/
இணைப்பு மலர்
/
விவசாய மலர்
/
வறட்சியில் தீவனம் வழங்குவது எப்படி?
/
வறட்சியில் தீவனம் வழங்குவது எப்படி?
PUBLISHED ON : ஏப் 03, 2019

அகத்தி, வேம்பு, பூவரசு, கருவேல், குடைவேல், பலா, கொடுக்காப்புளி, ஆல், அரசு, உதியன், இலந்தை போன்ற மரங்களின் இலைகளை வறட்சியின் போது தீவனமாகக் கால்நடைகளுக்கு தரலாம். மர இலைகளை தீவனமாக வழங்கும்போது சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். இதன்படி மர இலைகளை பிற புல் வகைகள் மற்றும் உலர்ந்த தீவனங்களுடன் சிறிது சிறிதாக கொடுக்க வேண்டும். வழங்குவதற்கு முன் 6:00 மணி முதல் 8:00 மணி நேரம் இலைகள் வாட வேண்டும். உலர வைத்து ஈரப்பதம் 15 முதல் 20 சதவீதம் உப்பு அல்லது வெல்லக் கரைசலை தெளிக்கலாம். இலைகளை விரும்பி சாப்பிடாத கால்நடைகளை விரும்பி சாப்பிடும் கால்நடைகளின் அருகில் கட்டி வைத்து தீவனமாக தரலாம். மாலை அல்லது இரவு நேரங்களில் தீவனமிட்டால் கால்நடைகள் நல்ல முறையில் உண்ணும்.
கால்நடைகளை கடும் வெயில் நேரத்தில் அதாவது காலை 11:00 மணி முதல் பகல் 2:00 மணி வரை மேய்ச்சலுக்கு அனுப்பக்கூடாது. நல்ல சுத்தமான குடிநீர் கிடைக்கச் செய்ய வேண்டும். தீவனத் தட்டைகளை சிறுசிறு துண்டுகளாக வெட்டி கொடுத்தால் கழிவுகள் குறையும். மழையின்றி வாடும் இளம் சோளப்பயிரில் மாடுகளை விட்டு மேய்க்கக்கூடாது.
இளம் சோளப்பயிரில் 'சைனிக் அமிலம்' நச்சுத்தன்மை உடையதால் இதனை சாப்பிடும் கால்நடைகள் இறக்க நேரிடலாம். முழுத் தீவனத்தையும் ஒரே நேரத்தில் கொடுக்காமல் இரண்டு, மூன்று தடவை பிரித்து கொடுக்கலாம். கால்நடைகள் பழக்கத்துக்கு அடிமையானவை எனவே, தீவனத்தில் திடீரென மாறுதல் செய்யக்கூடாது. ஒரே நேரத்தில் மொத்த தீவனத்தையும் கொடுத்தால் கால்நடைகளுக்கு வயிறு உப்புசம், அலர்ஜி போன்ற நோய்கள் ஏற்படும்.
தொடர்புக்கு 94864 69044.
- டாக்டர் வி. ராஜேந்திரன்
முன்னாள் இணை இயக்குனர்
கால்நடை பராமரிப்புத்துறை.

