PUBLISHED ON : டிச 11, 2024

காய்கறி உற்பத்தியில் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது. தேசிய தோட்டக்கலை வாரிய புள்ளி விவரப் படி 10 மில்லியன் எக்டேர் நிலப்பரப்பில் காய்கறி சாகுபடி செய்யப்படுகிறது. விதைகளை விதைக்கும் போது சரியான தொழில்நுட்பத்தை கடைபிடித்தால் மகசூல் அதிகரிக்கும்.
விதைநேர்த்தி முறைகள்
காய்கறி விதைகளை 10 சதவீத மாட்டுக் கோமியத்தில் (100 மில்லி கோமியம், 900 மில்லி தண்ணீர்) ஊற வைத்து ஒரு மணி நேரம் கழித்து விதைத்தால் விதைகளின் முளைப்புத்திறன் கூடும். விதைகள் மூலம் பரவும் நோய்கள் கட்டுப்படும். ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் டிரைக்கோடெர்மா விரிடி அல்லது 10 கிராம் சூடோமோனாஸ் கலந்து 24 மணி நேரம் கழித்து விதைத்தால் விதைகளின் மூலம் பரவும் நோய்கள் கட்டுப்படும். சுரை, பீர்க்கு, புடலை, பாகல், பூசணி கொடி வகை விதைகளை 24 மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்தபின் விதைத்தால் விரைவில் முளைக்கும்.
நாற்றங்கால் பராமரிப்பு
கத்தரி, தக்காளி, மிளகாய் பயிர்களுக்கு உயர் பாத்தி நாற்றங்கால் அவசியம். பாசன, வடிகால் வசதி மரத்தடி அல்லது நிழல் வலை தேவை. நிலப்பரப்பிலிருந்து 15 முதல் 20 செ.மீ உயரம், ஒரு மீட்டர் அகலத்தில் பாத்தி அமைக்க வேண்டும். பாத்தியின் மேல் செம்மண், மணல், மட்கிய தொழு உரத்தை 2:1:1 என்ற விகித கலவை தயாரித்து 25 முதல் 35 நாள் வயதுடைய நாற்றுகளை நடவு செய்ய வேண்டும். ஒவ்வொரு செடிக்கும் இடையே போதுமான இடைவெளி இருந்தால்தான் பயிர் செழிப்பாக வளரும். களைகளும் பூச்சி நோய்த் தாக்குதலும் கட்டுப்படும்.
வெண்டைபயிரில் வரிசைக்கு வரிசை 45 செ.மீ., செடிக்கு செடி 30 செ.மீ., இடைவெளி தேவை. கத்தரி வீரிய ஒட்டு ரகத்தில் 60க்கு 90 செ.மீ., வரிசையும் 60க்கு 60 செ.மீ., செடிக்கு செடி இடைவெளி விடவேண்டும். மிளகாய் வீரிய ஒட்டு ரகத்தில் 60க்கு 75 செ.மீ., மற்றும் 45க்கு 60 செ.மீ., இடைவெளியும் தக்காளி வீரிய ஒட்டு ரகத்தில் 45க்கு 60 செ.மீ., மற்றும் 30க்கு 45 செ.மீ., இடைவெளி தேவை.
கொத்தவரையில் பயிர் வரிசை இடைவெளி 60 செ.மீ., வரிசை இடைவெளி 15 செ.மீ., இடைவெளி தேவை. கொடி வகைப் பயிர்களில் குழி அளவு 30க்கு 30க்கு 30 செ.மீ., நீள, அகல, ஆழத்தில் எடுக்க வேண்டும். குழிக்குக் குழி 2 மீட்டர் இடைவெளி விடவேண்டும்.
விதைகள் எவ்வளவு தேவை
தக்காளி ரகம் எனில் ஏக்கருக்கு 160 முதல் 200 கிராம், தக்காளி வீரிய ஒட்டு ரகத்திற்கு 60 முதல் 80 கிராம், கத்தரி 160 கிராம், கத்தரி வீரிய ஒட்டு 80 கிராம், மிளகாய் 200 கிராம், வீரிய ஒட்டு 80 முதல் 100 கிராம், வெண்டை 3.5 முதல் 4 கிலோ, தட்டைப்பயறு 10 கிலோ தேவைப்படும். விதைப்பதற்கு முன் விதைகளின் முளைப்புத்திறன் பரிசோதனை செய்ய வேண்டும். சரியான முளைப்புத்திறன் இருந்தால் மகசூல் பாதிக்கப்படாது. அந்தந்த மாவட்டங்களில் உள்ள அரசு விதைப் பரிசோதனை நிலையத்தில் கொடுத்து பரிசோதனை செய்யலாம்.
- மகாலெட்சுமி, விதைப்பரிசோதனை அலுவலர்,- லயோலா அன்புக்கரசி, வேளாண்மை அலுவலர், விதைப்பரிசோதனை நிலையம், சிவகங்கை.