PUBLISHED ON : நவ 07, 2018

வாத்துக்கள், நாட்டு கோழிகளை விட அதிக முட்டையிடும் பறவையினம். ஆண்டுக்கு 40 முதல் 50 முட்டை அதிகமாகவே இடும்.
ஐப்பசி முதல் பங்குனி வரை முட்டை அதிகம் கிடைக்கும். வாத்து முட்டையின் எடை, கோழி முட்டையின் எடையை விட 10 முதல் 20 கிராம் அதிகமாக இருக்கும். அதிக சத்து பொருட்கள் நிறைந்தது. வாத்து முட்டையின் விலை, கோழி முட்டையின் விலையை விட எப்பொழுதும் அதிகமாகவே இருப்பதால், வாத்து வளர்ப்போருக்கு நல்ல லாபம் கிடைக்கிறது.
கோழிகளுக்கு வீடு அமைப்பது போல், அதிகம் செலவு செய்து கொட்டகைகள் அமைக்க தேவையில்லை. இரவில் வாத்தை அடைத்து வைப்பதற்கு சிறு மூங்கில்பட்டி இருந்தால் போதுமானது.
வாத்துக்கள் இரவில் மற்றும் அதிகாலையில் முட்டையிடும். எனவே முட்டை சேகரிப்பதில் சிரமம் இல்லை. காலையில் முட்டைகள் சேகரித்து கொண்டு மேய்ச்சலுக்கு வாத்துக்களை அனுப்பி விடலாம். வாத்துக்களுக்கு இரண்டு முதல் மூன்று ஆண்டு முட்டையிடும் தன்மை உண்டு. கோழிகள் ஓராண்டு வரை தான் லாபகரமாக முட்டையிடும். காக்கிகேம்பல் அதிக முட்டையிடும் வாத்தினங்களில் சிறந்தது. அடுத்தபடியாக முட்டை கொடுக்கும் இனம் இந்தியன் ரன்னர்.
காக்கிகேம்பல்
வியாபார ரீதியில் முட்டையிடுவதற்காக காக்கிகேம்பல் வளர்க்கப் படுகிறது. இவை அதிகபட்சமாக ஆண்டுக்கு 300 முட்டைகள் இடும். இவ்வகை பறவையினம் இங்கிலாந்து நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவை. பெட்டை வாத்து 2 - 2 கி., எடை, ஆண் வாத்து 2 - 4 கி., எடை கொண்டிருக்கும். முட்டை எடை 65 - 75 கிராம் வரை இருக்கும்.
இந்தியன் ரன்னர்
காக்கி கேம்பல்லுக்கு அடுத்தபடியாக இவ்வினம் அதிக முட்டையிடும் (200 முட்டைகள்) வெள்ளை, கருப்பு மற்றும் சாக்லேட் வண்ணங்களில் இவ்வினை வகைகள் உள்ளன. இந்தியன் ரன்னரின் கழுத்து நீளமாகவும், நேராகவும் மெலிதாகவும் இருக்கும். இவற்றின் இறகுகள் சிறியதாகவும் ஒட்டியும் இருக்கும்.
வாத்து இனங்கள்
'இறைச்சி வாத்து' உடல் எடை 2.5 கிலோவை விட அதிகம் இருக்கும். வெள்ளை பேக்கின் ஒரு சிறந்த இறைச்சி வாத்து இனமாகும். 'வெள்ளை பேக்கின்' இனம் வியட்நாமிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட இவ்வினம் இந்திய சூழ்நிலைக்கு மிகவும் ஏற்றது. இவ்வினம் விரைவில் வளரும் தன்மைக்கும் நல்ல இறைச்சி உற்பத்திக்கும் புகழ் பெற்றது. 'ஐயல்பெரி' இறைச்சி உற்பத்திக்கு இவ்வினம் சிறந்தது.
ஆண் வாத்தின் எடை 4.5 கி., பெண் வாத்தின் எடை 4 கி., வரை இருக்கும். 'அலங்கார இனம்' இவ்வகை வாத்துக்கள் அழகானதாகவும், எடை குறைவாகவும் இருக்கும். பொதுவான இனங்கள், கருப்பு கிழக்கு இந்தியா, டெகாய், மல்லார்டு மற்றும் மந்தரின் ஆகியவை புழக்கத்தில் உள்ளன.
- டாக்டர் வ.குமாரவேல், முனைவர் சு.செந்துார்குமரன்
கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை, குன்றக்குடி.

