PUBLISHED ON : ஜூலை 15, 2026

இந்தியத் தேனீக்களின் காட்டுக் கூட்டங்களை ஈர்த்து குடியேறச் செய்வதில் எளிய சுடுமண் பானை தொழில்நுட்பம் பயனுள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
இந்தியாவில் காணப்படும் பல்வேறு தேனீ இனங்களில், இந்தியத் தேனீ (ஏபிஸ் செரானா இண்டிகா) முக்கிய உள்நாட்டு மகரந்தச் சேர்க்கையாளராக விளங்குகிறது. தேனீக்கள் இயற்கையாக கூடு அமைக்கும் பொந்துகளை ஒத்திருக்கும் களிமண் பானைகள் பயன் படுத்தப்படுகின்றன.
பானையின் வாய்ப் பகுதி 10 செ.மீ., விட்டம், வயிற்றுப் பகுதி விட்டம் 45 செ.மீ., ஆழம் 40 செ.மீ. இருக்க வேண்டும். பானையின் உள்ளே உருகிய தேன்மெழுகு பூசவேண்டும். இந்த மெழுகுப்பூச்சானது தேன் தேடும் தேனீக்களை ஈர்த்து அந்த இடத்தை கூடு அமைக்கும் இடமாக ஆய்வு செய்யத் துாண்டுகிறது.
பானை வைக்கப்படும் இடத்தைப் பொறுத்தே தேனீக்கள் கூடு அமைப்பது சாத்தியமாகும். அடர்த்தியான மரக்கிளைகளுக்குள், குறிப்பாக மாமரங்களின் அடர்ந்த இலைகளுக்கிடையில் மெழுகு பூசப்பட்ட பானைகளை பாதுகாப்பான முறையில் தலைகீழாக கட்டித் தொங்கவிட வேண்டும்.
பாதுகாப்பு தேவை
நாள் முழுவதும் போதுமான நிழல், நேரடி சூரிய ஒளி, மழை, இயற்கை எதிரிகள் மற்றும் மனித இடையூறுகளிலிருந்து பாதுகாப்பு, குளிர்ச்சியான, இருண்ட சூழல், அடர்த்தியான இலை அமைப்பு ஆகியவை புதிய கூடு அமைக்கத் தேடும் தேனீக் கூட்டங்களை ஈர்க்கும் சாதகமான நுண்ணிய காலநிலையை உருவாக்குகிறது.
கள ஆய்வுகளின்படி பானைகள் கட்டிய சில நாட்களிலேயே தேனீக்கள் அவற்றை ஆய்வு செய்யத் தொடங்கி மூன்று வாரங்களுக்குள் காட்டுத் தேனீக் கூட்டங்கள் பானைக்குள் குடியேறுகின்றன. ஒருமுறை கூட்டம் நிலைபெற்றவுடன் தேனீக்கள் விரைவாக தேனடைகள் அமைத்து புழுக்களை வளர்த்து மகரந்தத் துகள்கள், தேனை சேகரிக்கத் தொடங்குகின்றன. பானைகள் வெப்ப மாற்றங்களிலிருந்து பாதுகாப்பளித்து, தேனீக்கூட்ட வளர்ச்சிக்கு ஏற்ற சூழலை வழங்குகின்றன.
இந்த முறைக்கு மிகக் குறைந்த முதலீடு மட்டுமே தேவைப்படுவதால், விவசாயிகள், தோட்டக்கலை ஆர்வலர்கள், கல்வி நிறுவனங்கள் எளிதில் பின்பற்றலாம். வீடுகளில் மரங்கள் இருந்தாலும் இம்முறையில் காட்டுத் தேனீக்களை வளர்க்க முடியும். புதிதாக உருவாகும் ஒவ்வொரு தேனீக் கூட்டமும் தாவரங்களின் மகரந்தச் சேர்க்கைக்கு உதவுகின்றன. தேனீக்கள் தேன் மற்றும் மகரந்தத் துகள்களை சேகரிப்பதற்காக மலர்களுக்கு இடையே தொடர்ந்து சுற்றுவதால் பூக்களின் மகரந்தச் சேர்க்கை மேம்படுகிறது.
சுறுசுறுப்பான தேனீக் கூட்டம் கூட்டிலிருந்து இரண்டு கி.மீ. சுற்றளவுக்குள் உள்ள பயிர்களுக்கு மகரந்தச் சேர்க்கை சேவையை வழங்குகிறது.
மாம்பழம், கொய்யா, சப்போட்டா, மாதுளை மரங்கள், பயறு வகைகளில் விதை மற்றும் காய் உற்பத்தி, பூசணிக்காய், வெள்ளரி உள்ளிட்ட கொடிவகைக் காய்கறிகள், எண்ணெய் வித்துப் பயிர்களில் விதை உற்பத்தி, மருத்துவ, அலங்காரத் தாவரங்களில் மகரந்தச் சேர்க்கைக்கு தேனீக்கள் உதவுகின்றன. இதன் மூலம் அதிக மகசூல், தரமான விளைபொருட்கள் கிடைப்பதால் கூடுதல் வருமானத்தை உறுதி செய்கிறது.
வேளாண் துறையைத் தாண்டி சுற்றுச்சூழல் நிலைத்தன்மைக்கும் இந்தியத் தேனீக்கள் தங்கள் பங்களிப்பை வழங்குகின்றன. உலகளவில் மகரந்தச் சேர்க்கையாளர்களின் எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில், இத்தகைய குறைந்த செலவிலான தேனீ வளர்ப்பு முயற்சிகள் அவசியமானவை.
ஜெ.ஜெயராஜ்,
பூச்சியியல் பேராசிரியர்
வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்
செட்டிநாடு, சிவகங்கை.
