PUBLISHED ON : ஜன 30, 2013

இந்தியாவில் நாம் குரங்கினை அனுமானின் வடிவமாகக் கருதுவதால் பெரும்பான்மையினர் குரங்கினால் தொந்தரவுக்கு ஆளானாலும் அவற்றை அடிப்பதில்லை. குரங்குகள் மனிதர்கள் வாழும் கிராமங்கள், தோப்புகள் மற்றும் கோயில்கள் ஆகியவற்றை இருப்பிடமாகக் கொண்டுள்ளதால் மனிதர்கள் அடிக்கடி குரங்கினால் தொந்தரவுக்கு ஆளாகின்றனர்.
பலதரப்பட்ட குரங்கினங்கள் இந்தியாவில் இருந்தாலும் தமிழகத்தைப் பொறுத்தமட்டில் குறிப்பாக நாட்டுக்குரங்குகள் மற்றும் அனுமான் குரங்கு ஆகிய இனங்களே பல விவசாயப் பகுதிகள் மற்றும் கிராமங்களில் பிரச்னைகள் ஏற்படுத்தக்கூடியவையாக உள்ளன.நாட்டுக்குரங்கு:
இவ்வினம் வயல்வெளி, கோயில் பகுதி மற்றும் கிராமப்பகுதியில் அதிகமாகக் காணப்படும். பொதுவாகத் தென்னிந்தியா முழுவதும் இவை காணப்படும். இதன் சினைக்காலம் 6 மாதங்களாகும். இவை சுமார் 8 வருடங்கள் வரை உயிர்வாழும்.அனுமான் குரங்கு:
நாட்டுக்குரங்கு போல மிகுதியான எண்ணிக்கையில் இவை கிடையாது. கீழ்க்கண்ட வழிமுறைகளைக் கடைபிடிப்பதன் மூலம் கிராமப்பகுதிகளில்குரங்குகள் தரும் தொந்தரவுகளை விவசாயப்பெருமக்கள் தவிர்க்க முற்படலாம்.செய்ய வேண்டியவை:
1. குறிப்பாகக் கோயில் பகுதியில் இவ்வகைக் குரங்குகள் காணப்படும்பொழுது, அருகில் இருக்கும் குடிநீர்த் தொட்டிகளை உரிய முறையில் மூடிவைக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் குரங்குகளில் இருந்து மனிதர்களுக்குப் பரவக்கூடிய எலிக்காய்ச்சல் போன்ற நோய்களைத் தவிர்ப்பது சாத்தியமாகிறது. 2. குரங்குகள் விவசாயப் பகுதிகளிலோ அல்லது கிராமப் பகுதிகளிலோ ஊடுருவித் திரியும் பட்சத்தில் உடனடியாக வனத்துறையினருக்குத் தகவல் அளித்து, ஆவன செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும். 3. தங்கள் பகுதிகளில் சுதந்திரமாகச் சுற்றித்திரியும் இவ்வகைக் குரங்கள் இருந்தால் அவற்றின் மலக்கழிவுகளை குறிப்பாகக் கையுறை அணிந்தோ அல்லது நீண்ட கைப்பிடி உள்ள கரண்டியின் மூலமாகவோ எளிய முறையில் அப்புறப்படுத்துதல் அவசியம். இவ்வாறு செய்வதால் குரங்குகள் மற்றும் அதன் மலக்கழிவுகளில் இருந்தும் பரவக்கூடிய ஸ்ட்ராங்கைல் லோய்டோசிஸ் (குடற்புழுக்கள்) மற்றும் இதர உண்ணிகளால் ஏற்படும் நோய்களைத் தவிர்ப்பது சாத்தியப்படுகிறது.
4. குரங்கோ அல்லது குரங்குக் கூட்டங்களையோ பார்க்கும்போது அவற்றினை நேரடியாக எதிரில் நின்று பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும். அவ்வாறு செய்யாத பட்சத்தில் அவை உங்களைத் தாக்குவதற்கு முற்படலாம். 5. குரங்குகளினால் கடிபட்டுவிட்டால் கடிபட்ட இடத்தை மருத்துவரிடம் காண்பித்து உரிய சிகிச்சையினைப் பெறுதல் அவசியம். 6. இதுபோன்று குரங்கு அல்லது குரங்குகள் நீங்கள் வளர்க்கும் கால்நடைகளைக் கடித்துவிட்டால் தாமதிக்காமல் அருகில் இருக்கும் கால்நடை மருத்துவமனைக்குக் கொண்டுசென்று உரிய சிகிச்சையினைப் பெறவேண்டும். 7. இறந்துகிடக்கும் குரங்கு ஒன்றினை தனியாகவோ அல்லது கூட்டத்துடனோ காணும்போது அருகில் இருக்கும் கால்நடை மருத்துவருக்கும் வனத்துறையினருக்கும் உடனடியாகத் தகவல் அளிக்க வேண்டும்.செய்யக்கூடாதவை:
1. கிராமத்திற்குள் அல்லது விவசாயப் பகுதிகளில் நுழைந்துவிட்ட குரங்குகளை முரட்டுத்தனமாக நம் கையில் பிடித்து விளையாடலாம் என்று எண்ணிச் செயல்படுவது. அவ்வாறு செய்ய முற்பட்டால் இந்தக் குரங்குகள் எளிதில் கடித்துவிடும். இவ்வாறு கடிபடுவதன்மூலம் வெறிநோய், ரணஜன்னி மற்றும் இதர நோய்கள் உங்களுக்குப் பரவ வாய்ப்புகள் அதிகம் உள்ளன. 2. எந்தக் காரணம் கொண்டும் குரங்குகளைப் பிடித்து அடைத்துவைப்பது அல்லது வளர்ப்பது இந்திய வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின்படி குற்றமாகும். 3. கிராமப்பகுதிகளில் எந்த ஒரு விவசாயக் குடிமகனும் தனியாகவோ அல்லது கூட்டமாகவோ இவ்வகைக் குரங்குகளைக் காணும் பட்சத்தில் கற்களைக் கொண்டு எறிவதையோ, கம்புகளால் அடித்து துன்புறுத்துவதையோ அறவே தவிர்த்தல் வேண்டும். 4. கிராமத்தில் நுழைந்துவிட்ட குரங்குகளுக்கு உணவுப்பொருட்களை அளிக்க முற்பட்டால் குரங்கோ அல்லது குரங்கு கூட்டமோ விரைவில் அப்பகுதியினை விட்டு அகலாது. மற்றும் நீங்கள் அளிக்கக்கூடிய உணவுப்பொருட்களால் வயிறு மற்றும் குடல் சம்பந்தமான உடல்நலச் சீர்கேடுகள் வர வாய்ப்புகள் அதிகம் உள்ளன. 5. இயற்கையாகவே குரங்குகள் அதிகமாகக் காணப்படும் வனப்பகுதிகளைச் சுற்றியுள்ள கிராமங்களின் விளைநிலங்களில் குரங்குகளுக்குப் பிடித்தமான வாழை, பலா, மா போன்ற தீவன வகைகளைப் பயிரிடுவதை கூடியவரையில் தவிர்த்தல் வேண்டும் அல்லது தகுந்த பாதுகாப்பு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். 6. குரங்கினால் கடிபட்டால் உரிய சிகிச்சை பெறாமல் அலட்சியமாக இருத்தல் கூடாது. எனவே தங்கள் பகுதிகளில் குரங்குகள் நுழைந்துவிட்டால் வனத்துறையினருக்குத் தகவல் அளிக்க வேண்டியது தங்கள் கடமை என்பதனை விவசாயப் பெருமக்கள் அறிந்துகொள்ள வேண்டும். மேற்கூறிய வழிமுறைகளைக் கையாண்டு, வனவிலங்குகளைக் காப்போம் என அனைவரும் உறுதி செய்வோம். (தகவல்: ம.க.ஜெயதங்கராஜ், கால்நடைமருத்துவர், கால்நடை மருத்துவக்கல்லூரி, சென்னை).
-கே.சத்தியபிரபா, உடுமலை.