/
இணைப்பு மலர்
/
விவசாய மலர்
/
கறவை மாடுகளில் காணை நோய் பராமரிப்பு
/
கறவை மாடுகளில் காணை நோய் பராமரிப்பு
PUBLISHED ON : மார் 23, 2011
நோய் அறிகுறிகள்: தீவனம் உட்கொள்ளாமை, அதிக காய்ச்சல், உற்பத்தி குறைவு, உமிழ்நீர் வடிதல், உதடு கடித்தல், அசை போடுதல் மிகவும் குறைந்தும், மெதுவாகவும் நடைபெறுதல், சப்புக்கொட்டுதல், 3லிருந்து 5 நாட்களில் வாய், நாக்கு மற்றும் குளம்பிடையில் கொப்புளங்கள் காணப்படுதல் போன்றவை இந்நோயின் முக்கிய அறிகுறிகளாகும்.
நோயினால் ஏற்படும் இழப்புகள்: கன்றுகளில் இறப்பை ஏற்படுத்துகிறது. வளர்ந்த கால் நடைகளில் இறப்பை ஏற்படுத்தாவிட்டாலும் கடும் உற்பத்திக் குறைவும், சினை மாடுகளில் கருச்சிதைவு, மடிவீக்க நோய், நிரந்தர ஊனம், குத்திட்ட முடி, அதிக இளைப்பு, நோயைக் கட்டுப்படுத்த அதிக செலவு மற்றும் உற்பத்திப் பொருட்களின் மேல் வாணிபத்தடை, உழைப்பு மாடுகள் அதன் திறனை இழந்துவிடுதல் போன்றவற்றால் பண்ணையாளர் களுக்கும் விவசாயிகளுக்கும் பெரும் பொருளாதார இழப்பு ஏற்படுகிறது.
நோய் வரும் முன் நோயைத் தடுத்தல்: பிறந்து 4 மாதம் ஆன கன்றுகளுக்கு முதல் தடுப்பூசியும் பின் 1 மாதம் கழித்து மறு ஊசியும் போட்டுக்கொள்ள வேண்டும். எல்லா கால்நடைகளுக்கும் 6 மாதத்திற்கொரு முறை தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். தடுப்பூசியானது தகுந்த முறையில் பதனப்படுத்தப்பட்டு, போடும் வரை குளிர்ந்த நிலையில் பராமரிக்கப்பட வேண்டும். குளிர்ந்த நேரங்களில் தடுப்பூசி போடவேண்டும்.
தடுப்பூசி போடுவதற்கு ஒரு வாரத்திற்கு முன் தடுப்பூசி செலுத்த வேண்டிய கால்நடைகள் அனைத்திற்கும் குடற்புழு நீக்கம் செய்து நல்ல ஆரோக்கியமான நிலையில் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். தகுதியான, தரமான தடுப்பூசிகளை தகுந்த கால்நடை மருத்துவரைக் கொண்டு சரியான வழியில் தகுந்த அளவில் செலுத்த வேண்டும்.
நோய் வந்த பின்: கால்நடை நகர்வைக் கட்டுப்படுத்த வேண்டும். நோய் பரவியுள்ள கிராமத்தை விடுத்து சுற்றியுள்ள கிராமங்களில் தடுப்பூசி போடவேண்டும். நோய் ஏற்பட்ட பகுதியிலிருந்து மனித நடமாட்டத்தையும் கட்டுப்படுத்த வேண்டும். இத்தருவாயில் புதிய கால்நடைகளைச் சேர்க்கக் கூடாது. 4 சதவீதம் சோடியம் கார்பனேட், 1 - 2 சதவீதம் பார்மலின், 1-2 சதவீதம் சோடியம் ஹைட்ராக்சைடு கொண்டு சுற்றுப்புறம் மற்றும் மாட்டுத் தொழுவங்களைச் சுத்தம் செய்ய வேண்டும். ஈயின் பெருக்கத்தையும் தொல்லையையும் கட்டுப்படுத்த வேண்டும். நோய் நிகழ்வு ஏற்பட்ட?இடத்திலிருந்து 16-24 கி.மீ. வட்டாரத்திற்குள் புதிய கால்நடை ஊடுருவலைத் தடுக்க வேண்டும். ஆடுகள், பன்றி போன்றவற்றிற்கும் தடுப்பூசி போடவேண்டும். கால்நடை பராமரிப்பில் ஈடுபட்ட மனித உடைகள் எல்லாம் கிருமிநீக்கம் செய்யப்பட வேண்டும். இந்நச்சுயிரிகள் வெகு எளிதாக மரபு மாற்றமடைந்து நோயை உண்டாக்குவதால் தடுப்பூசி போடுவதில் வெகு கவனம் தேவை.
பொதுவாகக் கால்நடைகள் மூன்று வாரத்தில் இந்நோயிலிருந்து மீண்டுவிட்டாலும், நோய் பின்பாதிப்பு அதிகமாயிருக்கும். நோய் முடிந்து 6 மாதங்கள் வரை புதிய கால்நடைகளை உள்ளே சேர்க்காமல் இருப்பது நல்லது. அதற்கு முன் கொட்டகைகளை எல்லாம் தகுந்த கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்வதோடு, கழிவுகளையும் தகுந்த விதத்தில் அப்புறப்படுத்த அல்லது எரித்துவிட வேண்டும்.
த.அ.விஜயலிங்கம், எம்.வி.எஸ்சி., பிஎச்.டி.,
அ.செந்தில்குமார், எம்.வி.எஸ்சி.,
உழவர் பயிற்சி மையம்,
தேனி-625 531.

