PUBLISHED ON : ஆக 16, 2023

கீரை வகைகளில் முக்கியமானது அகத்தி, செடிமுருங்கை, கறிவேப்பிலை, புதினா, துாதுவளை போன்றவை.
உடலில் ஏற்படும் சரும பிரச்னைகளுக்கும் உடலில் இருக்கும் சத்து குறைபாடுகளை தீர்ப்பதற்கும் கீரை வகைகள் உதவுகின்றன. மனிதர்கள் மட்டுமின்றி கால்நடைகளுக்கும் கீரைகள் சிறந்த உணவாக பயன்படுகிறது. அகத்திக்கீரையை உணவில் சேர்த்து கொள்வதன் மூலம் உடலில் ஏற்படும் தேவையற்ற அரிப்பு நீங்கும். வயிற்றில் உண்டாகும் புழுக்களை அழிக்கும். வாய்ப்புண்ணை நீக்கும் குணம் கொண்டது அகத்திக்கீரை.
உடலில் இருக்கும் நச்சுத்தன்மையை நீக்கும் வல்லமை கொண்டதால் வாரம் ஒருமுறை மட்டுமே கால்நடைகளின் தீவனத்தில் அகத்திக்கீரை கலந்து கொடுக்க வேண்டும். நாமும் வாரம் ஒரு முறை அல்லது மாதம் இருமுறை உணவில் சேர்க்கலாம். இதில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து அதிகளவில் உள்ளது.
பண்ணை முறையில் ஆடு, மாடு, கோழி, முயல், வாத்து, பன்றி வளர்ப்பவர்கள் அகத்தி செடியை பயிரிடலாம். அகத்தியின் முதிர்ந்த இலைகளை விலங்குகளுக்கும், இளம் இலைகளை நாமும் பயன்படுத்தலாம்.
விதை பெருக்கம் செய்யும் முறை
இக்கீரையை விதைகள் மூலமும் வளர்க்க முடியும். அகத்தியில் வெள்ளை, சிவப்பு வகைகள் உள்ளன. அகத்திக்கீரையை ஒரு அடி முதல் 2 அடி இடைவெளியில் வரிசையாக விதைத்து வளர்க்கலாம். வேலியோரங்களிலும் பயிரிடலாம். மரமாக வளரும் வகையைச் சேர்ந்ததால் 3 முதல் 4 அடி இருக்குமாறு புதர் போல் வளர்த்தால் பராமரிப்பும் அறுவடை செய்வதும் எளிதாக இருக்கும். எனவே அதன் நுனியை உடைத்து பராமரிக்க வேண்டும். இலை மட்டுமின்றி பூவும் சிறந்த உணவாகும். இந்த செடி அனைத்து விதமான மண்ணிலும் வளரும். மாடித் தோட்ட முறையில் தொட்டியிலும் வளர்க்கலாம்.
சாகுபடி செய்ய விரும்புவோர் விதை முளைப்புத் திறனை அறிந்து விதைத்தால் தேவையான பயிர் எண்ணிக்கையை பராமரிக்க முடியும். விவசாயிகள், விதை உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் தங்களிடம் உள்ள அனைத்து வகையான விதைகளின் தரத்தை அறிந்து கொள்ள மதுரை நாகமலை புதுக்கோட்டையில் உள்ள அரசு விதைப்பரிசோதனை நிலையத்தை அணுகலாம். விதை மாதிரி ஒன்றுக்கு ரூ.80 செலுத்தி பரிசோதனை செய்யலாம்.
- மகாலட்சுமி, விதைப்பரிசோதனை அலுவலர்
ராமலட்சுமி, கமலாராணி வேளாண் அலுவலர்
விதைப் பரிசோதனை நிலையம்,
நாகமலை புதுக்கோட்டை, மதுரை
0452 - 245 8773
