PUBLISHED ON : செப் 18, 2024

தென்னையை பூலோக கற்பக விருட்சம் என்றழைக்கிறோம். தமிழகத்தில் தென்னை மரங்களில் அடித்தண்டழுகல் எனப்படும் தஞ்சாவூர் வாடல் நோய் பரவி வருகிறது. பூசணம் முதலில் வேரை தாக்கி பின் அடிமரத்தை தாக்குகிறது. தஞ்சாவூரில் 1952 ல் பெரும் சேதத்தை ஏற்படுத்தியதால் இதை தஞ்சாவூர் வாடல் நோய் என்கின்றனர். கடற்கரையை ஒட்டிய மணற்பாங்கான இடங்களில் அதிகமாகவும் மானாவாரி மற்றும் பராமரிப்பு இல்லாத தென்னந்தோப்புகளில் இந்நோய் தாக்கம் உள்ளது.
'கோனோடெர்மா லுாசிடம்' என்னும் காளான் வகை பூஞ்சாணம் தாக்குவதால் இந்நோய் ஏற்படுகிறது. மணல் மற்றும் மணற்பாங்கான மண்ணில் வளரும் மரங்கள் அந்துப்பூச்சிகள் மற்றும் வண்டுகளால் பாதிக்கப்படுகிறது. குறிப்பாக வெயில் காலத்தில் தாக்கம் அதிகமாக காணப்படும். மண்ணில் உள்ள பாசிடியோஸ்போர்ஸ் மூலமாக தொற்று ஏற்படுகிறது. பாசன நீர் மற்றும் மழை ஆகியவை பூஞ்சை பரவுவதற்கு உதவுகின்றன. இது மண்ணில் நீண்ட காலம் வாழ்கிறது.
நோய் அறிகுறி என்ன
பாதிக்கப்பட்ட மரத்தின் அடிப்பாகத்திலிருந்து 3 அடி உயரத்தில் சாறு வடியும். அதை வெட்டினால் தண்டுப் பகுதி அழுகியிருக்கும். மரத்தின் ஓலைகள் வெளிர் மஞ்சள் நிறமாகி பின்பு அடிமட்டைகள் பழுப்படைந்து காய்ந்து மரத்தோடு ஒட்டித் தொங்கும். இதை இழுத்தால் கீழே விழாது. வேர்களும் அதிகளவில் அழுகி நிறம் மாறி எண்ணிக்கையில் குறைந்துவிடும். சில நேரங்களில் அனைத்து குரும்பைகளும், இளம் காய்களும் கொட்டிவிடும். மேலும் இந்நோய் தாக்கப்பட்ட மரங்களில் 'சைலிபோரஸ்' என்ற பட்டை துளைப்பான் வண்டின் தாக்குதலும் காணப்படும்.
மழைக்காலத்தில் மரத்தின் அடிப்பாகத்தில் 'கேனோடெர்மா' பூசணத்தின் வித்துத் திரள் காளான் போன்று காணப்படும். இந்த அறிகுறிகள் அனைத்தும் ஒருங்கே காணப்பட்டால் மரமானது ஆறு மாதம் முதல் ஓராண்டுக்குள் இறந்து விடும்.
ஒருங்கிணைந்த மேலாண்மை முறை
நோய் தாக்கி இறந்த, நோய் முற்றிய நிலையில் உள்ள மரங்களை வெட்டி அகற்ற வேண்டும். நிலத்தில் மழைநீர் வடிகால் வசதியை மேம்படுத்த வேண்டும். மரத்தைச் சுற்றி வட்டப் பாத்திகள் அமைத்து தனித்தனியாக நீர் பாய்ச்ச வேண்டும். வாழையை ஊடுபயிர் செய்து நோயின் தீவிரத்தை குறைக்கலாம். மரம் ஒன்றுக்கு ஒரு கிலோ வேப்பம் புண்ணாக்கு இட வேண்டும்.
நோயுற்ற மற்றும் அதைச் சுற்றியுள்ள மரம் ஒவ்வொன்றுக்கும் ஒரு சதவீத போர்டோ கலவையை 40 லிட்டர் என்ற அளவில் மரத்தைச் சுற்றி வட்டப்பாத்தியில் மண் நன்கு நனையுமாறு 15 நாட்கள் இடைவெளியில் இரண்டு முறை ஊற்றவேண்டும். 'ஹெக்சகோனோசோல்' ஐந்து மில்லி மருந்தை 100 மில்லி தண்ணீரில் கலந்து மூன்று மாதத்திற்கு ஒருமுறை வேர் வழியாக மூன்று முறை உட்செலுத்த வேண்டும்.
திரவம் வடிந்த பகுதியை லேசாக சுரண்டி அதன்மீது முதலில் போர்டோ பசையை தடவி 15 நாட்கள் கழித்து 'டிரைக்கோடெர்மா விரிடி' பசையைத் தடவவேண்டும். மரம் ஒன்றுக்கு 200 கிராம் 'டிரைக்கோடெர்மா விரிடி', 200 கிராம் 'பேசில்லஸ் சப்டிலிஸ் உடன் 5 -- -10 கிலோ மட்கிய சாண எரு கலந்து மரத்தைச்சுற்றி மண்ணை லேசாக கிளறி வேர்ப்பகுதியில் இடவேண்டும்.
உயிர் உரங்களான அசோஸ்பைரில்லம் 100 கிராம், பாஸ்போ பாக்டீரியா 100 கிராம், வேர்உட்பூசணம் 50 கிராம் ஆகியவற்றை தொழு உரத்துடன் கலந்து இட வேண்டும். எதிரி உயிரி, உயிர் உரங்கள் ஆழியாரில் உள்ள தென்னை ஆராய்ச்சி நிலையத்தில் கிடைக்கும்.