PUBLISHED ON : மார் 28, 2012
பேரீட்சை நடவு செய்த இரண்டரை ஆண்டுகளில் அல்லது மூன்றாவது ஆண்டு தொடக்கத்தில் பூ எடுக்கும். பேரீட்சையில் ஆண் மரம் ஜனவரி மாதம் தொடங்கி பிப்ரவரி வரை பூக்கும். பெண் மரம் பிப்ரவரி இறுதியிலிருந்து ஏப்ரல் வரை பூக்கும். இந்தக் காலநிலை மாறுபாட்டால் இயற்கையாக மகரந்தசேர்க்கை நடைபெறுவதில் சிக்கல்கள் ஏற்படும். இது மகசூலைப் பாதிக்கும். அதனால் ஆண் பூக்கள் பூக்கும்போது, பாளை வெடித்தவுடன் பூவை வெட்டி அதிலுள்ள மஞ்சள்நிற மகரந்தத் தூளை உதிர்த்து ஒரு பாட்டிலில் சேகரித்து வைத்துக்கொள்ள வேண்டும். இது நமது அறை வெப்பநிலையில் நான்கு மாதம் வரை கெடாமல் இருக்கும். குளிர் சாதனப் பெட்டியில் உள்ள பிரீசரில் வைத்தால் ஒரு வருடம் வரை கெடாமல் இருக்கும்.
பெண் மரங்களில் பாளை வெடித்ததிலிருந்து இரண்டு முதல் நான்கு நாட்கள் வரை மகரந்தச் சேர்க்கைக்கு உகந்த நேரம். சேமித்து வைத்திருக்கும் ஆண் மகரந்தத்தூளை இந்த நேரத்தில் பெண் மரங்களின் பாளையில் சேர்க்க வேண்டும். அதாவது ஒரு மடங்கு ஆண் மகரந்தத் தூள், 20 மடங்கு மைதாமாவு இரண்டையும் கலந்துகொள்ள வேண்டும். இதை நீளமான குழாய் பொருத்தப்பட்ட டப்பாவில் கொட்டி, பெண் பூவில் தெளித்துவிட வேண்டும். இப்படி மகரந்தச்சேர்க்கை செய்தால்தான் அனைத்து பூவும் பிஞ்சாக மாறும். இதன் குலை தென்னை மாதிரி கீழ்நோக்கி வளராமல் மேல்நோக்கி போகும். அதனால் பூ எடுத்த ஒரு மாதத்தில் மட்டையோடு சேர்த்து வளைத்து கட்டிவிடவேண்டும். தொடர்புக்கு:
அன்பழகன் - 96003 21911, சிவகுமார் - 90038 09797.
-கே.சத்யபிரபா, உடுமலைப்பேட்டை.

