/
இணைப்பு மலர்
/
விவசாய மலர்
/
இங்கே வாங்கலாம் அசில் கோழிக்குஞ்சுகள்
/
இங்கே வாங்கலாம் அசில் கோழிக்குஞ்சுகள்
PUBLISHED ON : செப் 04, 2024

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலையின் புதுக்கோட்டை மண்டல ஆராய்ச்சி மற்றும் கல்வி மையத்தில் அசில் நாட்டுக்கோழி குஞ்சுகள், கடக்நாத் கருங்கோழி குஞ்சுகள், பெல்ஸ்வில்லி ஒயிட் வான்கோழி குஞ்சுகள், தீவன விதைகள், கால்நடை தீவனங்கள் விற்கப்படுகின்றன என்கிறார் மையத் தலைவர் பூவராஜன்.
பல்கலையின் அங்கமாக இந்த மையம் செயல்படுகிறது. பல்கலையின் தனுவாஸ் அசில் ரகம், கடக்நாத் கோழிகள், வான்கோழிகளின் தாய்க்கோழி பண்ணையினங்கள் இங்கு தனியாக பராமரிக்கப்படுகின்றன. வெளியில் இருந்து முட்டைகளை நாங்கள் வாங்குவது இல்லை. கோழி, வான்கோழிகளின் முட்டைகளை பொரிக்கச் செய்து ஒருநாள், ஒருவார மற்றும் ஒருமாத குஞ்சுகளாக விற்பனை செய்கிறோம். குஞ்சு பொரிப்பகத்தில் வாரந்தோறும் 2000 குஞ்சுகளை உற்பத்தி செய்ய முடியும்.
முன்பதிவு அவசியம்
குஞ்சுகளை வாங்கி இறைச்சிக்காக வளர்க்க நினைப்பவர்கள் முன்கூட்டியே தேவையை தெரிவித்து முன்பதிவு செய்து பல்கலையில் கட்டணம் செலுத்த வேண்டும். ஒருமாத குஞ்சுகள் ரூ.125க்கும், மற்றவை தலா ரூ.40க்கும் விற்கப்படுகிறது.
அசில் நாட்டுக்கோழிகள்
அசில் நாட்டுக்கோழிகள் 4 மாதத்தில் ஒருகிலோ எடையுடன் இறைச்சி விற்பனைக்கு தயாராகிவிடும். அதுவே 5 - 6 மாதத்தில் முட்டை உற்பத்தி ஆரம்பிக்கும். அதற்கு 28 - 32 வாரங்களாகும். பண்டிகை, திருவிழாக்களின் போது ஒருகிலோ ரூ.500 - 600க்கு விற்கலாம். இதன் உற்பத்தி செலவு உட்பட அடக்க விலை ரூ.250. விழாக்காலங்களில் நல்ல விலை கிடைக்கும்.
புறக்கடையில் வளர்த்த கோழிகளை கூண்டு முறையில் வளர்க்க சொல்கிறோம். கூண்டுகளையும் தயாரித்து தருகிறோம். கூண்டு முறை அல்லது கொட்டகையில் தரை, கூரை, பக்கவாட்டில் அனைத்திலும் கூண்டு போல அமைத்தும் தருகிறோம். வேலி போல அடைத்திருப்பதால் வெளியில் பறந்து செல்ல முடியாது. வெளி விலங்குகள் தாக்காது. தரையில் மணல் கொட்டியிருப்பதால் கோழி எச்சம் உலர்ந்து விடும். இது தாய்க்கோழி வளர்ப்பவர்களுக்கும் நன்றாக உதவும்.
ஒரு கோழிக்கு ஒன்றரை சதுர அடி இடம் தேவை. அதற்கேற்ப கூண்டு அமைத்து இரண்டடுக்கு முறையில் கோழி வளர்க்கலாம். முட்டை உற்பத்தி லாபமான தொழில் என்றாலும் பராமரிப்பு அவசியம். முதன் முதலில் பண்ணை தொடங்க நினைப்பவர்கள் தாய்க்கோழிகளை வைத்துக் கொள்ளக்கூடாது. எவ்வளவு முட்டைகள் கிடைத்தாலும் அதிகபட்சமாக 70 சதவீதமே பொரித்து குஞ்சாக வெளிவரும். எனவே குஞ்சுகளாக வாங்கி 3 - 4 மாதம் வளர்த்து இறைச்சிக்காக விற்றால் லாபம் கிடைக்கும். இதற்கான பயிற்சிகளும் நடத்துகிறோம். கட்டண பயிற்சியும் உண்டு. திட்டத்தின் கீழ் இலவச பயிற்சியும் தரப்படுகிறது. தமிழில் புத்தக பயிற்சியும் உண்டு.
கடக்நாத் கோழிக்குஞ்சுகளும் ரூ.40க்கு கிடைக்கிறது. இதன் முட்டை, இறைச்சியில் அமினோ அமிலங்கள் அதிகமாக இருப்பதால் இதன் இறைச்சி, முட்டைக்கு அதிக வரவேற்பு உள்ளது. வான்கோழி பெரிய பறவை என்பதால் இதன் குஞ்சுகள் விற்பனைக்கு தயாராக 9 மாதங்களாகும். 5 - 6 கிலோ அளவு வளரும். 4 கிலோ எடையில் அதாவது 32 வாரத்தில் முட்டையிட ஆரம்பிக்கும். அதையும் கூண்டு முறையில் வளர்க்க வேண்டும். அப்போது தான் சரிவிகித எடையுடன் வளரும். இறைச்சிக்கென திட்டமிட்டால் தீபாவளி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு என கணக்கிட்டு வளர்க்க வேண்டும்.
தாய்க்கோழிக்கு சரியான தீவனம் கொடுக்க வேண்டும். இங்கே தீவன ஆலையும் உள்ளதால் கோழிக்குஞ்சுகள், வளர் கோழிகள் மற்றும் தாய்க்கோழிகளுக்கு தனித்தனியாக தீவனம் தயாரித்து விற்கிறோம் என்றார். அலைபேசி: 81225 36826.
எம்.எம்.ஜெயலெட்சுமி
மதுரை