்த தொழில் அதிபரின் பெயர் உள்ளிட்ட மற்ற எந்த விவரமும் வெளியிடப்படவில்லை.
குவாங்சோ நகரில் உள்ள சொகுசு ஓட்டலில் தான், மணமகள் தேர்வு நடந்தது. இதில், 320 பெண்கள் பங்கேற்றனர். பல கட்டத் தேர்வுகள் நடத்தப்பட்டன. ஆனாலும், இவர்களில் யாருமே தேறவில்லை. இதையடுத்து, சீனாவின் மற்றொரு நகரத்தில் தேர்வு நடத்தப்பட்டது. அங்கும் யாரும் தேறவில்லை. இதனால், ஒவ்வொரு நகரமாக சென்று, தேர்வு நடத்தி வருகின்றனர்.
'இந்த போட்டியில் பங்கேற்க நிர்ணயிக்கப்பட்டுள்ள தகுதிகள், மிகவும் கடுமையாக இருப்பது தான், நேர்முகத் தேர்வில் இன்னும் யாரும் தேறாததற்கு காரணம்...' என கூறப்படுகிறது. தனக்கு மனைவியாக வரப்போகும் பெண்ணுக்கு, அந்த தொழில் அதிபர் நிர்ணயித்துள்ள தகுதிகள் என்ன தெரியுமா? 'கண்டிப்பாக, 20 முதல் 25 வயதுக்குட்பட்ட பெண்கள் தான் தேர்வுக்கு வர வேண்டும். உடல் எடை, 50 கிலோவுக்கு மேல் இருக்கக் கூடாது. உயரம், 162லிருந்து, 170 செ.மீ.,க்குள் இருக்க வேண்டும். பட்டப் படிப்பு படித்திருக்க வேண்டும். கன்னித் தன்மையுடையவராக இருக்க வேண்டும்...' என்பது தான். இந்த தேர்வுக்காக இதுவரை, 70 லட்சம் ரூபாய்க்கு மேல், செலவாகி விட்டதாக கூறுகின்றனர் கன்சல்டன்சி நிறுவனத்தார். இன்னும் எவ்வளவு செலவாகப் போகிறதோ?
***
எஸ். ரேவதி
