/
இணைப்பு மலர்
/
விவசாய மலர்
/
அதிகரித்து வரும் மக்காச்சோள சாகுபடி படைப்புழு மேலாண்மை செய்வது எப்படி
/
அதிகரித்து வரும் மக்காச்சோள சாகுபடி படைப்புழு மேலாண்மை செய்வது எப்படி
அதிகரித்து வரும் மக்காச்சோள சாகுபடி படைப்புழு மேலாண்மை செய்வது எப்படி
அதிகரித்து வரும் மக்காச்சோள சாகுபடி படைப்புழு மேலாண்மை செய்வது எப்படி
PUBLISHED ON : அக் 16, 2024

மக்காச்சோளப்பயிரில் களைக்கொல்லி பயன்பாட்டுடன், களையெடுக்கும், அறுவடை செய்யும் கருவிகள் இருப்பதால் ஆட்கள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யமுடிகிறது. நிலையான விலை கிடைப்பதாலும் விவசாயிகள் ஆர்வம் காட்டுவதால் சாகுபடி பரப்பானது தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
தமிழகத்தில் மதுரை உட்பட தென்மாவட்டங்களின் கரிசல் பூமியில் மக்காச்சோளம் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. மதுரை மாவட்டத்தில் சேடபட்டி, டி.கல்லுப்பட்டி, கள்ளிக்குடி, திருமங்கலம் பகுதிகளில் 21ஆயிரம் எக்டேரில் மக்காச்சோளம் பயிராகிறது.
நடப்பு பருவத்தில் தற்போது மக்காச்சோளம் பயிரிடப்படும் பகுதியில் ஆடிப்பட்டம், ஆவணிப்பட்டம் மற்றும் புரட்டாசி பட்டத்தில் சாகுபடி ஆரம்பிக்கப்பட்டு பல்வேறு வளர்ச்சி நிலைகளில் பயிர்கள் காணப்படுகிறது.
படைப்புழு தாக்கம்
பொதுவாக பிந்தைய பருவத்தில் சாகுபடி செய்யும்போது மக்காச்சோளத்தில் படைப்புழு தாக்குதல் அதிகம் காணப்படும். மேலும் தற்போதைய காலநிலை மற்றும் பயிரின் பல்வேறு வளர்ச்சி நிலைகள் படைப்புழுவின் பெருக்கத்திற்கு சாதகமாக இருப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
மேலாண்மை முறைகள்
மக்காச்சோள வயலின் வரப்பு ஓரங்களில் தீவனச்சோள பயிரினை ஒரு மீட்டர் அகலத்திற்கு விதைப்பு செய்தால் படைப்புழு தாய்ப்பூச்சிகளின் இடப்பெயர்ச்சியை தடுக்கலாம்.
வரப்பு ஓரங்களில் சூரியகாந்தி, துவரை, தட்டைப்பயறு வளர்த்தால் இப்பயிர்கள் படைப்புழுக்களை ஈர்க்கும். அதன் மூலம் மக்காச்சோளப் பயிருக்கு புழுக்கள் செல்வதைத் தடுக்கலாம்.
அடிஉரமாக ஏக்கருக்கு 100 கிலோ வேப்பம் புண்ணாக்கு இடவேண்டும். பத்து வரிசைகளுக்கு இடையே பயிர் இடைவெளி ஒருஅடி இருக்குமாறு நடவு செய்தால் படைப்புழுவின் இடப்பெயர்வை குறைத்து தாக்குதலைக் கட்டுப்படுத்தலாம்.
இளம்பயிரில் தாக்குதலா
இளம்பயிரில் படைப்புழுவின் இளம்நிலை தென்பட்டால் வேப்பெண்ணெய், அசாடிராக்டின் ஏக்கருக்கு ஒரு லிட்டர் அளவில் தெளிக்க வேண்டும்.
ஏக்கருக்கு 5 இனக்கவர்ச்சிப் பொறிகள் வைத்து தாய் அந்துப் பூச்சிகளைக் கவர்ந்து அழிக்க வேண்டும். ஏக்கருக்கு ஒரு கிலோ அளவில் உயிர் கட்டுப்பாட்டு காரணியான மெட்டாரைசியம் அனிசோபிலியே நீரில் கரைத்துத் தெளிக்கலாம்.
சேதம் அதிகமானால்
பயிரில் படைப்புழுவானது வளர்ச்சியடைந்து சேதம் விளைவிக்கும் நிலையில் இருந்தால் ஏக்கருக்கு 100 கிராம் எமாமெக்டின் பென்சோயேட் (5 எஸ்.ஜி.,) அல்லது 300 மில்லி நவலுாரான் (10 இ.சி.,) அல்லது 100 மில்லி ஸ்பின்னட்டோரம் (11.7 எஸ்.சி.) பூச்சிக்கொல்லி மருந்தில் ஏதாவது ஒன்றை தெளித்துக் கட்டுப்படுத்த வேண்டும். ஒரே மருந்தை திரும்பத் திரும்ப பயன்படுத்தக்கூடாது.
- ராமசாமி வேளாண் உதவி இயக்குநர் வேளாண் துறை, மதுரை