PUBLISHED ON : மே 27, 2026

முல்லை பூ சாகுபடி குறித்து, திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அடுத்த பட்டாபிராம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஜி.குமார் கூறியதாவது:
மல்லி, கனகாம்பரம் உள்ளிட்ட மலர் சாகுபடி மற்றும் சுரைக்காய், பீர்க்கங்காய் உள்ளிட்ட கொடி காய்கறிகளை சாகுபடி செய்து வருகிறேன். அந்த வரிசையில் முல்லை சாகுபடி செய்துள்ளேன்.
இந்த முல்லை பூவை பொறுத்தவரையில், ஒரு முறை செடி நட்டுவிட்டால் போதும், அந்த செடியில் வேர் அழுகல், இலைப்பேன் உள்ளிட்ட நோய் தடுப்புகளை முறையாக கையாண்டால் போதும். மல்லி பூ சாகுபடிக்கு வாரத்தில் இரு தினங்கள் மருந்து தெளிக்க வேண்டும். முல்லை பூ சாகுபடிக்கு மாதத்தில் இரு தினங்கள் மட்டுமே மருந்து தெளித்தால் போதும்.
நீர் மற்றும் களை எடுத்து குறைந்த அளவில் பராமரித்தாலே அதிக மகசூல் பெறலாம்.
மேலும், முல்லை பூ எடுக்க தொடங்கிய நாளில் இருந்து, பூக்களை பறிக்கலாம். பூ செடிகளை கவாத்து செய்த பின், ஊடு பயிராக குறுகிய கால பயிராக வேறு ஏதேனும் சாகுபடி செய்து வருவாய் ஈட்டலாம்.
குறிப்பாக, முல்லை பூ சாகுபடியில், குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் உழைத்தால் மட்டுமே அதிக வருவாய் ஈட்ட முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்புக்கு: ஜி.குமார், 99528 58097.
