PUBLISHED ON : மார் 16, 2016
மானாவாரி சாகுபடியில் மழைப்பொழிவு, மழையளவை பொறுத்து பயிர் விளைச்சலும், உற்பத்தியும் மாறுபடுகிறது. அறிவியல் ரீதியான நவீன தொழில்நுட்பங்களை கடைபிடிப்பதன் மூலம் விளைச்சல், உற்பத்தியை அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளன.
முன்பருவ வறட்சி என்பது பருவமழை தாமதமாக துவங்குவதாலும், மழை துவங்கி விதைத்தபின் 3 முதல் 5 வாரங்களுக்கு ஏற்படும் இடைவெளியில் உண்டாவது. பிந்தைய மழைக்கான பயிர் ரகங்களை தேர்வு செய்து மறு விதைப்பு செய்யலாம். விதையை கடினப்படுத்தி விதைக்க வேண்டும். மழைநீர் சேமிப்புக்கான பகுதி பாத்திகள், வரப்பும் அமைத்தல்; ஆழ்சால் அகலபாத்தி, பார்களில் விதைத்தல் போன்ற முறைகளை கையாளலாம்.
மத்திய கால வறட்சி என்பது, மானாவாரி பருவமழை காலத்தில் பயிர் வளர்ச்சியின் இடையே, 2 முதல் 3 வாரங்களுக்கு மழை பெய்யாததால் ஏற்படும் வறட்சி. நிலப்போர்வை அமைத்தல், மேல் மண்ணை கிளறி விடுதல், இலைமேல் ரசாயன நீராவி தடுப்பான்களை தெளித்தல் மூலம் வறட்சியை குறைக்கலாம். இறவையில் சாகுபடி செய்யப்படும் கரும்பில் எக்டேருக்கு 750 லிட்டர் தண்ணீரில் 12.5 கிலோ கயோலினை கலந்து தெளிப்பதன் மூலம் இலைகள் வழி நீர் ஆவியாவதை தடுக்கலாம். பிந்தைய கால வறட்சி என்பது, பயிர் வளர்ச்சியின் பிந்தைய பருவத்தில் குறிப்பிட்ட காலத்திற்கு முன்பே பருவமழை பெய்வது. அல்லது இப்பருவத்தில் 2 - 3 வாரங்களுக்கு மேல் மழை இல்லாதிருப்பதால் ஏற்படும் வறட்சி. இதற்கு நீராவி தடுப்பான்களை தெளித்தல்; பயிர்களை தீவனமாக அறுவடை செய்தல்; பண்ணை குட்டைகளில் சேமிக்கப்பட்ட நீரைக் கொண்டு தற்காப்பு நீர்ப்பாசனம் செய்யலாம். வெட்டிவேர், கொழுக்கட்டை புல், சூபாபுல், வேலிமசால், எலுமிச்சை புல் ரகங்களை தாவர அரண்களாக வளர்த்து நீரை மண்ணுக்குள் ஊடுருவ செய்யலாம்.
- பே. இந்திராகாந்தி,
துணை இயக்குனர்,
-மூ.சரஸ்வதி,
உதவி இயக்குனர்,
நீர் மேலாண்மை பயிற்சி நிலையம், மதுரை.