sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 19, 2025 ,கார்த்திகை 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

விவசாய மலர்

/

பால்மாடு வாங்குகிறீரா... இதோ சில குறிப்புகள்

/

பால்மாடு வாங்குகிறீரா... இதோ சில குறிப்புகள்

பால்மாடு வாங்குகிறீரா... இதோ சில குறிப்புகள்

பால்மாடு வாங்குகிறீரா... இதோ சில குறிப்புகள்


PUBLISHED ON : ஆக 24, 2011

Google News

PUBLISHED ON : ஆக 24, 2011


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

எந்த ஒரு கால்நடைப் பண்ணைத் தொழிலையும் ஆரம்பிக்கும் முன் முதலில் பண்ணை தொடங்கும் இடத்தினை நன்றாக ஆராய வேண்டும். பின்னர் இடத்திற்கு ஏற்ற இனத்தைத் தேர்வு செய்ய வேண்டும். அதுபோலவே பால் மாடு வாங்குவதற்கு முன் நம்முடைய மாவட்டம், தண்ணீர் பயன்பாடு, தீவனம் உற்பத்தி செய்யும் அளவு, பயிரிடல் போன்ற அனைத்து முக்கியமான குறிப்புகளையும் நன்றாக அலசி ஆராய்ந்து அதன் பின்னர் நம்முடைய பண்ணைக்கு ஏற்ற பசுமாட்டினை தேர்வுசெய்து வாங்க வேண்டும். பால் பண்ணை தொழிலுக்காக மாடு வாங்கும்போது வயதினை முக்கிய காரணியாக எடுத்துக்கொள்ள வேண்டும். இளவயதுடைய கன்றுகளை முடிந்தவரையில் தவிர்க்க வேண்டும். ஏனென்றால் பிற்காலத்தில் அவை வளர்ந்து முறையாக சினை பிடிக்குமா என்பது கேள்விக்குறி. அப்படியே சினைபிடித்தாலும் முறையாக கன்று ஈனுமா அல்லது ஈன்றபின் நாம் நினைத்த அளவிற்கு பால் கறக்குமா என்பதெல்லாம் நம்முடைய கையில் இல்லை. வயது முதிர்ந்த மாடுகளை வாங்கினால் பால்பண்ணைத் தொழிலுக்கு எந்தவகையிலும் பயன்படாது. இதுபோன்ற அனைத்து பிரச்னைகளும் வேண்டாம் எனில் ஒன்று அல்லது இரண்டு பெட்டை (கிடேரி) கன்றுகளை ஈன்ற, உடல் வளர்ச்சியில் தேர்ந்த மாட்டினை வாங்கினால் நிச்சயம் நம்முடைய பண்ணையில் பால் பொங்கும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.

அதுபோல் பால்மாட்டினை வாங்கும்பொழுது அதன் முழு உடல் அமைப்பையும் முக்கியமாக முகம், மார்பு, பின்புறத்தொடை, கால்கள், மடி மற்றும் காம்புகள் போன்றவற்றை நன்றாக ஆராய வேண்டும். முடிகள் பள பளப்பாகவும், வழுவழுப்பாகவும் எந்த ஒரு உண்ணிகளோ, பேன்களோ இல்லாதவாறு பார்த்து வாங்க வேண்டும். ஏனென்றால் நோய் பாதித்த பால் மாடுகளில் இதுபோன்ற பண்புகளை நாம் பார்க்க முடியாது. உதாரணத்திற்கு, கோமாரி நோயால் பாதிக்கப்பட்ட கறவை மாடுகளின் மேல்தோல் பளபளப்பு இழந்தும், முடிகள் சுருண்டும் அசிங்கமான தோற்றத்தை காண்பிக்கும். கண்களைப் பொறுத்தவரை அவை நல்ல பொலிவுடனும், மூக்கு அகன்று ஈரத்தன்மையுடனும் இருந்தால் அந்த மாட்டிற்கு பிரச்னை எதுவும் இல்லை என்பதை ஓரளவு தீர்மானித்துவிடலாம். நோய், காய்ச்சல் கண்ட மாட்டில் மூக்கிலிருந்து சளி ஒழுகும். மூக்கு காய்ந்த நிலையில் காணப்படும்.

முதுகுப்பகுதியானது நேராக ஒரே நேர்க்கோட்டில் இருப்பதுபோன்று காணப்பட வேண்டும். அவ்வாறு இல்லாமல் மேல்நோக்கி குவிந்தோ (திட்டு போன்று), கீழ்நோக்கி பள்ளம் விழுந்ததுபோன்றோ (கூன் விழல்) காணப்பட்டால் அந்த மாட்டினை வாங்காமல் தவிர்க்க வேண்டும். மாடுகளின் பின்னங்கால் நன்றாக அகன்று பால்மடி பின்னால் இருந்து பார்க்கும் பொழுது தெளிவாக தெரியுமாறு அமைய வேண்டும். மடியானது நன்றாக பெருத்து நான்கு மடிக்காம்புகளும் மென்மையாகவும், மிருதுவாகவும், ஒரே அளவு உடையதாகவும், சீரான இடைவெளியில் அமைந்திருக்க வேண்டும். காம்புகள் எண்ணிக்கையில் குறைந்தோ, அதிகமான அளவில் காணப்பட்டாலோ அல்லது காம்புகளில் அடைப்புகள் காணப்பட்டாலோ அந்த மாட்டினை தவிர்க்க வேண்டும். மடிகளில் எந்த வகையான காயங்களோ, புண்களோ இருக்கக்கூடாது. மடியைத் தொட்டுப்பார்த்தால் மிருதுவாகவும், வழவழப்பாகவும் இருத்தல் நன்று. நோய் தாக்கம் கண்ட மாடுகளில் மடி வீங்கி, கல் போன்றும் வெதுவெதுப்பாகவும் காணப்படும்.

எனவே, மேற்சொன்ன அறிகுறியுடைய, மாட்டினங்களை கறவை மாட்டு பண்ணைக்கு வாங்குதல் கூடாது. மாறாக நன்றாக பெருத்த பால் நரம்புடைய மாடுகள் வாங்குதல் வேண்டும். முடிந்தால் முந்தைய கறந்த பாலின் அளவு, குட்டி ஈன்ற வரலாறு, நோய்கள் ஆகியன பற்றி நன்றாக விசாரித்தபின் மாடுகளை தேர்வு செய்யலாம். நமக்கு சந்தேகம் வருமாயின், மாட்டின் பாலை கறந்து பார்த்தபின்னர் பசு மாட்டினை வாங்க வேண்டும். மேற்கூறிய ஒவ்வொன்றையும் முறையாக பின்பற்றுவோமானால் 'பால் பண்ணைக்கு நான்தான் ராஜா' என்ற வீரநடையோடு ஒவ்வொரு பால் பண்ணையாளரும் வாழலாம்.

ரா.தங்கத்துரை,
வெ.பழனிச்சாமி மற்றும்
வீ.தவசியப்பன்,
வேளாண் அறிவியல் நிலையம்,
குன்றக்குடி-630 206.






      Dinamalar
      Follow us