/
இணைப்பு மலர்
/
விவசாய மலர்
/
பாப்பாபட்டியில் 'பாலிஹவுஸ்' விவசாயம்
/
பாப்பாபட்டியில் 'பாலிஹவுஸ்' விவசாயம்
PUBLISHED ON : மே 08, 2019

மழை பற்றாக்குறையால் விவசாயப்பணிகள் கடும் பாதிப்படைந்து வரும் பகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி உள்ளது.
நவீன தொழில் நுட்பங்களை பயன்படுத்தி உசிலம்பட்டி பகுதியில் விவசாயத்தை லாபகரமான தொழிலாக மாற்றும் முயற்சியில் இறங்கி உள்ளார், பாப்பாபட்டி கிராமத்தைச் சேர்ந்த நான்சி. எம்.இ., படித்து விட்டு கணவருடன் வெளிநாட்டில் வசித்தவர், பேராசிரியராக பணிபுரிந்தவர், அனைத்தையும் ஒதுக்கி வைத்து விட்டு நவீன தொழில் நுட்பங்களுடன் விவசாயப்பணிகளில் ஈடுபட்டு லாபம் பார்த்து வருகிறார்.
பாப்பாபட்டி அருகே வெள்ளைக்காரப்பட்டியில் பாலிஹவுஸ் (பசுமைக்குடில்) அமைத்து வெள்ளரி விவசாயம் பார்க்கும் நான்சி கூறியதாவது:
கணவர் அசோக்கும் இன்ஜினியரிங் படித்துள்ளார். குழந்தைகளுடன் பிரான்சில் வேலை பார்த்து வந்தோம். அங்கு சூப்பர் மார்க்கட் செல்லும் போது ஈரோப்பியன் வெள்ளரி வாங்கினால் இது இந்தியாவில் இருந்து வந்தது என்று கூறுவார்கள்.
நம்ம ஊர்ல இதெல்லாம் விளையுதா என்ற கேள்வி எழும். ஒரு கட்டத்தில் இந்தியாவிற்கு திரும்பிவிட்டோம். கிராமத்தில் உள்ள நிலத்தில் விவசாயம் செய்யலாம் என முடிவு செய்தோம். இருவரும் பணியில் இருந்ததால் யார் விவசாய பணிகளை பராமரிப்பது என்ற கேள்வி எழுந்தது. கணவரது பணி பெங்களூரில் தொடர்ந்ததால் இடையில் விட்டு வரமுடியாத சூழலில், வார நாட்களில் நானும், விடுமுறை தினங்களில் கணவரும் வந்து பார்த்துக்கொள்ளலாம் என முடிவு செய்தோம். பாலிஹவுஸ் குறித்து ஓசூர் பகுதிகளில் பல பண்ணைகளை பார்வையிட்டோம். லாபம் இருக்கிறது என்றாலும் கவனிப்பு முக்கியம். இன்குபேட்டரில் குழந்தையை பராமரிப்பது போல கவனிக்க வேண்டும் என்றனர்.
பாப்பாபட்டியில் பாலிஹவுஸ் அமைத்து விவசாயம் செய்யலாம் என சென்றபோது, கிராமத்தினர்கள் மழை தண்ணி பெய்யல என்று அதிருப்தி தெரிவித்தனர். ஆனாலும் பக்கத்து தோட்டத்தில் உள்ள விவசாயிகள் தேவையான உதவிகள் செய்து எங்களது முயற்சிக்கு துணையாக இருந்தனர்.
ஒருவழியாக எங்கள் தோட்டத்தில், 4000 ச.மீ., பரப்பில் பாலிஹவுஸ் அமைக்க முடிவு செய்தோம். சுமார் 40 லட்சம் வரையில் செலவானது. தோட்டக்கலைத்துறையின் மூலம் 50 சதவீதம் மானியம் தருகின்றனர். ஈரோப்பியன் வெள்ளரி பயிரிட முடிவு செய்தோம். குறிப்பிட்ட இடைவெளியில் மூன்று முறை பசுமைக்குடிலுக்குள் உழவு செய்து கரைகள் அமைத்து தேவையான அடியுரம் போட்டு நிலத்தை தயார் செய்ய வேண்டும். பசுமைக்குடிலுக்குள் மகரந்தச் சேர்க்கை நடக்க வாய்ப்பில்லாததால், விதைகளில் அதற்கான மாற்றத்தை புகுத்தி தருகின்றனர். ஒரு விதை எட்டு ரூபாய். 99 சதவீதம் முளைப்புத்திறன் கொண்டவை. நட்ட மூன்றாவது நாளில் முளைப்பு விடும். தேவையான அளவு தண்ணீர், உரம் கொடுத்து பராமரிக்க வேண்டும்.
அறுவடைக்கு மூன்று பருவங்கள் உள்ளன. 50 முதல் 65 , 90முதல்110, 120முதல்130 நாட்களில் அறுவடை ஒருநாள் விட்டு ஒருநாள் வரும்.
விதை, உழவு, பராமரிப்பு, உரம் என சுமார் ஏழு லட்சரூபாய் வரையில் செலவாகும். அறுவடையின் போது 60 முதல் 80 டன் வரையில் வெள்ளரி கிடைக்கும்.
கிலோ 15 முதல் 30 வரை விலை போகிறது. சராசரியாக 20 ரூபாய் விலை கிடைத்தால் செலவு போக ஐந்து முதல் ஏழு லட்சம் வரையில் லாபம் கிடைக்கும்.
விதைகள் அதிகமான விலை என்பதால் நடும் போது கவனமாக இருக்க வேண்டும். விதைகளை எறும்பு, எலி சாப்பிட்டு விடும். செடி முளைக்க துவங்கியதும் வெட்டுக்கிளி வந்து முளைத்த பகுதியை தின்று விடும். இது போல பிரச்சனை வரும். அடுத்தடுத்து பயிரிடும் போது இந்த பிரச்சனை எப்போது வரும், அதனை எப்படி சமாளிப்பது என பழக்கமாகிவிடும். தற்போது கப்களில் விதைகளை நட்டு ஒன்பது நாள் நர்சரியாக பராமரித்து நடுகிறோம்.
உரச்செலவை குறைக்கவும் மாற்று ஏற்பாடுகள் செய்து வருகிறோம். செயற்கை உரங்களை வாங்கி அவற்றை நொதிக்கச்செய்து இயற்கை உரமாக மாற்றி, தண்ணீர் பாய்ச்சும் சொட்டு நீர் குழாய்கள் வழியாக செலுத்தும் முறையில் தற்போது கவனம் செலுத்துகிறோம். இதனால் அதிகப்படியான உரத்தை மண்ணுக்கு வழங்குவது கட்டுப்பட்டு செடிகளுக்கு தேவையான உரம், தேவையான தண்ணீர் மட்டும் கொடுக்கும் முறைக்கு பழகி வருகிறோம்.
பசுமைக்குடிலில் மகரந்தச் சேர்க்கை இல்லாததால் பார்த்தினேகார்பி (சூல் பிடிக்கும் இயல்பை விதைகளுக்குள் செலுத்தப்பட்ட விதைகள்) விதைகள் பயன்படுத்த வேண்டும். பூக்கள், நீளமிளகாய், தக்காளி போன்றவையும் பயிரிடலாம். அடுத்த கட்டமாக மேலும் 2000 சதுர மீட்டரில் பசுமைக்குடில் அமைக்கும் பணி துவக்கியுள்ளோம் என்றார்.
மேலும் அறிய 77609 98755 ல் தொடர்பு கொள்ளலாம்.
-ப.மதிவாணன்

