/
இணைப்பு மலர்
/
விவசாய மலர்
/
ஈமு கோழிப்பண்ணை அமைக்க விருப்பமா?
/
ஈமு கோழிப்பண்ணை அமைக்க விருப்பமா?
PUBLISHED ON : ஏப் 27, 2011

ஈமு கோழிகள் ரேட்டைட் இனத்தைச் சேர்ந்தவை. இப்பறவைகள் அவற்றின் விலைமதிப்புமிக்க இறைச்சி, முட்டைகள், தோல், தோலிலிருந்து பெறப்படும் எண்ணெய் மற்றும் இறகுகள் போன்றவற்றுக்காக வளர்க்கப்படுகின்றன. இப்பறவைகள் எந்த தட்பவெப்ப நிலையையும் தாங்கி வளரக்கூடியவை. ஈமு மற்றும் ஆஸ்டிரிச் பறவைகள் ஒரே சமயத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டாலும் ஈமு வளர்ப்பே அதிகம் பிரபலமடைந்து வருகிறது.
ஈமு, ஆஸ்டிரிச், ரியா, கேசோவரி மற்றும் கிவி ஆகிய பறவைகள் ரேட்டைட் இனத்தைச் சார்ந்தவை. இவற்றுள் ஈமு மற்றும் ஆஸ்டிரிச் கோழிகள் உலகத்தின் பல பகுதிகளில் அவற்றின் இறைச்சி, தோல், தோலிலிருந்து பெறப்படும் எண்ணெய், இறகுகள் ஆகியவற்றுக்காக வணிக ரீதியாக வளர்க்கப் படுகின்றன. இப்பறவைகள் வெப்பமான நாடுகளிலும், குளிர் பிரதேசங்களிலும் வளரக்கூடியன. இப்பறவைகள் திறந்தவெளியிலும், தீவிர முறையிலும் வளர்க்கப் படுகின்றன. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, சீனா போன்ற நாடுகள் ஈமு கோழி வளர்ப்பில் முதலிடம் வகிக்கின்றன.
ஈமு கோழிகளின் உடலமைப்பு: ஈமுக்கள் நீண்ட கழுத்து, சிறிய தலையையும், கால்களில் மூன்று விரல்களையும் கொண்டதாக இருக்கும். மூன்று மாத வயது வரை ஈமுக்களின் உடலில் இறகுகள், நீண்ட கோடுகள் போன்று காணப்படும். ஆனால் இந்த கோடுகள் 4-12 மாத வயதில் மறைந்து, பழுப்பு நிறமாக மாறிவிடும். வளர்ந்த ஈமு பறவைகள் 6 அடி உயரமும் 45-60 கிலோ உடல் எடை உடையனவாகவும் இருக்கும். கால்கள் மிக நீண்டவையாக இருக்கும். அவற்றின் காலின் தோல் மிக மொத்தமாகவும், செதில்களுடனும் காணப்படுவதால் மிக உறுதியாக இருக்கும். ஈமுக்களின் இயற்கையான உணவு பூச்சிகள், செடிகளின் இலைகள், பழங்கள் மற்றும் காய்கறிகளாகும். பெண் ஈமு பறவைகள் ஆண் பறவைகளைவிட பெரியதாக இருக்கும். ஈமுக்கள் முப்பது வருடம் வரை வாழக்கூடியவை. ஈமுக்களை மந்தையாகவோ அல்லது ஆண், பெண் பறவைகளாக ஜோடிகளாகவோ வளர்க்கலாம்.
ஈமுவிலிருந்து கிடைக்கும் பொருட்கள்: ஈமு கோழிக்கறி குறைந்த கொழுப்புச்சத்து கொண்டது. மேலும் மேல் தோல் மென்மையாகவும் உறுதியாகவும் இருக்கும். ஈமுக்களின் கால்தோல் சிறப்பான அமைப்பினைக் கொண்டிருப்பதால் அதிக விலைமதிப்பு கொண்டது. ஈமுக்களின் கொழுப்பிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் உணவுக்காகவும் மருந்தாகவும், அழகு சாதன பொருட்கள் தயாரிக்கவும் பயன்படுகிறது.
ஈமு கோழிகளின் பண்ணைப் பொருளாதாரம்: ஈமு கோழிகளின் பண்ணைப் பொருளாதாரத்தினைப் பற்றி மேற்கொண்ட ஒரு ஆய்வின் மூலம் மூலதன செலவில் 68% கோழிகளை வாங்குவதற்கும், 13% பண்ணையை அமைப்பதற்கும், 19% குஞ்சு பொரிப்பகத்தினை அமைப்பதற்கும் செலவாகிறது என கணக்கிடப்பட்டுள்ளது. மேலும், ஒரு கருவுற்ற முட்டையினை உருவாக்குவதற்கு ரூ.793 எனவும் ஒரு நாள் குஞ்சு ஒன்று உற்பத்தி செய்வதற்கு ரூ.1232 செலவாகிறது எனவும் கணக்கிடப்பட்டுள்ளது.
ஒரு ஜோடி ஈமு கோழி வருடத்திற்கு ஆகும் தீவனச்செலவு ரூ.3578. ஒரு நாள் வயதடைந்த ஈமு கோழிக்குஞ்சு ஒன்றின் விற்பனை விலை ரூ.2500 - 3000. எனவே, ஈமு கோழிப் பண்ணையினை லாபகரமாக நடத்த முட்டைகளின் குஞ்சு பொரிக்கும் திறன் 80 சதவீதத்திற்கு அதிகமாகவும் தீவனச்செலவு குறைவாகவும் குஞ்சு பருவத்தில் இறப்ப சதவீதம் 10 சதவீதத்திற்கும் குறைவாகவும் இருக்க வேண்டும்.
தொடர்புக்கு: ஆர்.ஜி.ரீஹானா, 268/77, ஓல்ட் ஹவுசிங் யூனிட், எல்லீஸ் நகர், தாராபுரம்-638 657.
-ஆர்.ஜி.ரீஹானா, எம்.எஸ்சி., எம்.பில்., அக்ரி கிளினிக், 89037 57427.

