PUBLISHED ON : மே 14, 2021

கோடைப்பருவத்தில் மல்லிகை பூக்களை பூச்சிகள் அதிகம் தாக்கி சேதம் விளைவிக்கின்றன. அதில் மொக்கு துளைப்பான், கழலை ஈக்களின் பங்கு அதிகம்.
பூக்கள் விரியாத பூ மொட்டுகளை துளைத்து உட் பகுதிகளை தின்று சேதம் ஏற்படுத்தும். வட்டமான துவாரம் வழியாக வெளிவந்து, அடுத்த மொட்டைத் தாக்கும். ஒரு புழு 23 மொட்டுகளைத் தாக்கக் கூடியது. புழுக்கள் நுாலாம்படையால் மொட்டுகளை பிணைத்து உண்ணும். நுாலாம்படையுள் புழுக்களின் கழிவுகள் இருக்கும். உடல் பச்சை நிறத்திலும் தலை கருமையாக இருக்கும். வளர்ந்த புழுக்கள் மண்ணில் கூட்டுப்புழுக்களாக மாறி அந்துப் பூச்சிகளாக வெளிவரும்.
கொசுக்கள் போன்ற சிறிய பூச்சியான கழலை ஈயானது மொட்டுகளில் 100 முட்டைகள் வரை இடும். ஒரே நாளில் நுண்ணிய புழுக்கள் நச்சு பொருட்களை உமிழ்ந்து மொட்டுகளை சேதப்படுத்துவதால் இளஞ்
சிவப்பு நிறமாகி காய்ந்து உதிரும். 7 நாட்களுக்குள் கூட்டு புழுவாகி அடுத்த ஐந்து நாட்களில் தாய் ஈக்களாக மாறிவிடும். குண்டு மல்லி பூக்களில் 60 - 70 சதவீத மகசூல் இழப்பை ஏற்படுத்துகின்றன.
செடிகளை சீராக கவாத்து செய்து தோட்டத்தை சுத்தமாக வைக்க வேண்டும். துளைப்பான், ஈக்களால் தாக்கப்பட்ட மொட்டுகளை புழுக்களுடன் சேர்த்து அழிக்கலாம். மண்ணை அடிக்கடி கிளறி கூட்டுப்புழுக்களை அழிக்க வேண்டும்.
விளக்குப்பொறி அமைத்து அந்துப் பூச்சிகளை கவர்ந்து அழிக்கலாம். ஒருலிட்டர் தண்ணீரில் 5 மில்லி வேப்பங்கொட்டை வடிநீர் கலந்து தெளிக்கலாம். ஒரு லிட்டர் நீரில் 5 மில்லி ஸ்பைனோசாட் 45 எஸ்சி அல்லது 10 மில்லி புளுபினாக்ஸ்சூரான் 10டிசி கலந்து தெளிக்கலாம்.
ஜெயராஜ்
உதவி பேராசிரியர்
சாந்தி, தலைவர் பூச்சியியல் துறை விவசாய கல்லுாரி, மதுரை
