/
இணைப்பு மலர்
/
விவசாய மலர்
/
எலுமிச்சையில் வண்ணத்துப்பூச்சி கட்டுப்பாடு
/
எலுமிச்சையில் வண்ணத்துப்பூச்சி கட்டுப்பாடு
PUBLISHED ON : ஜன 02, 2013

பூச்சி தாக்குதலின் அறிகுறிகள்:
இப்பூச்சி பீடையின் புழுக்கள் எல்லாவிதமான எலுமிச்சை வகைச் செடிகளையும், கறிவேப்பிலைச் செடிகளையும் தாக்கக்கூடியவை. புழுக்கள், இலைகளைக் கடித்து உண்டு சேதம் விளைவிக்கும். புழுக்களின் தாக்குதல் அதிகமாக இருக்கும்போது இலைகள் முழுவதும் அழிக்கப்பட்டு, இலைக்காம்புகளும் கிளைகளும் மட்டுமே இருக்கும்.பூச்சியின் வாழ்க்கைச்சரிதம்:
பெண் அந்துப்பூச்சி கோள வடிவ, மஞ்சள் நிற, வழவழப்பான முட்டைகளை, தளிர் இலைகளின் அடிப்பரப்பில் தனித் தனியாக இடும். முட்டைகளிலிருந்து 4-6 நாட்களில் வெளிவரும் இளம் புழுக்கள் முதலில் தளிர் இலைகளை கடித்து உண்ணும். பின்னர் அவை முதிர்ந்த இலைகளையும் உண்ணும். இளம் புழுக்கள் கரும்பழுப்பு நிறத்தில் வெண்ணிற அடையாளங்களுடன் பறவைகளின் எச்சம்போல் தென்படும். அவை 14-28 நாட்களில் முழு வளர்ச்சி அடையும். வளர்ந்த புழுக்கள் பச்சை நிறத்திலும் பழுப்பு நிற படைகளைக் கொண்டும் தடிமனாகவும், உருளை வடிவத்திலும் தென்படும். அவை செடியின் இலைகள் அல்லது கிளைகளில் கூண்டுப் புழுக்களாக மாறும். கூண்டுப் புழுக்கள் இலைகள் அல்லது தண்டுப்பாகத்தில் ஒரு மெல்லிய பட்டு போன்ற இழையினால் கட்டப்பட்டு தொங்கிக் கொண்டி ருக்கும். கூண்டுப் புழுவிலிருந்து 8-12 நாட்களில் வண்ணத்துப்பூச்சி வெளிவரும். அவை கருமைநிற இறக்கைகளில் மஞ்சள் வண்ணப் புள்ளிகளுடனும் படைகளுடனும் பெரிய அளவிலும் தென்படும். எலுமிச்சை வகைச் செடிகளில் இப்பூச்சி வருடம் முழுவதும் தொடர்ந்து காணப்படும்.பூச்சிக் கட்டுப்பாடு:
* பழத் தோட்டங்களை களைச்செடிகள் இல்லாமல் வைக்க வேண்டும்.
* புழுக்களையும் கூண்டுப்புழுக்களையும் கையால் சேகரித்து அழிக்கலாம்.
* பழங்கள் அனைத்தும் அறுவடை செய்தபின்னர் கவாத்து செய்துவிட வேண்டும். தேவையற்ற கிளைகளை வெட்டிவிட வேண்டும்.
* மரங்களில் பூச்சி நடமாட்டம் பற்றி அறிய வேண்டும்.
* பூச்சி அதிகமாக தாக்கிய மரங்களை உடனடியாக அப்புறப் படுத்தி எரித்துவிட வேண்டும்.
* 5 சத வேப்பங்கொட்டை சாற்றை தெளிக்கலாம்.
* பெரும்பாலும் பழவகை செடிகளில் தேவையற்ற மருந்துகளைத் தெளிக்கக் கூடாது.
முனைவர் கோ.பி.வனிதா,
வேளாண்மைக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், மதுரை
முனைவர் ரா.கோபாலகிருஷ்ணன்,
ரோவர் வேளாண்மைக்கல்லூரி, பெரம்பலூர்.