PUBLISHED ON : ஜூலை 31, 2024

தினசரி உணவில் சாம்பல் பூசணி, பீர்க்கங்காய், புடலை, பாகல், பரங்கிக்காய் போன்ற கொடி வகைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இவற்றின் விதைப்பெருக்கத்திறன் 4 முதல் 15 சதவீதமே காணப்படுகிறது.
குறைந்த விதைப்பெருக்கத் திறனுள்ள இந்த கொடிவகை காய்கறி பயிர்களில் அதிக தரமுள்ள விதைகளை உற்பத்தி செய்ய நல்ல விதை உற்பத்தித் தொழில்நுட்பங்களை கடைப்பிடிக்க வேண்டும்.
அறுவடை செய்யும் முறை
சாம்பல் பூசணியில் விதைக்காக அறுவடை செய்யும் போது காய்களின் காம்புகள் காய்ந்து பழுப்பு நிறமடைந்த பின் தான் எடுக்க வேண்டும். காய்கள் நன்கு முதிர்ந்து முழுவதும் வெள்ளை படர்ந்து சாம்பல் போன்று இருக்கும் தருணத்தில் எடுத்தால் விதைகள் நல்ல முளைப்புத்திறன், வீரியத்துடன் இருக்கும். முதல் மற்றும் கடைசி ஒன்றிரண்டு அறுவடைகளை தவிர்த்து விட்டு இடைப்பட்ட அறுவடைகளில் இருந்து வரும் காய்கறிகளில் இருந்து மட்டுமே விதைகள் எடுக்க வேண்டும்.
அதிலும் நடுத்தரம், பெரிய காய்களையே விதை எடுப்பதற்கு பயன்படுத்த வேண்டும். காய்கள் நன்கு முதிர்ச்சி அடைந்த பின் ஒரு வாரம் முதல் 10 நாட்கள் கழித்த பின் அறுவடை செய்ய வேண்டும்.
பரங்கிக்காயில் விதைக்காக அறுவடை செய்யும் போது காய்களின் காம்புகள் காய்ந்து காய்கள் பளபளப்பாக வெளிர் மஞ்சள் நிறத்தில் காணப்படும். பாகல் பழங்கள் நன்கு பழுத்தபின் 5 முதல் 7 நாட்களில் அறுவடை செய்ய வேண்டும்.
ஓரிரு நாட்கள் வைத்திருந்து அதன் பின் விதைகளை பிரித்தெடுக்கலாம். காய்கள் முழுவதும் சிவப்பு நிறமாகும் வரை காத்திருந்தால் பழங்கள் வெடித்து விதைகள் வீணாகி விடும். பீர்க்கங்காய்கள் காய்ந்து பழுப்பு நிறமான பின் அறுவடை செய்ய வேண்டும்.
விதை பிரித்தெடுக்கும் முறை
சாம்பல் பூசணி, பரங்கியில் ஒன்றரை கிலோவுக்கு குறைவான எடையுள்ள காய்களை விதைக்காக தேர்ந்தெடுக்கக்கூடாது. அறுவடை செய்த பின் காயை இரண்டாக வெட்டி நடுவில் உள்ள விதையுடன் கூடிய சதைப்பகுதியை பிரித்து தண்ணீரில் அலச வேண்டும். தண்ணீரில் மிதக்கும் சதைப்பகுதி, பொக்குவிதைகளை அகற்ற வேண்டும்.
சாம்பல் பூசணியியை சிறு துண்டுகளாக வெட்டி விதையுடன் கூடிய சதைப்பகுதியை கூழாக்கி ஒரு பங்கு ஹைட்ரோகுளோரிக் அமிலத்துடன் ஆறுபங்கு நீர் கலந்து 30 நிமிடங்கள் ஊறவைக்க வேண்டும். இந்த முறையில் விதைகள் பிரிந்து உள்ளே மூழ்கிவிடும். மிதக்கும் சதைப்பகுதி, பொக்குவிதைகளை மீண்டும் அகற்ற வேண்டும்.
மூழ்கியிருக்கும் விதைகளை மூன்று முறை கழுவி உலரவைக்க வேண்டும். இந்த முறையில் விதைகளின் மேல் பூஞ்சாணங்களால் ஏற்படும் அழுக்கு நிறம் அகற்றப்பட்டு நிறம் மற்றும் வீரியம் கூடுகிறது.
பீர்க்கங்காயில் பிரித்தல்
பீர்க்கங்காயில் கீழ்ப்பகுதியை வெட்டி துளை செய்து விதைகளை எளிதாக பிரிக்கலாம். வெள்ளை மற்றும் வெளிர் மஞ்சள் நிறத்தில் முதிர்ச்சியடையாமல் உள்ள பொக்கு விதைகளை அகற்ற வேண்டும். பாகலில் நீளவாக்கில் வெட்டி சதையுடன் விதைகளை எடுத்து கையால் கசக்கினால் விதைகள் பிரிந்துவிடும். தண்ணீரில் அலசிய பின் உலர்த்த வேண்டும்.
கொடி வகை காய்களின் விதைகள் அதிகளவு ஈரப்பத சூழலில் இருப்பதால் முறைப்படி சூரியஒளியில் உலரவைக்க வேண்டும். காலை 8:00 முதல் மதியம் 12:00 மணி, மதியம் 3:00 முதல் மாலை 5:00 மணி வரையில் விதைகளை மேலும் கீழும் திருப்பி விட்டு ஈரமின்றி உலர்த்துவது நல்லது. கீழ்ப்பகுதி விதைகளின் ஈரம் குறையாதிருந்தால் பூஞ்சாணம் தோன்றி விதைகளின் வீரியம் குறையும் வாய்ப்புள்ளது. விதைகளை 4ம் எண் கம்பி வலை சல்லடை அல்லது வட்டக்கண் சல்லடைகள் கொண்டு சலிக்க வேண்டும். சல்லடை மேலே தங்கும் தரமான அடர்த்தியான விதைகளை மட்டும் பயன்படுத்த வேண்டும்.
-சுஜாதா துறைத்தலைவி அலெக்ஸ் ஆல்பர்ட் இணைப்பேராசிரியர் இளம்பரிதி, முதுநிலை ஆராய்ச்சி மாணவர்விதை அறிவியல் மற்றும் நுட்பவியல் துறை
மதுரை விவசாய கல்லுாரி