/
இணைப்பு மலர்
/
விவசாய மலர்
/
வாழை திசு வளர்ப்பும் கோடைகால பராமரிப்பும்
/
வாழை திசு வளர்ப்பும் கோடைகால பராமரிப்பும்
PUBLISHED ON : ஏப் 23, 2025

தாய் வாழை மரம் தனது வாழ்நாளில் அதிகபட்சமாக 10 முதல் 15 வரை பக்கக்கன்றுகளை உற்பத்தி செய்யும். ஆனால் திசு வளர்ப்பு முறையில் 500 முதல் 800 வரையிலான கன்றுகளை ஒரு கன்றிலிருந்து உற்பத்தி செய்ய முடியும். இந்த திசு வளர்ப்பு கன்றுகள் தரச் சான்றிதழ் பெறப்பட்டு உருவாக்கப்படுவதால் நோய்க் காரணிகள் இல்லாமல் தரமான கன்றுகள் விவசாயிகளுக்கு கிடைக்கும்.
சீரான வளர்ச்சி சாத்தியம்
திசு வளர்ப்பு கன்றுகள் அனைத்தும் ஒரே சீரான வளர்ச்சி அடைவதால் அதிக மகசூலுடன் ஒரே நேரத்தில் அறுவடை செய்வது சுலபமாக உள்ளது. வாழை கட்டைகளைக் கொண்டு பயிரிடப்படும் வாழையை விட 20 முதல் 30 நாட்கள் முன்னதாக அறுவடைக்குத் தயாராகிறது.
குருத்து முனை மற்றும் இளம் ஆண் மலர் அரும்பு மூலம் இந்த திசு வளர்ப்பு வாழை உருவாக்கப்படுவதால் தரமான, ஊட்டச்சத்து நிறைந்த கன்றுகள் கிடைக்கிறது. திசு வளர்ப்பு வாழையின் முக்கியத்துவத்தை உணர்ந்து இந்தியாவின் பல மாவட்டங்களில் திசு வளர்ப்பு வாழைக் கன்றுகளை பரவலாகப் பயிரிடுகின்றனர்.
குறிப்பாக மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஜல்ஹான், யாவல் மாவட்டங்களில் 90 சதவீதம் வரை திசு வளர்ப்பு வாழைகள் மூலம் வாழை சாகுபடி நடைபெறுகிறது.
வெப்பம் தான் பிரச்னை
திசு வளர்ப்பு வாழையில் முக்கிய பிரச்னை என்பது கோடையில் வெப்பம் அதிகமாக இருப்பது. இந்த வெப்பத்தை தாங்க முடியாமல் பயிர்கள் வாடி வளர்ச்சி இல்லாமல் போய்விடும். திசு வளர்ப்பு கன்றுகளை வயலில் நடவு செய்ததில் இருந்து ஒன்று முதல் 2 மாதங்களில் அதிக சேதாரம் ஏற்படும்.
இதைத் தடுப்பதற்கு நடவு செய்யும் முன், உழுத இடத்தில் ஒன்றரை அடி நீள அகலம், ஓரடி ஆழத்தில் குழி எடுத்து மட்கிய குப்பையுடன் 1:1 என்ற விகிதத்தில் மண்புழு உரம் அல்லது தேங்காய் நார் துாள் சேர்த்து நிரப்ப வேண்டும். தேங்காய் நார் துாள் அல்லது நெல் உமி சாம்பலை மண்ணில் இடுவதால் நீர் உட்கொள்ளும் தன்மை அதிகரித்து வேர்களுக்குத் தேவையான நீர் கிடைக்கச் செய்து செடி நன்றாக வளரும்.
நிழல் தரும் சணப்பை
நடவு செய்வதற்கு முதல் நாள் நன்றாக நீர் பாய்ச்ச வேண்டும். வாழைக்கன்று நடுவதற்கு 20 நாட்களுக்கு முன்னரே கன்று நடும் இடத்தில் இருந்து ஒன்று முதல் ஒன்றரை அடி இடைவெளியில் 20 முதல் 30 சணப்பை விதைகளைத் தெளிக்க வேண்டும்.
ஒரு ஏக்கருக்கு 8 முதல் 10 கிலோ விதைகள் தேவைப்படும். இதற்கு அதிகபட்சம் ரூ.600 வரை செலவாகும். சணப்பை விதைகளை மேற்கு திசை நோக்கி பயிரிடும் போது சூரிய வெப்பம் நேரடியாக வாழையைத் தாக்குவதைத் தடுக்கிறது.
சணப்பை பயிரின் உயரமானது வாழையின் நுனியிலிருந்து அரை அடி உயரம் இருந்தால் போதும். அதிக உயரத்திற்கு சணப்பை வளர்ந்தால் வாழைக்கு உண்டான சத்துக்களை சணப்பை பயிர் எடுத்துக் கொள்ளும். இரண்டரை மாதத்திற்குள்ளோ அல்லது வெயிலின் தாக்கம் குறையும் போது சணப்பை பூக்கும் முன்பாக நிலத்தில் உழுதால் பசுந்தாள் உரமாகி வாழையின் ஊட்டச்சத்திற்கு உதவுகிறது.
பாதுகாக்கும் 'குரோ கவர்'
வெள்ளை காடா துணியால் முக்கோண அமைப்பில் மூன்று கம்புகளைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள 'குரோ கவர்' கோடை வெப்பத்தை துணி பிரதிபலித்து திசு வளர்ப்பு வாழை செடிகளைப் பாதுகாப்பதில் உதவுகிறது. இதன் விலை ரூ.3 என்பதால் ஒரு ஏக்கரில் ஆயிரம் வாழைக்கன்றுகளுக்கு ரூ.3000 செலவாகும். வாழை வளர்ச்சியை பாதுகாத்து மகசூலை அதிகரிப்பதால் இந்த செலவு பெரிதாக தெரியாது.
-கற்பகம், ஹரிஸ்வர் செல்வராஜன், விஞ்ஞானிகள் தேசிய வாழை ஆராய்ச்சி மையம் திருச்சி