
எருமைகளின் தோலில் மிகக் குறைவாகவே வியர்வை சுரப்பிகள் உள்ளன. எருமைகளின் தோல் பசுவை விட சிறிது தடிமனாக இருக்கிறது. இதனால் கோடையில் கூடுதலான வெப்பத்தை உடம்பில் இருந்து வெளியேற்ற இயலாது. தோலின் நிறம் கருப்பாக இருப்பதாலும் எருமைகளால் வெப்ப தாக்குதலை தாங்க முடியவில்லை. கோடை வெயிலானது எருமைகளின் பால் உற்பத்தித் திறனையும், இன விருத்தி திறனையும் வெகுவாக பாதிக்கிறது. இதனால் எருமை வளர்ப்போருக்கு நஷ்டமே.
கோடையில் முற்பகல் 11:00 முதல் பகல் 3:00 மணி வரை வெப்பம் அதிகமாக இருக்கும். இந்நேரத்தில் எருமைகளின் மீது மூன்று அல்லது நான்கு முறை தண்ணீர் தெளித்தால் உடல் வெப்பம் குறையும். குடிப்பதற்கு எருமைகளுக்கு குளிர்ந்த நீரை தருவது நல்லது. கூடுதலாக வெளிப்புற வெப்ப நிலையால் எருமைகளை கோடையில் ஏரி, குளங்களில் குளிக்க அனுமதிக்க வேண்டும். முற்பகல் 11:00 முதல் பகல் 3:00 மணி நேர இடைவெளியில் எருமைகளை மேய்ச்சலுக்கு அனுப்பக்கூடாது.
எருமைகள் பகல் நேரங்களில் குறைவான அளவு தீவனமே உண்ணும். ஆகையால் இரவில் அதிகளவு பசுந்தீவனம் கொடுக்க வேண்டும். கோடையில் தினமும் 50 கிராம் வரை தாது உப்புக்கலவை கொடுத்து வந்தால் வியர்வை மூலம் வெளியேறும் தாது உப்பின் இழப்பை சரி செய்யலாம்.
பண்ணை அளவில் நிறைய எருமைகளை வைத்து பராமரிப்போர் கோடை காலங்களில் அவற்றை கட்டியே வைத்திராமல் விசாலமான அடைப்புகளில் சுதந்திரமாக திரிய விட வேண்டும்.
தொடர்புக்கு 74864 69044.
- டாக்டர். வி.ராஜேந்திரன்
முன்னாள் இணை இயக்குனர்
கால்நடை பராமரிப்புத்துறை.

