PUBLISHED ON : ஜூலை 01, 2026

குறைந்தளவு தண்ணீரில் அதிகளவு பயிர் சாகுபடி செய்து விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதே மத்திய, மாநில அரசுகளின் திட்டம். நீண்ட கால பயிர்களான ரப்பர், தென்னை, பாக்கு சாகுபடியில் குறைந்த செலவில் அதிக லாபம் தருகிறது கோகோ சாகுபடி.
கோகோ, நிழல் விரும்பும் பயிர். இது நன்கு வளர்வதற்கு வெயில், நிழலின் தன்மை 50 சதவீதமாக இருக்க வேண்டும். நீண்ட கால பயிர்களான தென்னை, பாக்கு, ரப்பர் தோட்டங்களில் சிறந்த ஊடுபயிராக கோகோ செழித்து வளரும்.
ஆண்டிற்கு சராசரியாக 900 மி.மீ., முதல் 1200 மி.மீ., மழை தேவை. தமிழகத்தில் மழைப்பொழிவில் ஏற்றத்தாழ்வுகள் உள்ளதால் ஆண்டு முழுவதும் நீர்ப்பாசனம் உள்ள நிலப்பரப்புகளில் எளிதாக சாகுபடி செய்யலாம்.
கடல் மட்டத்திலிருந்து 300 மீட்டர் முதல் ஆயிரம் மீட்டர் உயரம் வரையுள்ள இடங்கள் கோகோ சாகுபடிக்கு ஏற்றவை. மண்ணின் அமில, காரத்தன்மை 6.0 முதல் 8.0 வரையும் பாசன நீரின் உப்புத்தன்மை 1.5 அளவிற்கு கீழ் இருக்க வேண்டும். வடிகால் வசதி கொண்ட செம்மண், மணல் கலந்த வண்டல் மண்ணில் கோகோ நன்றாக வளரும்.
நீர் தேங்கும் களிமண் கோகோ வளர்ச்சிக்கு உகந்ததல்ல. 15 முதல் 40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையுள்ள பகுதிகள் கோகோ சாகுபடிக்கு உகந்தது. நடவு செய்த மூன்று ஆண்டுகள் முதல் 40 ஆண்டுகள் வரை மகசூல் தருகிறது.
நடவும், இடைவெளியும்
ஜூன் முதல் டிசம்பர் வரை கோகோ நடவு காலம். தென்னந்தோப்பில் ஊடுபயிராக நட வேண்டுமெனில் 10 அடி இடைவெளி தேவை. இரண்டு தென்னை மர வரிசைக்கு இடையில் ஒரு வரிசையும், இரண்டு தென்னை மரத்திற்கு நடுவில் ஒரு கோகோ செடியை நடலாம்.
இம்முறையில் ஒரு எக்டேர் பரப்பில் 500 கோகோ செடிகளை நடவு செய்ய முடியும்.
பாக்குமரத் தோப்பில் 9 அடி இடைவெளியில் இரண்டு பாக்கு மர வரிசைக்கு நடுவில் நடலாம். இதே போல ஒன்று விட்ட பாக்கு மர இடைவெளியில் ஒரு கோகோ செடியை நடுவதன் மூலம் ஒரு எக்டேர் நிலத்தில் 686 செடிகளை நடலாம்.
ரப்பர் தோட்டத்தில் பத்தடி இடைவெளியில் இரண்டு ரப்பர் மர வரிசைக்கு நடுவிலும் ஒன்றுவிட்ட ரப்பர் மர இடைவெளி வீதம் ஒரு எக்டேரில் 500 செடிகளை நடலாம்.
ஈரப்பதத்தை காக்கலாம்
கோகோ மரத்தை ஊடுபயிராக நடுவதன் மூலம் மண் ஈரப்பதத்தை பாதுகாத்து வெப்பநிலையையும் சீராக பாதுகாக்கலாம். களைகள் கட்டுப்படுத்தப்படுகிறது. கோகோ இலைகள் அதிகம் உதிரும் போது அவை மண்ணில் மட்கி பாக்கு, தென்னை, ரப்பர் மரங்களுக்கு உரமாக மாறுகிறது.
மண்ணில் அங்ககச்சத்துகள் அதிகரித்து நுண்ணுயிரிகள் பெருகி மண்வளமும் மேம்படுகிறது. இதன் மூலம் உரத்தின் தேவையை குறைக்கலாம். மேலும் கோகோ ஊடுபயிராக சாகுபடி செய்யும் போது தென்னை, பாக்கு, ரப்பரின் மகசூல் அதிகரிக்கிறது.
ஊடுபயிரான கோகோ சாகுபடி மூலம் விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.50 ஆயிரம் முதல் ரூ.80 ஆயிரம் வரை கூடுதல் வருமானம் கிடைக்கும்.
கோகோ பழங்களின் ஓடுகளை கால்நடைகளுக்கு தீவனமாக கொடுக்கலாம் அல்லது அங்கக உரமாக மாற்றலாம். தமிழகத்தில் நிலவும் பருவகால மாற்றம் குறித்த பிரச்னைகளுக்கு கோகோ சாகுபடி நல்ல தீர்வு.
- ராஜ் பிரவின்,
இணைப்பேராசிரியர் (வேளாண்மை விரிவாக்கம்)
தமிழ்நாடு வேளாண்மை பல்கலை மலரியல் ஆராய்ச்சி நிலையம்,
தோவாளை, கன்னியாகுமரி.
அலைபேசி: 94863 85423
