/
இணைப்பு மலர்
/
விவசாய மலர்
/
மதிப்பூட்டிய ஆட்டிறைச்சிப் பொருட்கள்
/
மதிப்பூட்டிய ஆட்டிறைச்சிப் பொருட்கள்
PUBLISHED ON : அக் 24, 2012
இறைச்சியினை அப்படியே விற்பனை செய்வதைவிட மதிப்புக்கூட்டிய இறைச்சிப் பொருளாக விற்பனை செய்வதன் மூலம் அதிக லாபம் பெறலாம்.இறைச்சி ஊறுகாய் தயாரிப்பு:
ஒரு கிலோ இறைச்சியை மிதமான அளவு துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும். இறைச்சித் துண்டுகளுடன் 25 கிராம் மிளகாய்த்தூள், 15 கிராம் மஞ்சள் தூள், 20 கிராம் உப்பு ஆகியவை கலந்து ஒரு மணி நேரம் உலர்த்தியபின் எண்ணெயில் பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும். அதில் மீதமுள்ள எண்ணெயில் இஞ்சி 150 கிராம், பூண்டு 150 கிராம், பச்சை மிளகாய் 50 கிராம் ஆகிய பொருட்களை இட்டு நன்கு வேகவைக்கவும். பின் மிதமான சூட்டில் சீரகம் 25 கிராம், கடுகு 25 கிராம், பெருங்காயம் 10 கிராம், வெந்தயம் 5 கிராம் ஆகிய பொருட்களை இட்டுக் கிண்டவும். வினிகர் சேர்த்து நன்கு கலக்கவும். பின் மிளகாய்த்தூள், உப்பு, கறிமசாலாவை ஒன்றன்பின் ஒன்றாக சேர்க்கவும். மிதமான சூட்டில் சமைக்க வேண்டியது அவசியம். கடைசியாக சிட்ரிக் அமிலம் மற்றும் சோடியம் பென்சோயேட் சேர்த்து நன்கு கலக்கவும். பின் பொரித்த இறைச்சித் துண்டுகளைச் சேர்த்துக் கிண்டவும். இப்பொழுது அடுப்பை அணைத்துவிடலாம். 24 மணி நேரம் கழித்து நன்கு சுத்தமாக்கப்பட்ட பாட்டிலில் அடைத்து வைத்து விற்பனை செய்யலாம்.கைமா கட்லெட்:
கைமா செய்யப்பட்ட கறியை (250 கிராம்) நன்கு கழுவிப் பிழிந்துவிடவும். வெங்காயம்-1, பச்சைமிளகாய்-3, கொத்தமல்லித்தழை அரை கட்டு, மஞ்சள் தூள் அரை ஸ்பூன், மல்லித்தூள் அரை ஸ்பூன், சீரகத்தூள் அரை ஸ்பூன், இஞ்சி நசுக்கியது அரை ஸ்பூன் ஆகியவற்றை அடித்த முட்டையுடன் சேர்த்து கலக்கவும். எட்டு பகுதிகளாகப் பிரித்து எண்ணெய் தடவிய உள்ளங்கையில் வைத்து வட்டமாக கட்லெட் போலச் செய்யவும். பிறகு ரொட்டித் தூளில் புரட்டி எடுத்துப் பொன்னிறமாக எண்ணெயில் வறுக்கவும். இதை உருளைக்கிழங்கு சிப்சுடன் சூடாகப் பரிமாறலாம்.மட்டன் வறுவல்:
முள் கம்பு ஸ்பூனில் இறைச்சியை (அரை கிலோ) குத்தி எடுக்கவும். எலுமிச்சை சாறு (3 ஸ்பூன்) மற்றும் உப்பு சேர்த்து, இஞ்சி, பூண்டு பசையில் (3 ஸ்பூன்) தோய்த்து 3 மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு எண்ணெயில் வாட்டி எடுக்கவும். பின் தேவையான அளவு லவங்கம், பட்டை, ஏலக்காய், மிளகாய்த்தூள், தக்காளி இவற்றுடன் 10 நிமிடம் குறைந்த தீயில் வறுக்கவும். சிறிது சூடான தண்ணீர் சேர்த்து பிரஷர் குக்கரில் 20 நிமிடம் வேகவைத்து சூடாகப் பரிமாறலாம்.எலும்பு சூப்:
இறைச்சி (250 கிராம்) மற்றும் எலும்புத் துண்டுகளுடன் (1 கிலோ) 20 நிமிடம் வேகவைத்து வடிகட்டிக் கொள்ளவும். சீரகம், சோம்பு, மிளகு முதலியன கொண்ட மசாலாவை வடிகட்டிய சாற்றில் சேர்த்து சுவை மிகுந்த எலும்பு சூப்பை சூடாகப் பரிமாறவும். தொடர்புக்கு: முனைவர் செல்வராஜ், கால்நடை மருத்துவர், திருப்பூர். போன்: 0421-224 8524.
-கே.சத்தியபிரபா, உடுமலை.