/
இணைப்பு மலர்
/
விவசாய மலர்
/
மனோரஞ்சிதம் சாகுபடியில் புதுமை: சாதிக்கும் மதுரை விவசாயிகள்
/
மனோரஞ்சிதம் சாகுபடியில் புதுமை: சாதிக்கும் மதுரை விவசாயிகள்
மனோரஞ்சிதம் சாகுபடியில் புதுமை: சாதிக்கும் மதுரை விவசாயிகள்
மனோரஞ்சிதம் சாகுபடியில் புதுமை: சாதிக்கும் மதுரை விவசாயிகள்
PUBLISHED ON : பிப் 12, 2014

மதுரை அருகே வேடர்புளியங்குளத்தில், மனோரஞ்சிதம் பூ சாகுபடியில் விவசாயிகள் சாதனை படைத்து வருகின்றனர்.
இறைவனுக்கு உகந்த பூவாகவும், அறை அலங்கார வாசத்தில் முதன்மை பூவாகவும் கருதப்படும் இது, குறிப்பிட்ட ஒரு சில இடங்களில் மட்டுமே சாகுபடி செய்யப்படுகிறது. நல்ல மண்வளம், நீர்வளம் உள்ள இடங்களில் செழிப்பாக வளரும் தன்மை கொண்ட மனோரஞ்சிதம், இடைவெளி இல்லாமல் பலன் தரும் தன்மை கொண்ட பணப்பயிராக விவசாயிகளுக்கு வாழ்வளிக்கிறது.
மற்ற எல்லா பூக்களுமே எடை விலைக்கு விற்பனை செய்யப்படும் போது, இது மட்டும் எண்ணிக்கையின் அடிப்படையில் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. வேடர்புளியங்குளத்தில் மனோரஞ்சிதம் பூ சாகுபடியில் 20 ஆண்டுகள் அனுபவம் பெற்ற விவசாயி தம்பதிகள் இருளாண்டி, பாப்பாத்தி. இவர்களின் தோட்டத்தில் மல்லிகை சாகுபடி செய்த போது, வரப்புகளில், இந்த தம்பதிகளின் மகன் ஆறுமுகம், விதைகள் எடுத்து வந்து நடவு செய்த செடிகள் எல்லாம் இன்று மரம் போல் உயர்ந்து வளர்ந்துள்ளது. இது ஒரு பலன் தராத செடி என, அப்போது இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
பாப்பாத்தி சொல்கிறார்...
இந்த தோட்டத்தை உருவாக்கிய ஆறுமுகம், சில நாட்களுக்கு முன் ஒரு விபத்தில் சிக்கி, எங்களை விட்டு பிரிந்து விட்டான். இதை நடவு செய்யும் போது அவன் சொல்வான்... 'வயதான காலத்தில் பிள்ளைகள் உதவுவது போல், இதன் பூக்கள் உங்களுக்கு உதவும்' என்றான். அது தான் உண்மை. எங்கள் குடும்பத்தை வறுமையின் பிடியில் இருந்து காப்பாற்றியது இந்த பூக்கள் தான்.
முதலில் 20 செடிகள் தான் இருந்தது. அதன் பின் அதன் கிளைகளை பதிய வைத்து, இப்போது அடர்ந்து வளர்ந்து விட்டது. தினமும் இரண்டு நேரம் தண்ணீர் பாய்ச்சுவோம். இயற்கை உரங்கள் போடுகிறோம்.
தினமும் நூற்றுக்கணக்கான பூக்கள் பறிக்கிறோம். மதுரை மாக்கெட்டில் ஒரு பூ ரூ.3 முதல் ரூ.10 வரை விற்பனையாகும். இந்த பூக்களை பறிப்பது என்பது என்பது சாதாரண விஷயம் அல்ல. அதன் காம்பை கிள்ளி எடுக்கும் போது அருகில் அடுத்த மொட்டு இருக்கும் அதை கவனித்து எடுக்க வேண்டும். உயர்ந்த மரங்களில் பூக்களை பறிப்பது சிரமம்.
பழுத்த நிறத்தில் இருக்கும் பூக்களை பறித்த உடன் தண்ணீரில் போட்டு, அதன் பின் ஈரத்துடன் பாக்கெட்டுகளில் அடைத்து மார்க்கெட்டிற்கு அனுப்புவோம்.
இதன் காய்கள் பழுத்தால் மாம்பழம், கொய்யாப்பழம் போல் வாசம் வீசும்.
மாலை நேரத்தில் பறிக்கும் பருவத்தில் உள்ள பூக்களின் வாசம் தோட்டத்தில் நிறைந்திருக்கும்.
அடர்த்தியாக இந்த செடிகள் வளர்ந்திருந்தால் அதன் கீழ்பகுதிகளில் பாம்புகள் இருப்பது சகஜமானது. பூக்கள் பறிக்க செல்லும் போது அவை ஓடிவிடும்.
பிற மலர் சாகுபடிகளை விட, இந்த மனோரஞ்சிதப்பூ சாகுபடி விவசாயிகளுக்கு லாபத்தை தரும். பதியம் செய்து நடவு செய்தால், ஒரு சில ஆண்டுகளில் பூக்கள் வரும். விதைகள் மூலம் நடவு செய்தால் நான்கு, ஐந்து ஆண்டுகளுக்கு பின் தான் பூக்கள் பூக்கும், என்கிறார், இந்த சாதனை விவசாயி.

