தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/விவசாய மலர்/மா மகசூலினை கடுமையாக பாதித்த காலநிலை மாற்றம்

மா மகசூலினை கடுமையாக பாதித்த காலநிலை மாற்றம்

மா மகசூலினை கடுமையாக பாதித்த காலநிலை மாற்றம்


PUBLISHED ON : ஜூன் 16, 2010

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 16, 2010


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூருவுக்கு அருகில் அசர்கட்டாவில் உள்ள மத்திய அரசு இயக்கி வரும் தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையத்தின் மா விவசாயி விஞ்ஞானி டாக்டர் எம்.எட்வர்ட் ராஜா மா மகசூல் பாதிப்பிற்கான காரணங்களை விளக்கியுள்ளார்.

மாந்தோட்டங்களில் இரவு வெப்பநிலை அதிகரித்துள்ளது. வழக்கமாக டிசம்பர் -ஜனவரியில் இரவு வெப்பநிலை 20-23 டிகிரி செல்சியசாக இருக்கும். வெப்பநிலை தற்போது 3 டிகிரி அதிகரித்து 25-30 டிகிரி செல்சியசாக உள்ளது. வெப்ப நிலை அதிகரிப்பால் பூக்கள் வளர்ச்சி தடைபட்டு தண்டு இலைகள் வளர்ச்சி அதிகரித்து விட்டது. ஒளிச் சேர்க்கையின் காரணத்தினால் உண்டாக்கப் பட்ட ஊட்டச்சத்துக்களை இலைகள் வளர்ச்சி, உட்கொண்டு விட்டது.

* ஒளிச்சேர்க்கையை ஊக்குவிக்கும் மாமரங்களுக்காக பிரத்யேகமாக தயாரித்த நுண்ணூட்டச் சத்துக்களை விவசாயிகள் உபயோகிக்காமல் இருக்கின்றனர்.

* தர்மபுரி மாவட்டம் மொரப்பூருக்கு அருகிலுள்ள மிகப்பெரிய ஆல்போன்சா மாம்பழ தோட்டத்தில் பூக்களே பிடிக்காமல் இலை வளர்ச்சி அதிகமாக உள்ளது. இத்தோட்டத்தில் மரங்களுக்கு அதிக அளவு இயற்கை உரங்களே அளிக்கப்படுகின்றன. உரங்களில் உள்ள அதிக அளவு தழை, மணி, சாம்பல் சத்துக்கள் குறிப்பாக தழைச்சத்து தோட்டத்தில் அதிக அளவு இலைகள் வளர்ச்சியை ஊக்குவித்துவிட்டது. தோப்பில் சரியாக காய்கள் பிடிக்கவில்லை.

* மா சாகுபடியிலுள்ள மிக முக்கியமான பணி ஆண்டுதோறும் மாமரங்களில் காற்று, சூரிய ஒளி இவைகள் உள் தண்டுகள் மேலும் படும்படியாகவும் சீராக கவாத்து செய்வதாகும். ஆனால் விவசாயிகள் கவாத்து பணியை செய்வதே இல்லை. கவாத்து செய்யாதபோது ஒளிச்சேர்க்கை ஏற்படுவதில்லை. இதனால் பூக்கள் சரியாக பிடிப்பதில்லை.

* அதிக அளவு தழை, தண்டுகள் வளர்ச்சி ஏற்படும்போது தத்துப்பூச்சி பாதிப்பு ஏற்படும். இதனால் பூக்கள் பிடிப்பு, பிஞ்சுகள் நிற்பது பாதிக்கப்படுகின்றன.

சாதனை விவசாயி: பால்காரன் கொட்டாய்கிராமம், கோவிந்தபுரம் அஞ்சல், ஊத்தங்கரை வட்டம்-635 307, கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த முற்போக்கு விவசாயி என்.தண்டபாணி என்பவர் ஆல்போன்சா மா மரங்களை சிறப்பாக சாகுபடி செய்து வருகிறார். இவரது தோட்டத்தில் 13 வயதுள்ள 350 ஆல்போன்சா மரங்கள் உள்ளன. இத்தோட்டத்தில் விவசாயி ஒவ்வொரு ஆண்டும் மாங்காய் அறுவடை முடிந்ததும் ஜூலை மாதத்தில் மரங்களின் முழு பகுதியிலும் சூரிய ஒளி படும்படியாக நேர்த்தியான முறையில் கவாத்து செய்கிறார். ஆகஸ்ட் முதல் வாரத்தில் மரத்தின் அடிப்பாகத்திலிருந்து நான்கு அடி தள்ளி மரத்தைச் சுற்றி வட்ட வடிவில் பாத்தி கட்டி அதன் ஓரத்தில் உட்பகுதியில் ஒரு அடி அகலம், ஒரு அடி ஆழம் அளவிற்கு குழியெடுத்து அதில் ஊட்டம் ஏற்றிய தொழு உரம் 50 கிலோ மற்றும் யூரியா, பொட்டாஷ், சூப்பர் ஆகியவைகளை தலா 2 கிலோவும், வேப்பம் பிண்ணாக்கு 2 கிலோவும் கலந்து குழியில் போட்டு மண் மூடி 10 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் பாய்ச்சுகிறார். அடுத்து விஞ்ஞானி எட்வர்ட் ராஜா சிபாரிசு பேரில் ""மேங்கோ ஸ்பெஷல்'" என்ற நுண்ணூட்டச் சத்து, ஒரு லிட்டர் தண்ணீரில் 5 கிராம் வீதம் கலந்து ஜூலை மாதம் முதல் பூ பிடிக்கும் வரை மாதம் ஒரு முறை மரத்திற்கு தெளித்துவந்தார். இது சமயம் பூச்சி மருந்துகளுடன் இதனை கலந்து தெளித்தார். (பாதிப்பு ஏதும் ஏற்படுவதில்லை) செப்டம்பர் மாதத்தில் நிலத்தில் நல்ல ஈரம் இருக்கும்போது ஏற்கனவே போட்ட வட்ட வடிவ பாத்தியில் 2 அடி இடைவெளியில் ஒரு அடி ஆழம் கடப்பாரையில் துளை போட்டு ஒரு லிட்டர் தண்ணீரில் 7 மி.லி. கல்டார் (பயிர் ஊக்கி) கலந்து குழியில் ஊற்றி மண்ணால் மூடினார். மாமரங்களுக்கு பூக்கள் பூப்பதற்கு ஒரு மாதம் முன்பிருந்து பாசனத்தை விவசாயி நிறுத்துகிறார். பூ முழுமையாக பிடித்து மிளகு அளவு பிஞ்சு உருவானதும் பாசனத்தை விவசாயி துவக்குகிறார். அந்த சமயம் பார்த்து மண்புழு உரம் ஒரு மரத்திற்கு 15 கிலோ விவசாயி வைக்கிறார். பாசனம் செய்யும் சமயங்களில் பொட்டாஷ் 200 கிலோ, யூரியா 100 கிலோ இடுகிறார். நோய் தடுப்பு முறைகளை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக தோட்டக்கலை துறை பேராசிரியர் பாலமோகன் சிபாரிசுபடி விவசாயி செய்தார். தற்போது இவரது மரங்களில் காய்பிடிப்பு வெகு சீராக உள்ளது. பழங்கள் நல்ல தரமாக உள்ளன. இவர் ஒவ்வொரு வருடமும் ஏக்கரில் 3 டன் மகசூலினை ஒரே சீராக எடுத்து வருகிறார். இந்த வருடம் ஏக்கரில 4 டன் மகசூல் கிடைக்கும் அளவிற்கு மகசூல் உள்ளது. இந்தவருடம் ஏக்கர் சாகுபடி செலவு ரூ.20,000 செய்துள்ளார். வியாபாரிகள் டன் ஆல்போன்சா பழங்களுக்கு ரூ.30,000 வரை விலைகொடுக்க விழைகின்றனர். விவசாயிக்கு ஒரு ஏக்கரில் ஒரு லட்சம் வரை லாபம் வரும் வாய்ப்பு உள்ளது. தொடர்ந்து சீரான விவசாயம் செய்துவரும் விவசாயி, என் தோட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் நல்ல விளைச்சலே கிடைத்து வருகிறது. தட்பவெப்பநிலை ஓரளவு மாறுபட்டாலும் விளைச்சலின் விகிதாசாரம் ஓரளவு குறையுமே தவிர முழுமையாக மரங்கள் காய்க்காமல் போக வாய்ப்பில்லை என்பதே என் அனுபவம் என்றார்.

-எஸ்.எஸ்.நாகராஜன்



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us