/
இணைப்பு மலர்
/
விவசாய மலர்
/
வீட்டுத் தோட்டத்தில் சாத்துக்குடி
/
வீட்டுத் தோட்டத்தில் சாத்துக்குடி
PUBLISHED ON : நவ 16, 2011

வீட்டுத் தோட்டத்தில் சாத்துக்குடியை சாகுபடி செய்ய ஆசைப்படுபவர்கள் ஒட்டுக்கன்றுகளை நடவேண்டும். ஆந்திரா மாநிலத்தில் உள்ள கோடூர், ராஜமுந்திரி போன்ற இடங்களில் செயல்பட்டு வரும் நாற்றுப்பண்ணைகளில் ஒட்டுக் கன்றுகளை வாங்கி உபயோகிக்கலாம். கன்றுகளை நடுவதற்கு நல்ல மேட்டுப் பாங்கான இடத்தைத் தேர்வு செய்ய வேண்டும். பின் 2 அடி ஆழம், 2 அடி அகலம் மற்றும் 2 அடி உயரம் இருக்கும்படி குழி தயார் செய்ய வேண்டும். குழி எடுக்கும்போது மேல் மண் தனியாகவும், அடி மண் தனியாகவும் எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். பின் இவ்வாறு எடுத்த குழியில் மேல் மண்ணினை முதலில் இட்டு பின் அடி மண்ணுடன் நன்கு மக்கிய தொழு உரம் 2 கிலோ இட்டு நன்கு கலக்கி கலவையை குழியில் தேவைப்பட்ட மண்ணுடன் கலந்து குழியை நிரப்ப வேண்டும். பின் குழியின் நடுப்பகுதியில் கன்றின் ஒட்டுப்பகுதி மேலே தெரியும்படி நட்டு மண் போட்டு மூடி தண்ணீர் விடவேண்டும். நடும்போது 3 அடி உயரமுள்ள குச்சியை நட்டு கன்று காற்றில் ஆடாமல் கட்டவேண்டும். அவ்வப்போது ஒட்டு பாகத்தின் கீழ் வளரும் துளிர்களை கிள்ளி அகற்றிவிட வேண்டும். கன்றுகளை நட்டு கவனமாக பராமரிக்க வேண்டும். ஒவ்வொரு வருடமும் ஆடி, ஆவணி மாதங்களில் மழை வரும் சமயம் நல்ல மக்கிய சாணி உரத்தை போட்டுவர வேண்டும். ஏற்கனவே விவரித்தபடி மரத்திற்கு நுண்ணூட்டச் சத்துக்களை இட்டு வருவதோடு அதனைத் தாக்கும் பிசின் வடியும் நோய் வராமல் தடுத்து வரவேண்டும். மரங்கள் செழிப்பாக வளர்ந்து சுவையான பழங்களை நமக்குத்தரும்.
அறுவடை - மகசூல்: ஒரு வருடத்தில் இருமுறை அறுவடை வரும். முதல் அறுவடை செப்டம்பர்-அக்டோபர், இரண்டாவது அறுவடை பிப்ரவரி -மார்ச். மகசூலானது மரங்களின் வயது மற்றும் மண்வளம் பொறுத்து மாறுபடும். சராசரியாக ஒரு மாதத்தில் ஒரு அறுவடையில் 250 பழங்கள் கிடைக்கும் (35-40 கிலோ).
-எஸ்.எஸ்.நாகராஜன்.

