sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

கனவுகள் தந்தாய் எனக்கு!

/

கனவுகள் தந்தாய் எனக்கு!

கனவுகள் தந்தாய் எனக்கு!

கனவுகள் தந்தாய் எனக்கு!


PUBLISHED ON : ஏப் 28, 2013

Google News

PUBLISHED ON : ஏப் 28, 2013


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குடிசை படலை திறந்து உள்ளே நுழையும் போதே மீன் குழம்பின் வாசம் மூக்கைத் துளைத்தது. மூக்கை நன்றாக உள்ளுக்கு இழுத்து வாசத்தை அனுபவித்தபடி ஐந்தாம் வகுப்பு படிக்கும் ராஜா, புஸ்தகப் பையை மூலையில் வைத்துவிட்டு உள்ளே வந்தான்.

''ஆத்தா இன்னைக்கு நம்ப வீட்டிலே மீன் குழம்பு சோறா?''

குழம்பின் வாசம் அவனுள் பசியை தோற்றுவித்தது. ''ஆமாண்டா ராஜா. உங்கப்பனுக்கு மனசு வந்து, காலையில் வேலைக்குப் போகும்போது, இருநூறு ரூபா கொடுத்து, 'நல்ல மீனாக வாங்கி ராத்திரிக்கு சாப்பாட்டுக்கு குழம்பு வை.நம்ப ராஜாவுக்கு மீனுன்னா உசுரு. நானும் சீக்கிரம் வந்துடறேன். எல்லாரும் ஒண்ணா உட்கார்ந்து சாப்பிடுவோம்'ன்னு சொல்லிட்டு போனாரு.

'அப்பாருக்குத்தான் என் மேலே எவ்வளவு ஆசை...' என்று நினைத்தவனாக, சரி ஆத்தா நான் வீட்டுப் பாடம் எல்லாம் சீக்கிரம் செய்யறேன். அப்பா வந்ததும் சாப்பிடுவோம்.''

ராஜா படிக்க உட்கார்ந்தான்.

''நீ படிப்பா... உலையில் அரிசி கிடக்கு. அரை மணி நேரத்தில் சோறு வெந்துடும். அப்பாரும் வந்துடுவாரு... சேர்ந்து சாப்பிடலாம்,'' என்றாள் வள்ளி.

வீட்டுப் பாடத்தை முடித்தவன், அப்பா வருகிறாரா என்று தெருவைப் பார்த்தபடி நின்றான். பெயின்ட்டர் வேலை பார்க்கும் வேலனின் ஒரே மகன் ராஜா. கல்யாணம் முடிந்து ஐந்து வருடங்கள் கழித்து பிறந்தவன் என்பதால், அவன் மீது உயிரையே வைத்திருந்தான் வேலன்.

மகனுக்கு செய்ய கணக்கு பார்க்க மாட்டான். வள்ளி அவனிடம் அடிக்கடி சொல்வாள்...

'உன் மகனுக்குன்னு கேட்டா... உன் கை முழம் நீளுது. எனக்கு ஏதாவது வாங்கணும்ன்னு சொன்னா... மடங்கின கை நீள மாட்டேங்குது...'

'என் மவன் பேருக்கு ஏத்த மாதிரி ராஜா தெரியுமா. நாளைக்கு நம்மை வச்சு காப்பாத்தப் போற மகராசன். அவனுக்கு செய்ய கணக்கு பார்க்கலாமா?' என்பான் வேலன்.

'அதுசரி நீ குடிக்கிறதை நிறுத்தினா இன்னும் உன் மகனை ராஜா மாதிரி வளர்க்கலாம். இப்படி செலவுக்கு கஷ்டப்பட வேண்டாம்

இல்லையா?'

'ஏய் சும்மா நிறுத்துடி. என்னால குடிக்காம இருக்க முடியாது. தண்ணி போட்டாலும் சோறுபோட்டு, நல்லபடியாதானே வச்சிருக்கேன். போய் வேலையைப் பாரு!'

'உலகமே இடிஞ்சு தலையில் விழுந்தாலும் நீ தண்ணி போடறதை நிறுத்த மாட்டே... எப்படியோ போ. என் பிள்ளை நல்லபடியா படிச்சு முன்னுக்கு வந்தா போதும்!'

''என்ன ஆத்தா இன்னும் அப்பாவைக் காணும்!''

''தெரியலையே ராஜா. சீக்கிரம் வரேன்னு சொல்லிட்டுப் போனாரு. ஒரு வேளை கள்ளுக்கடைக்கு போயிட்டாரா... பாவி மனுஷன். குடிப்பதை மட்டும் நிறுத்த மாட்டாரு. அதுதான் அவருக்கு சந்தோஷம். பிள்ளை இங்கே பசியோடு காத்திட்டிருக்கு,'' என்று புலம்பினாள் வள்ளி.

''நீ வேணுமினா சாப்பிடறியா ராஜா... பசிக்குதா?''

''இருக்கட்டும் ஆத்தா. அப்பா வந்ததும் சேர்ந்து சாப்பிடுவோம்.''

திரும்பவும் தெருவைப் பார்த்தவன்,

''ஆத்தா நான் போய் அப்பாவைக் கூட்டிட்டு வரவா?''

''எங்கேன்னு போய் கூட்டிட்டு வருவே?''

''எனக்கு தெரியும் ஆத்தா. வாட்டர் டேங்க் பக்கத்திலிருக்கிற எட்டாம் நம்பர் கடைக்கு தான் அப்பா போவாரு. நான் போய் கூட்டிட்டு வரேன்.''

''வேணாம் ராஜா... நீ அங்கெல்லாம் போக வேண்டாம்.''

''இல்லை ஆத்தா. நான் போறேன்.''

காலில் செருப்பை மாட்டிக்கொண்டு வேகமாக நடந்தான்.

கடை வாசலில் தலையில் கைவைத்து அமர்ந்திருந்த, வேலனைப் பார்த்தான்.

''அப்பா வாப்பா. வீட்டுக்குப் போகலாம்.''

மகனின் குரல் கேட்டு நிமிர்ந்து பார்த்தான் வேலன்.

''நீ இவரோட மகனா... நல்ல வேளை வந்தே... இன்னைக்கு கொஞ்சம் ஓவராகப் போட்டுட்டாரு. தடுமாற்றம் ஜாஸ்தியாயிடுச்சு. கையைப் பிடிச்சு ஜாக்கிரதையாக அழைச்சுட்டுப் போ.''

அங்கிருந்த ஊழியர் சொல்ல, வேலனின் கைப்பிடித்து தெருவில் ஓரமாக அழைத்து வந்தான். கால்கள் பின்ன, தடுமாறியபடி நடந்து வந்தான் வேலன்.

''ஸ்கூலுக்கு போய்ட்டு வந்தியா ராஜா,'' என்று, விசாரித்தான் வேலன்.

''ம்... அப்பவே வந்துட்டேன்பா. இன்னைக்கு கணக்கு பரீட்சையில் நூறு மார்க் வாங்கினேன். எங்க டீச்சர் நீ நல்லா படிக்கிறேன்னு சொல்லி பாராட்டினாங்கப்பா.''

''அப்படியா... என் மகன் பெரிய படிப்பாளி. என்னை மாதிரி முட்டாள் இல்லை.''

''அப்பா... அப்பா...''

''என்ன ராஜா?''

தடுமாறி விழப் போனவனை, ''பார்த்துப்பா...'' தன் பிஞ்சு விரல்களால் அப்பாவின் கையை இறுகப் பிடித்துக் கொண்டான் ராஜா.

''நான் படிச்சு நல்ல வேலைக்குப் போய், நிறைய சம்பாதிப்பேன். அப்ப நீ இப்படி குடிச்சுட்டு நடந்து வந்து, தடுமாற வேண்டாம். இதோ ரோட்டில் போகுதே அது மாதிரி கார் வாங்கி, அதிலே உன்னை உட்கார வச்சு, பத்திரமாக வீட்டுக்கு அழைச்சுட்டு போவேன். நீ கடையில் குடிச்சுட்டு அங்கேயே இரு. நான் தினமும் காரில் வந்து கூட்டிட்டு போறேன்.

''உனக்கு குடிச்சா தான் சந்தோஷம் கிடைக்கும்ன்னு ஆத்தா சொல்லிச்சு. நீ சந்தோஷமாக இருக்கணும்பா... நான் உன்னை சந்தோஷமா வச்சுப்பேன்.''

ராஜாவின் பேச்சு, பொட்டில் அடித்தாற்போல வேலனை, பொறி கலங்க வைத்தது. தலைக்கேறிய போதை ஒரு நிமிடத்தில் தணிந்தது போலிருந்தது.

''என்னப்பா சொன்னே... குடிச்சுட்டு கடையில் இருக்கிற என்னை... காரு வச்சு கூட்டி போவேன்னு சொன்னியா... வேண்டாம்டா... இனி, இந்த அப்பன் குடிக்கவே மாட்டேன். இனி என் சந்தோஷமெல்லாம், உன்னை வளர்த்து ஆளாக்கிறதில் தான் இருக்கு.''

சொன்னவன் தெருவோரத்தில் இருந்த குழாயடியில், தண்ணீர் பிடித்து முகத்தை கழுவிக் கொண்டான்.

போதை சுத்தமாகத் தெளிய,''வாப்பா வீட்டுக்குப் போகலாம். ஆத்தா சுடு சோறும், மீன் குழம்பும் வச்சிட்டு காத்துக்கிட்டு இருக்கும்.''

மகனின் கையைப் பிடித்தபடி, பத்திரமாக வீடு நோக்கி நடந்தான் வேலன்.

***

பி. பிரவிணா






      Dinamalar
      Follow us