/
இணைப்பு மலர்
/
விவசாய மலர்
/
எலுமிச்சை சாகுபடி ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வருமானம்
/
எலுமிச்சை சாகுபடி ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வருமானம்
PUBLISHED ON : ஜூலை 10, 2019

பழ வகைகளில் ஆண்டு முழுவதும் நல்ல காசு பார்க்க உதவும் எலுமிச்சை எல்லா இடத்திலும் வராது. குறிப்பாக களிமண், களர் மற்றும் உவர் நிலங்கள் உதவாது.
அதிலும் கோடையில் வெடிப்புகள் கொண்ட தரை பல களிமண் உள்ள இடங்களில் பாதிப்பு வரும். எலுமிச்சைக்கு நீர் தேங்கினால் வேர்கள் அழுகி விடும்.
எலுமிச்சைக்கு வளமான வடிகால் வசதி உடைய இரு மண்பாடு நிலமே உகந்தது. குளம், ஏரி போன்ற நீர் நிலை அருகில் உள்ள தாழ்வான பகுதியும் ஆகாது. பாறைப் படிவங்கள் மேலாக உள்ள நிலமும் ஏற்றதல்ல. மண் கார அமில தன்மை (பி.எச்.,) 5.6 முதல் 7.8 வரை இருக்கலாம்.
எலுமிச்சையில் 'பெரியகுளம் 1' ரகம் ஆண்டு முழுவதும் காய்க்கும். மரம் ஒன்றுக்கு ஆண்டுக்கு 1,500 பழங்கள் வட்டமாக, பெரியதாக, அதிக சாறு (52 சதவீதம்) கொண்டதாக உள்ளது.
ஒரு ஏக்கரில் 180 கன்றுகள் நட்டு பராமரித்து நான்காம் ஆண்டு முதல் நல்ல வரவாக ஒரு லட்சத்து 70 ஆயிரம் பழங்கள் தவறாமல் கிடைக்கும். ஒரு பழம் 3 ரூபாய்க்கு விற்றாலும் கூட சராசரியாக ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய் வருவாய் பெறலாம்.
இரண்டரை அடிக்கு குழிகள் 5.5 மீட்டர் இடைவெளியில் எடுத்து 15 நாட்கள் ஆறப்போட்டு மக்கிய மண்புழு உரம், செம்மண், மணல் மற்றும் வேப்பம் புண்ணாக்கு, அசோஸ்பைரில்லம், சூடாமோனாஸ், பாஸ்போ பேக்டீரியா இட்டு நடவு செய்திட குழிகள் எடுத்திட இதுவே தருணம்.
- டாக்டர். பா.இளங்கோவன்
வேளாண் துணை இயக்குனர்
தேனி.
98420 07125

