PUBLISHED ON : ஏப் 11, 2018

மதுரை மாவட்டம் அலங்காநல்லுாரில் பாரம்பரிய நெல்வகையான கொத்தமல்லி சம்பா சாகுபடி செய்து, விதை நெல்லாக வழங்கி வருகிறார் விவசாயி முருகவேல் பாண்டியன், 45.
ஒவ்வொரு ஆண்டும் சோதனை முறையில் பாரம்பரிய நெல்வகைகளை சாகுபடி செய்து, பழைய நெல் ரகங்களை அறுவடை செய்து அவற்றை விதை நெல்லாக வழங்கி வருகிறார். இந்த ஆண்டு 20 கொத்தமல்லி சம்பா மற்றும் ஒடிசா மாநிலத்தின் பாரம்பரிய நெல் சொர்ணா சிச்சடி சாகுபடி செய்துள்ளார். கொத்தமல்லி சம்பா சிவப்பு அரிசி. வறட்சியை தாங்கி வளரும் ரகம். வாரம் ஒரு முறை தண்ணீர் பாய்ச்சினால் போதும். வைக்கோல் அதிகம் இருக்கும். தண்ணீர் பற்றாக்குறையாக இருந்தாலும் வெற்றி கரமாக அறுவடை செய்த மகிழ்ச்சியில் இருந்த முருகவேல் பாண்டியன் கூறியதாவது:
கொத்தமல்லி சம்பாவை விரும்பி சாப்பிடலாம். இதன் சாதம் மணம் இருக்கும். புட்டு, இட்லி, தோசைக்கு சிறப்பு. 130 நாட்களில் அறுவடை செய்யலாம். பயிர் 4 அடி உயரம் வளரும். ஒரு ஏக்கரில் 65 மூடை நெல் கிடைக்கும். இதற்கு ரசாயன உரங்கள் தேவையில்லை. ஸ்ரீவில்லிபுத்துார் நண்பரிடமிருந்து 50 கிலோ விதை நெல் வாங்கி சாகுபடி செய்தேன். இந்த நெல் ரகம் பற்றி மக்களிடம் விழிப்புணர்வு இல்லை. விதை நெல்லுக்காக இதனை பயன்படுத்த உள்ளதால், கை அறுவடை செய்துள்ளேன். கிலோ 60 ரூபாய்க்கு விற்பனையாவதால், இது விவசாயிகளுக்கு நஷ்டத்தை தருவதில்லை. கடந்த ஆண்டில் சாகுபடி செய்திருந்த குறுவை, சின்னாறு, ரத்தசாலி, மரத்தொண்டி என பாரம்பரிய நெல்ரகங்களுக்கும் விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. அது போல் கொத்தமல்லி சம்பாவும் இருக்கும், என்றார்.
தொடர்புக்கு 99440 81821
-டபிள்யு.எட்வின், மதுரை.

