PUBLISHED ON : நவ 08, 2017

சீரான கண்கள் மாடுகளுக்கு அழகை கொடுக்கிறது. பார்வை குறைந்த மாடுகள் பள்ளம், கல்பரப்பு முதலியவற்றில் செல்லும்போது கால் இடறி தடுமாறும் அல்லது கீழே விழும். பார்வை நன்றாக உள்ள மாடுகள் இடையூறுகளை தாண்டி செல்லும். சில மாடுகளில் நோய் களால் கண் பார்வை சுழன்று கொண்டே இருக்கும். மூக்கிற்கு மேல் மண்டை ஓட்டுக்குள் வளரும் ஒருவித புற்று நோய் வந்த மாடுகளில் அந்தப்பக்க கண் தனியாக வெளி வந்தது போல் தெரியும். ஆகையால் இரு கண்களும் ஒரு சேர நன்றாக இருக்கிறதா என்பதை கவனித்து மாடுகளை வாங்க வேண்டும்.
கொம்பில்லை வம்பில்லைமாடுகளுக்கு காது பாதுகாப்பு சாதனமாக உள்ளது. சாதாரணமாக மாடுகள் சுற்றுப்புற சூழ்நிலைக்கேற்ப அனைத்து பக்கங்களிலும் காதுகளை திருப்ப முடியும். காதுகள் சோர்வுடன் அசைவில்லாமல் தொங்கி காணப்பட்டால் அது நோய்க்கான அறிகுறி. சாதாரணமாக மாடுகள் காதுகளை பிடிப்பதை விரும்பாது. உள்காது, மூளை ஆகியவற்றில் நோய் உள்ள மாடுகள் தன்னை தானே சுற்றி வரும். ஆரோக்கியமான மாடுகள் எப்போதும் மூக்கை நாக்கினால் துடைத்து கொண்டே இருக்கும். மூக்கு அசுத்தமாகவும், அசிங்கமாகவும் ஈ மொய்த்து கொண்டும் இருந்தால் அது நோயின் அறிகுறி. கூடிய மட்டும் கொம்பு இல்லாத மாடுகள் வாங்குவது நல்லது. கொம்பு இருந்தால் அதில் ஆட்டம் இருக்கக்கூடாது. அடியிலிருந்து கொம்பு நுனி வரை தடவிப்பார்க்க வேண்டும். கொம்பில் பூண் போட்டிருந்தால் அதை கழற்றி விட்டு பார்க்க வேண்டும். கொம்பில் புற்று நோய் வருவதுண்டு. வந்தால் அதை குணப்படுத்த முடியாது.
திமிர் பிடித்த திமில்விவசாய வேலைகள் மற்றும் உழவுக்காக மாடுகள் வாங்கும்போது கழுத்தைப் பிடித்து பார்த்து வாங்க வேண்டும். நோயுள்ள பலம் குன்றிய மாடுகள் கழுத்து, திமில், முதுகுப்பறத்தை சற்று அழுத்திப் பிடித்தால் கூனிக்கொண்டு அப்படியே உட்கார்ந்து விடும். இந்திய மாடுகளுக்கு திமில் உண்டு. திமில் குறைந்த மாடுகள் அல்லது திமில் இல்லாத மாடுகள் கடுமையான வேலைக்கு உகந்தது அல்ல. திமில் அதிகமாகவும், பருத்தும் இருப்பது நல்ல ஊட்டச்சத்தை குறிக்கும். திமில் புண் இல்லாமல் பார்த்து வாங்க வேண்டும். நோயுள்ள மாடுகள் காய்ந்த தோல், முரட்டு முடி, கொழுப்பு குறைவு, தோல் வளர்ச்சி மங்கி காணப்படும். விவசாயிகளே நீங்கள் மாடுகளை வாங்கும்போது மேற்கூறிய ஆலோசனைகளை கருத்தில் கொண்டு வாங்குவது நல்லது. கவனமுடன் செயல்படுங்கள்... பணத்துக்கு தகுந்த மாடுகளை வாங்கி பயனடைய வேண்டும்.
- டாக்டர் வி.ராஜேந்திரன்முன்னாள் இணை இயக்குனர்கால்நடை பராமரிப்புத்துறை94864 69044.
