PUBLISHED ON : செப் 25, 2013

1. சோள தண்டு துளைப்பான்: இந்த தண்டு துளைப்பான் இளநாற்றுகளையும் வளர்ந்த சோளப்பயிரினையும் தாக்கி சேதப்படுத்தும். இந்த தண்டு துளைப்பான் தாய் பூச்சி சோள இலைகளின் அடிப்பகுதியில் நடுநரம்பின் பக்கத்தில் ஒன்றின் மேல் ஒன்ற எகிறினால்போல் குவியல்களாக முட்டைகளை இடும். முட்டையிட்ட ஏழு நாட்களில் வெளிவரும் இளம் புழுக்கள் சோள இலைகளை சுரண்டி உண்டு, பின்னர் தண்டை துளைத்து உட்சென்று குருத்துப்பாகத்தின் திசுக் களை உண்டு சேதப்படுத்துவதால் குருத்து துண்டிக்கப்பட்டு நாற்று மடிந்துவிடும். வளர்ந்த சோளப்பயிரை தாக்கும்போது புதிதாக வெளிவரும் இலை விரியும்போது, நடுநரம்பின் இருபுறமும் சமதூரத்தில் துளைகள் காணப்படும். தாக்கப்பட்ட சோளப்பயிரிலிருந்து தோன்றும் கதிர் பதராகிவிடும்.
வளர்ச்சி அடைந்த புழுக்கள் பழுப்புநிற தலையை கொண்டும், முன்மார்பு கண்டத்தில் பழுப்புநிற கேடயம் போனற கெட்டியான பகுதியை கொண்டும், உடலில் கருமைநிற புள்ளிகளை கொண் டும் மஞ்சள் கலந்த நிறத்தில் காணப்படும். தாய்பூச்சி மஞ்சள் கலந்த புழுப்பு நிறத்திலும், வைக்கோல் நிறம் கொண்ட முன் இறக்கைகளின் விளிம்பில் இரண்டு வரிசை கரும்புள்ளிகளை கொண்டும் பின் இறக்கைகள் வெண்மை நிறமாக இருக்கும்.
2. சோளக்குருத்து ஈ: இந்த குருத்து ஈயின் புழுக்கள் ஒரு மாத வயதுக்குட்பட்ட இளம் சோளப்பயிர்களை மட்டுமே சேதப்படுத்தும். குருத்து ஈ வெண்மையான, நீண்ட குழாய் வடிவிலான முட்டைகளை இலையின் அடிப்பரப்பில் அல்லது இலை உறைகளில் இடும். முட்டையிலிருந்து 1-2 நாட்களில் வெளிவரும் புழுக்கள் இலையின் மேற்பரப்பிற்கு வந்து பின்னர் இலை உரைக்கும் தண்டிற்கும் இடையே துளைத்து குருத்து பகுதியை அடைந்து திசுக் களை உண்டு சேதப்படுத்துவதால் குருத்து துண்டிக்கப்பட்டும் அழுகியும் தாக்கப்பட்ட சோளப்பயிர் மடிந்துவிடும். குருத்து ஈ மிகச்சிறியதாகவும் வெண்மை கலந்த சாம்பல் நிறத்தில் இருக்கும்.
3. சோளக் கதிர் ஈ: கதிர் ஈயின் பெண் ஈக்கள் முட்டைகளை பூக்களில் தன்னந்தனியாக சொருகிவிடும். முட்டையிலிருந்து வரும் புழுக்கள் பால்பிடிக்கும் தருணத்தில் தானியத்தை துளைத்து உட்சென்ற சோள உணவினை உண்டு சேதம் விளைவிக்கின்றன. தாக்கப்பட்ட சோள தானியங்களை அழுத்தினால் ஒருவித சிவப்பு நிற திரவம் வெளிவரும். தாக்கப்பட்ட தானிய மணி சிறுத்து, சுருங்கி பதராகிவிடுவதுடன் பதரான தானியங்களில் புழு துளைத்த துவாரம் காணப்படும். புழுக்கள் இளம் சிவப்பு நிறமாகவும், கால்களற்றும் தென்படும். ஈக்கள் ஆரஞ்சு நிறமாகவும், இளஞ்சிவப்பு நிற வயிற்று பாகத்தையும் ஒளி புகக்கூடிய, மெல்லிய இறக்கைகளை கொண்டும் கொசுவைப்போல் சிறியதாக நலிந்து காணப்படும்.
4. சோளக்கதிர் நாவாய் பூச்சி: பெண் பூச்சி இளம் நீல நிறமுள்ள, சுருட்டு போல் நீளமான முட்டைகளை குவியலாக பூக்களினுள் சொருகிவிடும். முட்டையிலிருந்து 5-6 நாட்களில் வளர்ச்சியடைந்த பூச்சிகள் போன்றும் இறக்கையில்லாமலும், மஞ்சள் கலந்த பச்சை நிறத்துடன் இளம் பூச்சிகள் வெளிவரும். அவைகள் வளரும்போது 4-5 முறை தோல் உரித்து இறக்கைகள் கொண்டவைகளாகவும், வெளிர் பச்சை நிறத்திலும் குச்சிபோல் நீல நிறமாகவும், நீண்ட கால்களைக் கொண்டும் வளர்ந்த பூச்சிகள் காணப்படும். இளம் பூச்சிகளும் வளர்ந்த பூச்சிகளும் பால்பிடிக்கும் நிலையிலுள்ள சோள தானியங்களை தாக்கி உள்ளிருக்கும் சாற்றை உறிஞ்சி சோள மணிகளை சுருக்கி பதராக்கிவிடும். ஒரு கதிரிலேயே இளம் பூச்சிகளும் வளர்ந்த பூச்சிகளும் காணப்படும்.
5. பூச்சி கட்டுப்பாடு: பூச்சி தாக்குதல் அறிகுறிகள் மற்றும் சோளப்பயிர்களில் காணப்படும் பூச்சியின் முட்டைகள், புழுக்கள், அந்தி பூச்சிகள் போன்றவைகளை காண நேர்ந்தால் பொருளாதார ஆரம்ப சேதநிலையினை எட்டியவுடன் விவசாய விஞ்ஞானிகளை நேரில் சந்தித்து அவரது சிபாரிசின் பிரகாரம் உழவியல் முறை, மருத்துவமுறை, உயிரியல் முறை போன்ற பூச்சிக்கட்டுப்பாட்டு முறைகளை மேற்கொண்டு பூச்சி, புழுக்களின் தாக்குதலை கட்டுப்படுத்தலாம். பூச்சி பீடைகளின் தாக்குதல் பொருளாதார சேதநிலையினை அடைந்தால் பொருளாதார ரீதியாக இழப்பையும், நஷ்டத்தையும் தவிர்க்க முடியாது. மேற்கோள்: பயிர்களை தாக்கும் பூச்சிகளும் பீடைகளும் - ஹெச் லிவின் தேவசகாயம்.
டாக்டர் கே.கிருஷ்ணமூர்த்தி,
95859 50088.

