PUBLISHED ON : டிச 18, 2013

நீர்நிலைகளில் மிதவை தாவரமாக வளரும் பெரணி வகையைச் சேர்ந்தது, 'அசோலா'. இலைகளில் ஒட்டி வளரும். 'அனபீனா' என்ற நீலபச்சை பாசி உதவியுடன், காற்று மண்டலத்தில் உள்ள தழைச்சத்தை உட்கிரகித்து, வளரும் தன்மையுடையது. நெற்பயிருக்கு சிறந்த உரமாகும். கால்நடைகள், கோழிகளுக்கு சிறந்த புரதச்சத்தாக இருப்பதால், தீவனச்செலவை கணிசமான அளவு குறைக்கும்.
இதில் 25 - 27 சதவீத புரதச்சத்து, 15 சதவீத நார்ச்சத்து, 3 சதவீத கொழுப்புச்சத்து, 45- 50 சதவீத மாவுச்சத்து மற்றும் தாதுஉப்புகள் உள்ளன. தாவர இலைகளில் காணப்படும் 'டானின்' என்ற நச்சு, அசோலாவில் மிககுறைவாக இருப்பதால், மரபுசாரா தீவனப்பயிராக விளங்குகிறது.
ஒரு எக்டேர் நிலப்பரப்பில் எளியமுறையில், ஓராண்டில் 70 - 80 டன் உலர்தீவனத்தை உற்பத்தி செய்யலாம். இவற்றை பசுமையாகவோ, உலர்த்தியோ கொடுக்கலாம். ஒருகிலோவுக்கு 50 காசு என்ற அளவில் உற்பத்திச் செலவு இருக்கும்.
அசோலாவை, தொட்டிகளிலும், 'சில்பாலின்' பைகளிலும் வளர்க்கலாம். இரண்டு மீட்டர் சதுர சிமென்ட் தொட்டிகளில் 10செ.மீ., அளவு நீர்நிரப்பி, 10 கிராம் சூப்பர் பாஸ்பேட், 20 கிராம் பசுஞ்சாணம் கலந்து, 400 கிராம் அசோலாவை தொட்டியில் இடவேண்டும். இரண்டு வாரத்திற்குள், இரண்டு முதல் மூன்று கிலோ வரை, மகசூல் கிடைக்கும்.
நிழற்பாங்கான இடத்தில் பத்தடி நீளம், இரண்டு அடி ஆழ, அகலத்தில் பாத்தி அமைக்கவும். பாத்தியின் அடித்தளத்தில் சில்பாலின் காகிதத்தை விரித்து, 2 செ.மீ., அளவிற்கு மண் இட்டு, 2 செ.மீ., அளவு தண்ணீர் ஊற்றவும். இதில் 100 கிராம் சூப்பர் பாஸ்பேட், 5 கிலோ பசுஞ்சாணம் கலந்து, அசோலா தாய் வித்து இரண்டு முதல் இரண்டரை கிலோ இட வேண்டும். தினம் காலை அல்லது மாலையில் பாத்தியில் உள்ள மண்ணை நன்கு கலக்கி விட்டால், மண்ணில் உள்ள சத்துக்கள் தண்ணீரில் கரைந்து, 15 நாட்களில், பாத்தியில் 30 முதல் 50 கிலோ அசோலா தயாராகி விடும்.
மூன்றில் ஒருபங்கை பாத்தியிலேயே விட்டு, மீதத்தை அறுவடை செய்யலாம். பத்து நாட்களுக்கு ஒருமுறை 5 கிலோ பசுஞ்சாணம் கரைப்பது நல்லது. பூச்சிதொல்லை வந்தால், ஒரு லிட்டர் தண்ணீரில் 5 மில்லி வேப்பெண்ணெய் கலந்து பாத்தியில் தெளிக்க வேண்டும்.
நெல்வயலில் நாற்று நட்ட ஒரு வாரத்தில், அசோலா தாய் வித்துக்களை தூவினால், நெல்லோடு கூடவே வளர்ந்து, மண்ணில் உள்ள நைட்ரஜனை நிலைநிறுத்தும். மண்ணோடு மட்கி, இயற்கை உரமாகவும் மாறும்.
மதுரை விவசாயக் கல்லூரியில் ஒரு கிலோ அசோலா ரூ.5க்கு கிடைக்கிறது. இதையே தாய் வித்தாக, விதைக்கலாம்.
கோபால், துறைத் தலைவர்,
ஜெபர்லின் பிரபினா, மெரினா பிரேம் குமாரி,
உதவி பேராசிரியைகள்,
மதுரை.
போன்:0452 - 242 2956.

