
பி.எஸ்.சி., கணிதம் முதலாமாண்டு படிக்கிறேன். ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவன். பட்டப்படிப்பு முடித்தவுடன் போட்டித்தேர்வுகளை எழுதி வேலையில் சேரவேண்டும் என தந்தை வலியுறுத்துகிறார். நான் மேற்படிப்பு படிக்க விரும்புகிறேன். என்ன செய்யலாம்?
- சுந்தரேசன், கோவை
உங்களைப் போலவே பல இளைஞர்கள் உள்ளனர். சுமாரான பொருளாதார சூழலை கொண்டுள்ள குடும்பத்தில் உங்களது தந்தையைப் போன்றே பலரும் யோசிக்க முடியும். தற்போதைய நிலையில் எந்த ஒரு வேலைக்கும் பட்டப் படிப்பே அடிப்படைத் தேவையாக உள்ளது. எனவே தற்போதைய படிப்பை முடிப்பது அவசியம்.
எனினும் எஸ்.எஸ்.சி., டி.இ.ஓ., போன்ற ஒன்றிரண்டு போட்டித் தேர்வுகளுக்கு நீங்கள் இப்போதே விண்ணப்பிக்க முடியும். அப்படியே வேலை கிடைக்காவிட்டாலும் உங்களது அன்றாட பயிற்சி என்பது படிப்பு முடிந்தவுடன் போட்டித் தேர்வுகளை எதிர்கொள்வதில் மிக உதவும். நீங்கள் அடிப்படை கிளார்க் பணிகளுக்குப் போட்டி போட சந்திக்க இருப்பது 90 சதவீத இன்ஜினியரிங் பட்டதாரிகளோடு தான். எனவே உங்களது தந்தையின் விருப்பம் என்பது நிறைய சிந்தனையின் அடிப்படையில் தான் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
உங்களுக்கு விருப்பம் என்பது மேலே படிப்பது தான் அல்லவா? ஆனால் என்ன படிக்கப் போகிறீர்கள்? எம்.பி.ஏ., வா? அல்லது எம்.எஸ்சி., கணிதமா? இதை முடித்த பின் என்ன செய்யப் போகிறீர்கள்? இதே போட்டி தேர்வுகளை பட்டமேற்படிப்புக்குப் பின் எழுதுவது என்றால், எவ்வளவு காலம் மற்றும் பணம் விரயம்? ஒருபுறம் குடும்பச் சூழலால் படிக்க முடியாது. மறுபுறம் மேலே படித்தால் என்ன என்ற சுய சிந்தனை. உங்களைப் போல இளைஞர்கள் இருப்பதை தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள். பட்டப் படிப்பு முடித்தபின் வேலையில் சேர்ந்தால் தொலைதூரக் கல்வியில் படிக்கும் வாய்ப்பு உள்ளது.
சென்னையில் உள்ள கல்லூரியில் பொருளாதார பட்ட மேற்படிப்பு படிக்கிறேன். இதை முடித்தால் என்ன சம்பளம் பெறலாம்?
- கணபதி, திண்டுக்கல்
ஒரு படிப்பைப் படிப்பதால் மட்டுமே வேலை கிடைக்கும் கால கட்டத்தில் நாம் இல்லை. சில படிப்புகளைத் தவிர இதற்கான வாய்ப்பு குறைவு. உங்களது படிப்பு இவற்றில் இல்லை என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். சில தனியார் கல்வி நிறுவனங்களில் படிக்கும் பொருளாதார மாணவர்களுக்கு கேம்பஸ் வேலை முறையில் மாதம் 50 ஆயிரம் வரை சம்பளம் தரும் வேலைகள் கிடைக்கின்றன. ஆனால் சென்னையில் நீங்கள் படிக்கும் கல்லூரியில் இது போன்ற வளாக தேர்வுகள் பொதுவாக நடத்தப்படுவதில்லை. வேலையும் கிடைப்பதில்லை.
எனவே உங்களது பாட அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள். சிறப்பாக மென்திறன்களையும் வளர்த்துக் கொள்ளுங்கள். நல்ல சம்பளம் பெரும் வாய்ப்பை நீங்கள் இவ்வாறே பெறலாம்.

