PUBLISHED ON : ஏப் 01, 2026

'ஆயிரம் காய்ச்சி' தென்னை சாகுபடி குறித்து, செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி பகுதியைச் சேர்ந்த விவசாயி பி.கிருஷ்ணன் கூறியதாவது:
நம்மூர் கோடை வெயில் மற்றும் மழைக்கு ஏற்றவாறு, குளிர் மற்றும் வறட்சியான பிரதேசங்களில் விளையும், பல வித பழ மரக்கன்றுகள் சாகுபடி செய்யலாம். அந்த வரிசையில், ஆயிரம் காய்ச்சி தென்னை சாகுபடி செய்யலாம். நல்ல மண் வளம் இருக்கக்கூடிய நிலத்தை தேர்வு செய்து, 20 அடிக்கு ஒரு மரம் என, இடைவெளி விட்டு நட வேண்டும்.
தண்ணீர் தேங்கும் நிலம் மற்றும் களர் உவர் நிலங்களில், எந்த ஒரு தென்னை ரகங்களையும் தேர்வு செய்து, மரங்கள் சாகுபடி செய்யக்கூடாது.
இந்த, ஆயிரம் காய்ச்சி தென்னை மரம் நான்கு ஆண்டுகளில் விளைச்சலுக்கு வரும். அழகு செடியாகவும், இளநீர், தேங்காய் ஆகிய விளைச்சலுக்கும் விளைவிக்கலாம். ஆயிரம் காய்ச்சி இளநீர் சிறிதளவில் இருந்தாலும், கைக்கு அடக்கமாக இருக்கும். தேங்காயாக முதிர்வடையும் போது, பருப்பின் தன்மை திடமாக இருக்கும். ஆண்டு முழுதும் மகசூல் கொடுக்கும்.
குறிப்பாக, 4 - 50 ஆண்டுகள் வரையில் மகசூல் கொடுக்கும். பிற ரக தென்னை மரத்தில், ஆண்டிற்கு 250 காய்கள் மகசூல் கொடுப்பது கடினம். இந்த ஆயிரம் காய்ச்சி தென்னை மரத்தில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட காய்கள் காய்க்கும் தன்மை உடையது.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்புக்கு - பி.கிருஷ்ணன், 93846 67714.
