PUBLISHED ON : மார் 22, 2017

கருணை நிறைந்த கறிக்கிழங்கு கருணைக் கிழங்காகும். இந்த கிழங்கு 'யானைக் கிழங்கு' என்றும் அழைக்கப்படுகிறது. யானையின் தோல் போல கருமை நிறமாக இருப்பதால் தான் இந்த பெயர் பெற்றது.
செழிப்பான கிழங்குகள்
இந்த தாவரம் பூமியில் சத்தான உணவை நாடிச் செல்கின்ற தன்மை கொண்டது. அதனால் இதன் செழிப்பான வளர்ச்சிக்கு துணையாக மணல், செம்மண், மரக்கறி, தழைச்சத்து, எருச்சத்து புண்ணாக்கு போன்ற தகுந்த உரங்கள் உரிய காலத்தில் இடப்படுகிறது.
இவற்றை ஒன்றின் மீது ஒன்றாக நிலத்திலே இடுவது சிறந்தது. பின் இவை நன்கு கலக்கப்பட வேண்டும். நன்றாக சேர்மானம் ஆன பின்பு செழிப்பாக வளர்ந்து கிழங்குகளை தரும். உருண்டை வடிவத்தில் கை விரல்களில் பிடிக்கும் அளவிற்கு இந்த கிழங்கு இருப்பதால், 'பிடி கிழங்கு' என்றும் மக்கள் அழைக்கிறார்கள். இதன் சுவை கொஞ்சம் காரமாகவே இருப்பதால் 'காரும் கருணை' என்று கூட சொல்லலாம்.
காரத் தன்மை இல்லாத சேணைக் கிழங்கு, 'காராக் கருணை' எனப் படுகிறது. இந்த இருவகை கிழங்குகள் இரட்டைப் பிறவிகள் போன்றது. இவற்றின் மேல் தோலை நீக்கிவிட்டு உலர வைத்து, பயன்பாட்டிற்கு எடுத்துக் கொள்கிறார்கள்.
நோயை குணமாக்கும்
கருணை கிழங்கு நன்றாக வேக வைத்து தோல் நீக்கி, உலர வைத்து, புளிச்சாறு சேர்த்து சமைத்தால் இதில் உள்ள காரம், அரிக்கும் தன்மை நீங்கிவிடும். மேலும் பொரியல், வறுவல், சிப்ஸ், கூட்டு, தோல் துவையல் என சமைத்தும் ருசிக்கலாம். கிழங்கில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புசத்து,
வைட்டமின் 'பி' சத்து நிறைந்துள்ளது.
நூறு கிராம் கலோரி கொண்ட இக்கிழங்கு, நம் எலும்புகளை உறுதியாக்க பெரிதும் உதவுகிறது. அத்துடன் ரத்தத்தை விருத்தி செய்து வயிற்று வலி, இரைச்சல், மந்தம், சொறி, சிரங்கு போன்ற பிரச்னைகளை போக்குகிறது.
கல்லீரல், மண்ணீரல், ஜீரண உறுப்பிற்கு சீரான வலிமை தரும். உடலில் ஏற்படும் அதிக உஷ்ணத்தை குறைத்து, மூல நோயை குணமாக்கும்.
இத்தனை மருத்துவ குணம் கொண்ட கருணை கிழங்கிற்கு சந்தையில் நல்ல வரவேற்பு உள்ளது. மேற்கண்ட வழிமுறைகளில் இயற்கை முறையில் உரமிட்டு கருணை பயிர் செய்தால் விவசாயிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.
- எஸ்.நாகரத்தினம், விருதுநகர்.
