/
இணைப்பு மலர்
/
விவசாய மலர்
/
கரும்பில் இடைக்கணுப் புழு கட்டுப்பாடு
/
கரும்பில் இடைக்கணுப் புழு கட்டுப்பாடு
PUBLISHED ON : ஆக 07, 2013
இடைக்கணுப் புழுவை உயிரியல் முறையில் கட்டுப்படுத்த கரும்பு அபிவிருத்தி ஆராய்ச்சி திட்டத்தின் கீழ் மத்திய அரசிடமிருந்து நிதியுதவி பெறப்பட்டு வெப்பத்தை தாங்கி இடைக்கணுப் புழுவைக் கட்டுப்படுத்த கூடிய டிரோக்கோகிரம்மா கைலோனிஸ் என்னும் முட்டை ஒட்டுண்ணியை உயிரியல் ஆய்வு மையம் மற்றும் சன் அக்ரோபயோடக் நிறுவனத்தின் மூலமாக இந்தியாவிலுள்ள குறிப்பாக தென் மாகாணத்திலுள்ள தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் உள்ள பன்னிரண்டு சர்க்கரை ஆலைகளில் ஜூலை மாதம் முதல் வெளியிடப்பட்டு இடைக்கணுப் புழு கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலை, சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை, திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை மற்றும் ஆருரான் சர்க்கரை ஆலைகளிலும் ஆந்திராவில் கே.சி.பி, சுடலகுண்டா எம்பி மற்றும் நவபாரத் சர்க்கரை ஆலைகளிலும் கர்நாடகாவில் பன்னாரி அம்மன் சாமூண்டீஸ்வரி, விஜய்நகர் மற்றும் என்எஸ்எல் சர்க்கரை ஆலைகளிலும் கரும்பு அபிவிருத்தி ஆராய்ச்சி திட்டத்தின் கீழ் மாதிரி வயல்களில் வெப்பத்தை தாங்கி இடைக்கணுப் புழுவை அழிக்கக் கூடிய டிரைக்கோகிரம்மா கைலோனிஸ் ஒட்டுண்ணி பலவித அளவுகளில் வெளியிடப்பட்டு வருகிறது.
இடைக்கணுப் புழுவானது கரும்பை நான்குமாதம் முதல் அறுவடை வரையிலும் தொடர்ந்து தாக்குகிறது. இப்புழு கரும்பை இரண்டு விதமாக தாக்குகிறது. கரும்பில் பச்சை சோகைகள் மூடியிருக்கும் இளம் இடைக்கணுக்களைத் தாக்கும், பச்சைச் சோலைகளைத் துளைத்து இளம் இடைக்கணுவிற்குள் நுழைந்து தான் உண்ட கரும்பு திசுக்களை துளைக்கு வெளியே தள்ளி வைத்திருக்கும் தாக்கப்பட்ட இடைக்கணுவும் அதற்கு மேல் உள்ள இடைக்கணுவும் சிறுத்து உறுமாறிக் காணப்படும்.
கரும்பின் கோந்தாளைப் பகுதியைத் தாக்கி மெரிஸ்டம் என்கிற நுனிப்பருவிற்கு மிக அருகில் அதற்கு மேல் அல்லது கீழ்ப்பக்கத்தில் துளைத்துத் திசுக்களையும் நுனிப்பருவிற்கு மிக அருகில் அதற்கு மேல் அல்லது கீழ்ப்பக்கத்தில் துளைத்து திசுக்களையும் நுனிப்பருவையும் உண்ணும். இதனால் நடுக்குருத்து காய்ந்து வைக்கோல் நிறத்தில் காணப்படும். நுனிப்பரு அழிந்து விடுவதால் பக்கப் பருக்கள் முளைக்கும். பார்வைக்கு நுனிக்குருத்துப் புழுவின் தாக்குதல் போல் காட்சியளிக்கும். இந்த வகை தாக்குதலால் நுனிப்பரு அழிந்து விடுவதால் கரும்பின் வளர்ச்சி முற்றிலும் நின்று மகசூல் மிகவும் குறைந்து விடும்.
பக்கப்பருக்கள் முளைத்து வருவதற்கு கரும்பில் உள்ள சர்க்கரை சத்தை உபயோகித்துக் கொள்வதால் சர்க்கரை சத்தும் வெகுவாகக் குறையும். இடைக்கணுக்கள் நீளத்தில் குறைந்து வலுவற்ற காற்று அதிகமாக வீசும் பொழுது ஒடிந்து விடுகின்றன.
இப்புழு மிதமான வெப்பமும், அதிக ஈரத்தன்மையும் உள்ள நிலைகளில் பெருகி வளர்கிறது. கரும்பு சாய்வும், நீர் தேங்குதலும் இதன் இனவிருத்திக்கு ஏதுவாக இருக்கிறது. இதன் தாக்குதல் 20 லிருந்து50 சதவீதம் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
தாய்ப்பூச்சி செதில் மாதிரியான வெள்ளை நிற முட்டைகளை அடுக்கடுக்காக பெரும்பாலும் இலைப்பாகத்தின் மேல் பகுதியிலும் சில சமயம் கீழ் பகுதியிலும் இரண்டு அல்லது மூன்று வரிசைகளாக முட்டைகளை இடும். ஐந்து முதல் ஆறு தினங்களில் அதிலிருந்து முதல்நிலைப்புழுக்கள் வெளிவரும் அவை 7-8 தினங்கள் இலைச்சுருள்களில் தங்கியிருந்து இலைகளை சுரண்டிச் சாப்பிடும் . பின்னர் கரும்பைத் துளைத்து உள்ளே சென்று 30-ல் இருந்து 45 நாட்கள் வரை தின்னும்.
அதன்பின் கரும்பை விட்டு வெளியே வந்து இலைச்சோலைக்குள் கூட்டுப்புழுவாக மாறும். அதிலிருந்து 7-10 நாட்களில் அந்துப்பூச்சி வெளிவரும்.இடைக்கணுப்புழுக்களின் தாக்குதலைக் கட்டுப்படுத்த வெப்பத்தை தாங்கி வளரக்கூடிய டிரைக்கோகிரம்மா கைலோனிஸ் என்ற முட்டை ஒட்டுண்ணியை வெளியிட்டுக் கட்டுப்படுத்தலாம். டிரைக்கோகிரம்மா கைலோனிஸ் ஒட்டுண்ணி இடைக்கணுப்புழுவின் முட்டைகள் மேல் தன் முட்டையை இட்டு இடைக்கணுப்புழுவை முட்டை பருவத்திலேயே கட்டுப்படுத்திவிடும்.
மேலும் இந்தப் புதிய ஒட்டுண்ணியின் செயல்பாட்டினை இந்தப் பன்னிரண்டு சர்க்கரை ஆலைகளிலும் உள்ள மாதிரி வயல்களில் மகசூல் மற்றும் சர்க்கரை கட்டுமானத்தின் மூலம் கண்டறியலாம். தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு விவசாயிகள் விழிப்புணர்வுக் கூட்டம் ஏப்.,23 ந்தேதி நடந்தது.
சொ.தாமரைச்செல்வி
செங்கல்பட்டு.

