sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 24, 2025 ,ஐப்பசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

கருவறை தோழிகள்!

/

கருவறை தோழிகள்!

கருவறை தோழிகள்!

கருவறை தோழிகள்!


PUBLISHED ON : நவ 24, 2019

Google News

PUBLISHED ON : நவ 24, 2019


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மசாலா தடவிய வஞ்சிரம் மீன் துண்டை, சோள மாவில் புரட்டி, எண்ணெயில் போட்டு பொறித்துக் கொண்டிருந்தாள், ஜெயந்தி. வயது, 54.

ஜெயந்திக்கு, இரண்டு அக்கா, ஒரு தங்கை. மூத்த அக்கா, காயத்ரியின் வயது, 60. இளைய அக்கா, சொர்ணாவின் வயது, 58; தங்கை, மங்கையின் வயது, 52.

ஞாயிற்றுக்கிழமை பகல் பொழுதுகளில், இளைய அக்கா, சொர்ணாவுடன், தரை பேசியில் கதைப்பாள், ஜெயந்தி. மூத்த அக்கா மற்றும் தங்கையுடன் பேச்சு இல்லை.

தரை பேசி, தொடர்ந்து சிணுங்கியது.

காஸ் அடுப்பை, 'ஆப்' செய்து, பொறித்த மீனை கரண்டியால் எடுத்து, தனி பாத்திரத்தில் வைத்தாள்.

ஒலி வாங்கியை எடுத்து, ''ஹலோ,'' என்றாள், ஜெயந்தி.

எதிர் முனையில், இளைய அக்கா பதறினாள்.

''ஜெயந்தி... காயத்ரி அக்கா, கணவன், மகள் மற்றும் மருமகனோட காரில் போகும்போது, பயங்கரமான விபத்து. இதுல, காயத்ரிக்கு மரண காயம். மதுரை, மிஷன் ஆஸ்பத்திரி, ஐ.சி.யூ.,வில் சேர்த்திருக்காங்க.''

விருட்டென்று ஒரு துக்க பந்து, அடிவயிற்றில் உருண்டோடியது. இதயம் ஒரு நொடி நின்று இயங்கியது. கண்ணீர் பொங்கியது. தான் ஆடாவிட்டாலும் சதை ஆடும் என்பர். என்னதான் பல ஆண்டுகளாக அக்காவுடன் பேசாமல் இருந்தாலும், உயிருக்கு போராடுகிறாள் என்றதும், துடிதுடித்தாள், ஜெயந்தி.

''கடவுளே,'' என, கூவினாள் ஜெயந்தி.

''காரில் போன மற்ற எல்லாருக்கும் சொற்ப காயங்கள் தான். புது கார், அப்பளமாக நசுங்கி விட்டது. உனக்கும், அவளுக்கும் சண்டை இருக்கலாம். ஆனாலும், தகவல் சொல்லணுமில்லையா... நாங்க ஆஸ்பத்திரிக்கு கிளம்பிட்டுருக்கோம். வர விரும்பினா, கிளம்பி வா... போனை வைக்கிறேன்,'' என்றாள், சொர்ணா.

அக்கா, காயத்ரி, நான்கு சகோதரிகளில் சுமார் பர்சனாலிட்டி. மாநிறம். லேசான தெத்துப்பல். எப்போதும் விசனமாய் காட்சியளிக்கும் முகம்.

ஜெயந்தி பிறந்து, தொட்டிலில் கிடப்பதை பார்த்த, காயத்ரி, 'சனியன், செவ செவன்னு பிறந்து தொலைச்சிருக்கு...' என, ஆலாபித்து, தொடையில், 'நறுக்'கென்று கிள்ளி விட்டாள். ஜெயந்தி வீறிட, செவிலியர் வர, ஓடி ஒளிந்தாள், காயத்ரி.

ஜெயந்தியின் அம்மாவுக்கு தாய்ப்பால் அதிகம் சுரக்காததால், புட்டிப்பால் புகட்டுவாள். அம்மா இல்லாத நேரம் பார்த்து, புட்டிப் பாலை குடித்து விடுவாள், காயத்ரி.

ஜெயந்தியை பெயர் சொல்லி கூப்பிடாமல், 'வெள்ளை குட்டி பிசாசே...' என்று தான் அழைப்பாள். இரண்டு வயதான போது, ஜெயந்தியின் படுக்கையில் பல்லியை போட்டு, அவள் அலறி துடிப்பதை ரசிப்பாள்.

சுட்டு போட்டாலும் படிப்பு வராது. பொறாமை குணம் அதிகம். காரணமே இல்லாமல் பிறர் மீது பொறாமைப்படுவாள். கோள் மூட்டுவது, காயத்ரியின் பிறவிக்குணம். ஜெயந்தி பள்ளிக்கூடத்துக்கு துாக்கி செல்லும் சாப்பாடு டப்பாவில், மண்ணை கொட்டி வைப்பாள்.

மூத்த இரு சகோதரிகளுக்கு, நான்கு நான்கு தோசைகள். இரு இளைய சகோதரிகளுக்கு, இரண்டு இரண்டு தோசைகள். ஜெயந்தியின் இரு தோசைகளில் ஒன்றை பிடுங்கி தின்று விடுவாள். ஜெயந்தி பருவம் அடைந்தபோது, வேறு மாதிரி இழிவுபடுத்த ஆரம்பித்தாள், காயத்ரி.

'அம்மா... ஸ்கூலுக்கு போற வழியில, ஒரு பொறுக்கியை பார்த்து இளிக்கிறாம்மா, ஜெயந்தி...'

ஆயிரம் மறுத்தாலும், ஜெயந்தியை தான் அடிப்பாள், அம்மா.

'எங்கம்மா, மைசூர் சண்டல் சோப்பு போட்டு தான் குளிப்பா... அவ தலை துவட்டுற பூத்துவாலையை, யாரும் உபயோகிக்க கூடாது... அவ படுக்கை அறைல யாரும் படுக்கக் கூடாது... பெரிய மகாராணின்னு நினைப்பு அவளுக்கு...' என, பெற்ற தாயையும் விமர்சனம் பண்ண தயங்க மாட்டாள்.

பிளஸ் 2வில் தோல்வி அடைந்ததும், படிப்பு வரவில்லை என, நின்று விட்டாள், காயத்ரி.

ஜெயந்தி, கல்லுாரிக்கு போனபோது, 'இவ படிச்சு, பெரிய கலெக்ட்ரா வரவா போறா... எவனையாவது, 'லவ்' பண்ணி ஓடி போக காத்துகிட்டு இருக்கா...' என, 'கமென்ட்' அடிப்பாள்.

காயத்ரிக்கு திருமணம் ஆனது. திருமணத்துக்கு பிறகும் அவள் திருந்தவில்லை.

'என் புருஷனை யாரும் வளைச்சு போட்டுறாதிங்கடி...' என்பாள்.

ஜெயந்திக்கு திருமணம் ஏற்பாடானபோது, 'என்னை விட, தங்கைக்கு, 10 பவுன் நகை அதிகம் போடுகின்றனர். கூடுதல், 10 பவுனை கொடுக்காவிட்டால், தங்கையின் திருமணத்தை நடத்த விட மாட்டேன்...' என, ஊர் பெரியவர்களிடம் மனு கொடுத்தாள்.

பத்து பவுனை வாங்கியவுடன் தான், ஜெயந்தியின் திருமணத்தை நடத்த அனுமதித்தாள்; நான்கு சகோதரிகளும் குடும்பஸ்தர் ஆன பின், மூன்று சகோதரிகளுக்கிடையே நம்பும்விதமாய் கோள்மூட்டி, பெரும்பகையை தோற்றுவித்தாள்.

வீட்டு விசேஷங்களுக்கு வரும்போது, அற்பசொற்ப காரணங்களுக்காக, கோபித்து போய் விடுவாள். யாரை பார்த்தாலும், முதல் ஐந்து நிமிடம் பாசமழையை பொழிவாள். பின், அவளை அறியாமல் பொறாமை கொப்பளிக்கும்; அமில வார்த்தைகளை அள்ளி வீசுவாள்.

சொந்த பந்தங்கள், அவளை கண்டதும், குசலம் விசாரிப்பது போல நடித்தாலும், அயர்ந்த நேரத்தில் ஓடி விடுவர்.

ஜெயந்திக்கும், தங்கை மங்கைக்கும், சொத்து வாங்கும் விஷயத்தில் மனஸ்தாபம் ஏற்பட்டது. அதை பயன்படுத்தி, மங்கையுடன் கூட்டணி அமைத்தாள், காயத்ரி. இருவரும் சேர்ந்து, ஜெயந்தியை துாற்றி மகிழ்ந்தனர்.

ஜெயந்தியின் மகனை தனியாக அழைத்து, 'உங்கம்மா, ஒரு ராங்கிகாரி... உனக்கு நல்ல பொண்ணா பாத்து நான் கட்டறேன்...' என, பெற்ற தாயை பற்றி, மகனிடமே அவதுாறு பேசினாள்.

'பெரியம்மா... உங்களை பற்றி, எனக்கு நல்லா தெரியும்... எங்க அம்மாவை பற்றி அவதுாறா ஒரு வார்த்தை பேசுனீங்க, நடக்கறதே வேற... அம்மா, ஒரு கழுதையை பார்த்து கட்டிக்கடான்னு சொன்னாலும், மறு பேச்சு பேசாம கட்டிப்பேன்... திருந்த மாட்டீங்களா... அடுத்த தலைமுறைக்கும் நஞ்சை கலக்க துணிஞ்சிட்டீங்களா...' என, கோபித்தான், ஜெயந்தியின் மகன்.

விடியற்காலை.

ஜெயந்தியும், அவள் கணவனும் மதுரை வந்து சேர்ந்தனர்.

ஐ.சி.யூ.,வில் இருந்தாள், காயத்ரி. நெற்றியில் பிளாஸ்திரி ஒட்டிய நிலையில், வராண்டாவில் நின்றிருந்தான், அவளது கணவன். அவரிடம், விபத்து நடந்த விதம், காயத்ரியின் உடல்நலம் குறித்து ஜெயந்தியும், அவள் கணவனும் விசாரித்தனர்.

அக்காவை பார்த்தவுடன், ''உயிர் ஆபத்திலிருந்து தப்பிச்சுட்ட அக்கா... இனியாவது, உன் கெட்ட குணங்களை கை விடுக்கா... இது, உன் மறு ஜென்மமா இருக்கட்டும்... ஒரு முறைதான் பிறக்கிறோம்... அக்கா - தங்கச்சி உறவு, அடுத்த பிறவியில தொடருமான்னு யாராலும் சொல்ல முடியாது...

''ஒருவர் நலனில் ஒருவர் அக்கறை கொண்டு, அன்பை விதைப்போம்... நீ, எனக்கு செஞ்சதெல்லாம் சுத்தமா மறந்துட்டேன்... பூரண நலம்பெற, இறைவனை பிரார்த்திக்கிறேன்,'' என்றாள், ஜெயந்தி.

கண்களிலிருந்து தாரை தாரையாய் கண்ணீர் பெருக்கெடுத்தோடியது. தங்கையின் பேச்சுக்கு, மெலிதாய் தலை அசைத்தாள், காயத்ரி.

வெளியே வந்ததும், ''இந்த விபத்து, இறைவன் கொடுத்த தண்டனை... உன் பேச்சை, அக்கா கண்ணீர் மல்க கேட்டதை பார்த்தா, அவ திருந்திட்டான்னு நினைக்கிறேன்,'' என்றார், ஜெயந்தியின் கணவர்.

வெறுமையாக சிரித்த ஜெயந்தி, ''இது என்ன சினிமாவா, டிராமாவா... ஒரு கேரக்டர், 10 நிமிஷம் அறிவுரை, வசனம் பேசியதுமே, எதிர் கேரக்டர் திருந்த... இது, வாழ்க்கை. என் அக்கா காயத்ரி, ஒருநாளும் திருந்த மாட்டா... பிறக்கும்போதே, பரிசு பொதியாய் அவ வாங்கி வந்த கெட்ட குணங்கள், அவளை விட்டு ஒருபோதும் நீங்காது,'' என்றாள்.

'ஆக்சிஜன் மாஸ்க்'கை கழற்றிய, காயத்ரி, தன் கணவரிடம், ''நான் செத்துட்டேனா, உயிரோட இருக்கேனான்னு வேவு பார்க்க வந்திருக்கா, என் தங்கச்சி... என்னை குறை கூறலேன்னா, அவளுக்கு துாக்கமே வராது... ஆறுதல் சொல்ல வேண்டியவ, அறிவுரையை கொட்டிட்டு போயிருக்கா,'' என, மூச்சிரைத்தாள்.

அவரவர் பிறவிக்குணம், அவரவருக்கு.

துாரிகா ராணி






      Dinamalar
      Follow us