/
இணைப்பு மலர்
/
விவசாய மலர்
/
மிளகாயில் சாறு உறிஞ்சும் பூச்சி மேலாண்மை
/
மிளகாயில் சாறு உறிஞ்சும் பூச்சி மேலாண்மை
PUBLISHED ON : ஜன 24, 2018

நவீன வேளாண்மை முறையில் ஆண்டு முழுவதும் சாகுபடி செய்யப்படும் பயிர் மிளகாய். உணவில் காரத்தன்மைக்கு கார சுவை அவசியம். விதையில் 'ஓலியோசுரசின்' வேதிக்கூறே காரத்தை உருவாக்குகிறது. ஆண்டுதோறும் மிளகாய் சாகுபடி நடப்பதால், பூச்சி தாக்குதல் அதிகரிக்கின்றன. இதில் சாறு உறிஞ்சும் பூச்சி தாக்குதலே அதிகம். இலைபேன், அசுவினி, மஞ்சள் முரணை சிலந்தி பூச்சி முக்கியமானது. பூச்சி தாக்குதலால் 25 சதவீத மகசூல் பாதிக்கலாம்.
மிளகாய் நாற்றங்கால் முதல் அறுவடை வரை தொடர்வது சாறு உறிஞ்சும் பூச்சி. ஆகஸ்ட் மற்றும் ஜனவரி மாதங்களில் இப்பூச்சி தாக்குதல் இருக்கும். நன்கு முதிர்ந்த இலைப்பேன் பூச்சிகளும் அதன் குஞ்சுகளும் அதிக சேதாரம் தரும். இவை இலையின் அடிப்பகுதியில் 30 முதல் 40 முட்டையிடும். இம்முட்டை 7 நாட்களுக்குள் பொரித்து புழுக்களாக மாறும். சுமார் 10 நாட்களில் புழு குஞ்சுகள் சாறுகளை உறுஞ்சி இலையில் சேதாரம் ஏற்படுத்தும். இந்த பூச்சி 15 முதல் 35 நாட்கள் உயிருடன் இருக்கும். இலைப்பேன் வந்தால், மிளகாய் இலை மேல்நோக்கி சுருண்டு காணப்பட்டு, இலை, பூ மொட்டு சருகாகி, 25 சதவீத மகசூலை பாதிக்க செய்யும்.
மேலாண்மை முறை
கோடை உழவிற்கு பின் காரிப்பருவ பயிருக்கு ஏக்கருக்கு 100 கிலோ வேப்பம் புண்ணாக்கு இடவும். மித வெப்ப நிலையில் தான் சாறு உறிஞ்சி பூச்சிகள் பெருகும். இதனால் மிளகாய் சாகுபடி நிலத்தில் 10 முதல் 15 வரிசை அகத்தி, தக்கை பூண்டு செடி நட்டு செயற்கை நிழல் உருவாக்கினால், இலைப்பேனின் இனப்பெருக்கம் குறையும். சோளம் சாகுபடி செய்த நிலத்தில் மிளகாய் சாகுபடி செய்வதை தவிர்க்கவும். மிளகாய் பூக்கும் தருணத்தில் ஊடுபயிராக வெங்காயம் நடுவதால், அதில் இலைபேன் பூச்சி அதிகரித்து, மிளகாயை தாக்கும்.
சேதமான மிளகாய் வயல்களில் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 'பாசலோன்' பூச்சிக்கொல்லி மருந்தை 2 மில்லி கலந்து தெளிக்கலாம் அல்லது 'இமிடோகுளோபிரிட்' மருந்தை 10 லிட்டர் தண்ணீருக்கு 3.5 மில்லி வீதம் கலந்தும் அல்லது 'ஸ்பைனோசைடு' மருந்தை 10 லிட்டர் தண்ணீருக்கு 3 மில்லி வீதம் கலந்து தெளிக்கலாம்.
இலைப்பேன் தவிர மஞ்சள் முரணை சிலந்தி பூச்சியும் தாக்கும். இந்த பூச்சியால் மிளகாய் இலை கீழ்நோக்கி சுருண்டுவிடும். இதை கட்டுப்படுத்த 'குயினால்பாஸ்' என்ற மருந்தை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 1.5 மில்லி கலந்தோ அல்லது 'ஸ்பைராமெஸிபென்' மருந்தை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 5 மில்லி கலந்தோ தெளிக்கலாம்.
இவை தவிர அசுவினி பூச்சி தாக்குவதால் இலைகள் முழுவதும் சுருங்கி, மஞ்சள் நிறத்திற்கு மாறும். பாதித்த இலைகளில் பிசின் போன்று படர்ந்திருக்கும். இவை இலையில் கரும்பூஞ்சண நோய் ஏற்பட செய்து இலைகள் சுருங்கி கீழே விழும். அசுவினி பூச்சியை கட்டுப்படுத்த 'இமிடாகுளோபிரிப்' மருந்தை 10 லிட்டர் தண்ணீருக்கு 3 மில்லி வீதம் கலந்தும் அல்லது 'பிப்ரோனில்' மருந்தை ஒரு லிட்டர் தண்ணீருக்கு ஒரு மில்லி வீதம் கலந்து தெளிக்கவும். பூச்சிகளை கட்டுப்படுத்த மருந்து தெளிப்பதற்கு முன் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். பூச்சியின் தீவிரத்திற்கேற்ப மருந்தை மூன்று நாட்கள் இடைவெளிவிட்டு 3 முறை அல்லது 2 முறை பயன்படுத்தி முழு கட்டுக்குள் கொண்டு வரலாம்.
- எஸ்.செந்துார் குமரன், தலைவர்
வேளாண் அறிவியல் நிலையம்,
குன்றக்குடி. 94438 69408.

