
மதுரை செல்லம்பட்டி ஒன்றியம் நரியம்பட்டியைச் சேர்ந்த வழக்கறிஞர் பூமிநாதன், வங்கி கடன் பெற்று ஒருங்கிணைந்த பண்ணையம் அமைத்து பரண்மேல் ஆடு, மாடு, நாட்டுக்கோழி வளர்த்து நல்ல வருமானம் பார்த்து வருகிறார்.
படித்தவர்கள் விவசாய வேலையை புறக்கணிக்கும் காலத்தில் பொற்றோருடன் சேர்ந்து ஒருங்கிணைந்த பண்ணை அமைத்தது குறித்து அவர் கூறியதாவது:
ஐந்து ஏக்கர் நிலத்தில் நெல் போன்ற பயிர்கள் போட்டு விவசாயம் செய்து வந்தோம். வழக்கறிஞர் படிப்பு முடித்தவுடன் பெற்றோர்களின் விவசாயத்தை சிறப்பாகச் செய்ய வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது.
விவசாயம் சார்ந்த பயிற்சி மேற்கொண்டபோது, ஒருங்கிணைந்த பண்ணையம் அமைக்க முடிவு செய்தேன். வங்கி கடனுதவியுடன் பணியை துவக்கினேன்.
பரண்மேல் ஆடு, மாடுகளுக்கு தனி கொட்டகை, மீன் வளர்க்க தொட்டி, கோழி, தேனீ வளர்ப்பு என பண்ணை உருவானது. கோ 5 தீவனம் ஒரு ஏக்கர், அகத்தியில் ஊடு பயிராக வேலி மசால் ஒரு ஏக்கர், ஏற்கனவே இருந்த ஒரு ஏக்கர் தென்னையுடன் மீதம் இருந்த இரண்டு ஏக்கரில் நெல் போன்ற பயிர்கள் செய்ய ஒதுக்கி பணிகளை துவக்கினேன். தீவன பயிர்களான கோ 5, வேலிமசால் நீண்ட கால பயிர்கள். ஒருபக்கம் அறுவடை செய்து கொண்டே போனால், அடுத்த ரவுண்டு வருவதற்குள் முதல் பகுதி வளர்ந்து விடும், செலவும் குறைவு தான்.
ஐந்து மாடுகள் மூலமாக தினமும் 25 - 35 லிட்டர் பால் கிடைக்கிறது. வளர்ந்த ஆடுகளை விற்பனை செய்து தொடர்ந்து வரும் குட்டிகளை வளர்க்கிறேன். நாட்டுக்கோழியை மொத்தமாக வாங்கி செல்கின்றனர். தண்ணீர் பற்றாக்குறையால் மீன் வளர்ப்பு தள்ளி போகிறது. தேனீ வாங்கிய பெட்டிகளில் சில பெட்டிகளில் ராணி தேனீ வெளியேறியதால் ஒருசில பெட்டிகளில் தேனீக்கள் வளர்கிறது.
தேவைக்கு அதிகமாக உள்ள தீவனப்பயிர்களை கால்நடை வளர்க்கும் விவசாயிகள் வாங்கிச் செல்கின்றனர். வேலி மசால் விதைகளை சேகரித்து விவசாயிகளுக்கு குறைந்த விலைக்கு விற்கிறேன். ஆடு, மாடு சாணங்களை என் நிலங்களுக்கு பயன்படுத்தியது போக மீதம் உள்ளவற்றிற்கும் விலை கிடைக்கிறது.
பண்ணையை பார்வையிட வருபவர்கள் சில நாட்கள் தங்கி பயிற்சி பெறுவர். அதற்காகவே பண்ணையில் பயிற்சி மையம் துவங்கி மாதம் தோறும் பயிற்சிபெற வருபவர்களுக்கு பயிற்சி அளிக்க ஏற்பாடுகள் செய்து வருகிறேன்.
தீவனங்களுக்கு தனியாக செலவு இல்லாத நிலையில், குடும்பத்தினர்களே முடிந்த அளவு பணிகளை பகிர்ந்து கொள்வதால் நல்ல வருமானம் கிடைக்கிறது. வருமானத்தை கொண்டு வாங்கிய கடனுக்கு தவறாமல் தவணை கட்டியது போக மீதமுள்ள பணத்தை விரிவாக்க பணிக்கு செலவிடுகிறேன், என்றார்.
தொடர்புக்கு 98421 79980
-ப.மதிவாணன், உசிலம்பட்டி.

