PUBLISHED ON : மார் 14, 2018

மிளகாய் நுனி கருகல் நோய் தாக்கிய செடியின் நுனிகள் கருகி விடும்; பழங்கள் அழுகிவிடும். நாற்று நட்ட ஒரு மாத்திற்கு பின் நுனி கருகல் அறிகுறிகள் தென்படும். நோயுற்ற செடியில் கிளை நுனி, தளிர் இலைகள் கருகி காய்ந்து காணப்படும். நோய் தீவிரமாகும் பொழுது நுனியிலிருந்து நோய் கீழ் நோக்கிப் பரவும் பூக்கள் அதிகளவில் உதிர்ந்து விடுகின்றன. நோயினால் பாதிக்கப்பட்ட சிம்பு அல்லது கிளைகளில் கருப்பு புள்ளிகள் தோன்றும். அவை யாவும் பூசணத்தின் வித்து திரள்களேயாகும். இவற்றிலிருந்து எண்ணற்ற பூசண வித்துக்கள் உற்பத்தியாகின்றன. இந்நோய் பழங்களையும் தாக்கி சேதம் உண்டாக்குகிறது. நோய் தாக்கிய பழங்களில் முதலில் சிறிய பழுப்பு நிறப்பகுதிகள் தென்படும். நாளடைவில் நோய் முதிர்ச்சியடையும் பொழுது இப்பகுதிகள் பெரிதாகிப் பழத்தின் பெரும் பகுதிக்கு பரவுகிறது. பாதிக்கப்பட்ட மிளகாய் பழங்களில் சிறு கருப்பு நிறப் புள்ளிகளை காணலாம். பாதிக்கப்பட்ட பழங்கள் வெண்மை நிறமாக மாறுவதோடு காரத்தன்மை இழந்து விடுகின்றன. இதனை சண்டு வத்தல் எனவும் கூறுவர். பழ அழுகல் நோய் தாக்கப்பட்ட பழங்கள் உதிர்ந்து விடும். மகசூலில் குறைவு ஏற்படும். வத்தலின் தரம் குறைந்து விடும். நோயினால் பாதிக்கப்பட்ட பழங்களில் உள்ள விதைகள் மூலமாகவும் பூசணம் பரவுகிறது. பூசணம் நோய் தாக்கி எஞ்சிய தாவரப் பகுதிகளில் காணப்படுகிறது. இரண்டாம் நிலை தொற்று காற்றின் மூலமாக எடுத்து செல்லப்படும்.
நோய் அறிகுறி தெரிந்தவுடன் 'மாங்காசெப்' மருந்து ஒரு லிட்டர் தண்ணீருக்கு இரண்டு கிராம் வீதமும், 'காப்பர் குளோரைடு' ஒரு லிட்டர் தண்ணீருக்கு இரண்டரை கிராம் வீதம் தெளித்து கட்டுப்படுத்தலாம். 15 நாள் கழித்து மறுமுறையும் தெளித்து கட்டுப்படுத்த வேண்டும்.
- முனைவர் ம.குணசேகரன்
தலைவர், பருத்தி ஆராய்ச்சி நிலையம்
ஸ்ரீவில்லிபுத்துார்.

