
மரம் சார்ந்த தொழிற்சாலைகள்: தமிழகத்தில் தடிமரம், காகிதம், தீக்குச்சி, பிளைவுட், உயிரி எரிபொருள், உயிரி எரிசக்தி, பென்சில் போன்ற பல்வேறு மரம் சார்ந்த தொழிற்சாலை கள் செயல்பட்டு வருகின்றன. இத்தொழிற்சாலைகளுக்கு தேவையான மரங்கள் பெரும்பாலும் வெளி மாநிலங்களிலிருந்தும், சில சமயம் வெளிநாடுகளிலிருந்தும் பெறப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் 130 லட்சம் எக்டர் நிலப்பரப்பில் சுமார் 20 லட்சம் எக்டருக்கு மேல் தரிசு நிலங்களாக பயன்படுத்தப்படாமல் இருக்கின்றன. மேலும் மானாவாரி வேளாண் நிலங்களில் உள்ள வரப்புகளில் மரம் வளர்ப்புக்கு ஏற்றதாக இருந்தாலும் வேளாண் பண்ணைக்காடுகள் குறைந்தே காணப்படுகின்றன.
தடி மரங்களுக்கு உகந்த முக்கிய மரமான தேக்கு, தோதகத்தி, வேங்கை, செம்மரம் போன்ற மரங்களை வேளாண் நிலங்களில் பண்ணைக்காடுகளாகவும் வரப்பு ஓரங்களிலும் சாகுபடி செய்யலாம்.
தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனம் ஆகியவை காகித ஆலை, அட்டை நிறுவனம் ஆகியவை காகித உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கின்றன. தைலம், சவுக்கு மரங்கள் காகிதம் தயாரிக்க பெருமளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. மேட்டுப்பாளையம் வனக்கல்லூரியில் அதிக விளைச்சல் கொடுக்கக்கூடிய தைல மர ரகங்களான எப்.சி. ஆர்.ஐ.48, 53, 56, 106 ஆகிய ரகங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த ரகங்கள் வறண்ட, தண்ணீர் தேங்கும் நிலங்களுக்கும் உகந்தவை. சவுக்கில் புதிய ரகங்களான எம்.டி.பி.1, 2 போன்ற ரகங்கள் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளன. இந்த காகிதக்கூழ் மரங்களின் மூலம் ஒரு எக்டருக்கு சுமார் ரூ.30 லட்சம் வரை வருமானம் 3 ஆண்டுகளில் பெறலாம்.
பெருமரம் என்ற தீக்குச்சி மரங்கள் தமிழ்நாட்டில் சாகுபடி செய்யப்படுகின்றன. தீக்குச்சி மரவளர்ப்பில் 6 முதல் 8 ஆண்டுகளில் சுமார் ரூ.5 லட்சம் வரை வருமானம் கிடைக்கும். தமிழகத்தில் குறிப்பிடத்தக்க அளவிற்கு பிளைவுட் தொழிற்சாலைகள் உள்ளன. வேளாண் பல்கலைக் கழகத்தில் பிளைவுட் தயாரிப்பதற்கு தேவையான உயர்தர மலைவேம்பு ரகங்கள் கண்டறியப்பட்டு உழவர்கள் பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டு வருகின்றன.
உயிரி எரிசக்தி சார்ந்த வேளாண் காடுகளில் சவுண்டல், சவுக்கு, தைலம், முள்ளில்லா வேலிக்கருவேல், சிசு மரங்கள் அதிக எரிதிறன் கொண்டு இருப்பதால் வளர்க்கப்படுகின்றன. (தகவல்: முனைவர் கு.இராமசாமி, துணைவேந்தர், த.வே.பல்கலைக்கழகம், கோயம்புத்தூர்-641 003)
* இ.எம்.கலவை தயாரிப்பு: எபெக்டிவ் மைக்ரோ ஆர்கானிசம் என்பதன் சுருக்கம்தான் இ.எம். இத்திரவத்தில் நுண்ணுயிர் உறக்கநிலையில் இருக்கும். 80 மில்லி இ.எம். திரவத்தை 10 லிட்டர் நீரில் கலந்து பயிர்களின் மேல் தெளித்துவந்தால் நல்ல பலன் கிடைக்கிறது.
தயாரிப்பு: ஒரு கிலோ வெல்லத்தை பூ---- கரைசலாக நீரில் கரைத்து, மூடியுடன் கூடிய ஒரு பிளாஸ்டிக் தொட்டியில் ஊற்றவும். இதனுடன் குளோரின் கலக்கப்படாத சுத்தமான தண்ணீர் 20 லிட்டர், இ.எம்.திரவம் ஒரு லிட்டர் ஆகியவற்றையும் சேர்த்து தொட்டியை மூடிவைக்க வேண்டும். தினமும் ஒரு முறை ஒரு விநாடி மட்டும் மூடியைத் திறந்து மூடி, உள்ளே உற்பத்தியாகும் வாயுவை வெளியேற்ற வேண்டும். ஒரு வாரத்தில் இக்கலவை, இனிய மணம், புளிப்பு சுவையுடன் வெண் நுரையுடன் காணப்படும். இந்த அறிகுறிகள் இருந்தால் மட்டுமே இ.எம்.சரியான முறையில் தயாராகியுள்ளது என்று அர்த்தம். இவ்வாறு தயாரிக்கப்பட்ட கலவையை 4 முதல் 5 வாரங்களுக்குள் பயன்படுத்த வேண்டும்.
இ.எம்.திரவத்தை மையமாக வைத்து 5 பொருட்களைக் கலந்து இ.எம்.5 என்கிற திரவமும் தயாரிக்கப்படுகிறது. இது வைரஸ், பாக்டீரியா, பூஞ்சண நோய்கள் மற்றும் சில வகை பூச்சிகளையும் கட்டுப்படுத்தும் திறனுடையது. ஒரு கிலோ வெல்லத்தை சம பங்கு நீரில் நன்கு கரைத்துக்கொண்டு அதில் ஒரு லிட்டர் காடி, ஒரு லிட்டர் ரம் அல்லது விஸ்கி (40 சதம் ஆல்கஹால், 6 லிட்டர் தண்ணீர், ஒரு லிட்டர் இ.எம்.ஆகியவற்றை சேர்த்து காற்று புகாத பிளாஸ்டிக் பாத்திரத்தில் ஒரு வார காலத்துக்கு மூடி வைப்பதால் இ.எம்.5 கரைசல் தயார். இதிலும் தினமும் வாயுவை வெளியேற்றிவர வேண்டும். தயாரான திரவத்தை காற்றுப்புகாத பாத்திரத்தில் சேமித்து, மூன்று மாதங்கள் வரை பயன்படுத்தலாம். ஒரு மடங்கு இ.எம்.5 திரவத்துடன் 200 மடங்கு தண்ணீரைக் கலந்து பயிர்களுக்கு தெளிக்கலாம். (50 மில்லி கரைசலுக்கு 10 லிட்டர் தண்ணீர்)- நோய்கள் கட்டுப்படும் வரை இரண்டு நாட்கள் இடைவெளியில் தொடர்ந்து தெளிக்கலாம். (தொடர்புக்கு: ஆரோவில் பகுதியில் உள்ள இகோ புரோ அமைப்பின் தொழில்நுட்ப வல்லுநர் சுமதி, 0413-262 2469)
-டாக்டர் கு.சௌந்தரபாண்டியன்.

