
வேளாண் தகவல்தொழில்நுட்பம்: வேளாண்மையில் தகவல்தொழில்நுட்பத்தை இரண்டு வகையில் மதிப்பீடு செய்யலாம். வேளாண் உற்பத்திக்கான நேரடி பங்களிப்பிற்கு ஒரு கருவியாகவும், உழவர்கள் தகவல் மற்றும் தரம் பற்றிய முடிவெடுக்க மேம்படுத்தப்பட்ட ஒரு மறை முக கருவியாகவும் பயன்படுத்தப்படுகிறது. தொலையுணர்தல் வலைதளங்கள் போன்ற தகவல் தொழில்நுட்பங்கள் வேளாண்மையில் பெரும் புரட்சியை ஏற்படுத்தியுள்ளன. இந்த வகையில் வல்லுனர் அமைப்பும் புரட்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
வேளாண் வல்லுனர் அமைப்புத்திட்டம்: இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தின் நிதி உதவியுடன் நான்கு ஆண்டுகளில் ரூ.1,02,90,000 செலவில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், விரிவாக்க கல்வி இயக்கத்தில் இ-விரிவாக்க மையத்தில் செயல்படுத்தப்பட்டது. இத்திட்டத்தில் நெல், வாழை, கரும்பு, தென்னை, கேழ்வரகு பயிர்களுக்கான வேளாண் வல்லுனர்கள் அமைப்பு மென்பொருள் ஆங்கி லம், வட்டார மொழிகளான தமிழ், மலையாளம், கன்னடத்தில் உருவாக்கப்பட்டுள்ளன.
பயிர் மருத்துவர்: வேளாண் வல்லுனர் அமைப்பு என்பது பயிர் சார்ந்த பிரச்னைகளுக்கு கணினி வழியாகத் தீர்வு காண உதவும் தகவல் நுட்பங்கள் அடங்கிய ஒரு மென்பொருளாகும். இது பண்ணை சார்ந்த முடிவுகளையும் பகுதிக்கேற்ற தொழில்நுட்பங்களையும் விரிவாக்கம் செய்வதற்காக உருவாக்கப்பட்டுள்ளது. முந்தைய காலகட்டங்களில் வேளாண் வல்லுனர்கள் கூடி துறை சார்ந்த ஆலோசனைகளை வழங்குவதற்கு இணையாக தற்பொழுது சேகரிக்கப்பட்ட நுண்ணறிவு நுட்பங்களைக் கெண்டு வேளாண் விரிவாக்கப் பணியாளர்கள் உழவர்கள் தாமாகவே பண்ணைசார் முடிவுகளை எடுக்க உதவும் ஒரு மென்பொருள்தான் வேளாண் வல்லு னர் அமைப்புத் திட்டமாகும்.
இதனை வி.பி.நெட் மற்றும் எஸ்.க்யூ.எல்.சர்வர் எனும் பயன்பாட்டு மென்பொருள் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. (தகவல்: முனைவர் ந.ஸ்ரீராம், முனைவர் ந.ஆனந்தராஜா, ஏ.சமீம் பானு, விரிவாக்கக் கல்வி இயக்ககம், த.வே.பல்கலைக்கழகம், கோயம்புத்தூர்- 641 041. 0422-6611 383)
* மீன் தூளில் தோல் கழிவு கலப்படத்தைக் கண்டறிய: அசைபோடா விலங்குகள், கோழிகளுக்கான தீவனத்தில் பொதுவாக 10 சதவீதம் வரை மீன் தூள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மீன் தூளின் விலையைக் குறைக்கும் நோக்கில் தோல் பதனிடும் தொழிற்சாலைகளிலிருந்து கிடைக்கும் தோல் கழிவுப்பொருட்கள் கலப்படம் செய்யப்படுகின்றன. இவ்வாறு விலை மலிவாகக் கிடைக்கும் தோல் கழிவுப் பொருட்களை மீன் தூளுடன் கலப்படம் செய்வதால் முட்டை உற்பத்தி இரண்டு முதல் 3 சதவீதம் குறைகிறது.
இதேபோல் கறிக்கோழிகளில் உடல் வளர்ச்சி குறைகிறது. மீன்தூளில் கலப்படத்தைக் கண்டறியும் பொருட்டு, ஒரு உடனடி சோதனைமுறை நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையங்கள் கூட உணவியல் துறையில் உருவாக்கப்பட்டுள்ளது. இச் சோதனையின் அடிப்படையானது, தோல் கழிவு எரிந்து சாம்பலாகும்போது அதிலிருந்து வெளிப்படும் கரும்பச்சை நிற குரோமியம் உப்பினைக் கந்தக அமிலத்துடன் கலந்த டை பினைல் கார்பசைடை வேதிப்பொருளுடன் சேர்க்கும்போது உண்டாகும் ஊதாநிறம் கொண்டு தோல் கழிவு கலப்படம் அறியப்படுகிறது.
(தகவல்: முனைவர் பெ.வசந்தகுமார், கால்நடை உணவியல் துறை, கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், மோகனூர் ரோடு, வந்தவாசி, நாமக்கல்-637 002. 04286-266 491)
* சம்பங்கி மலர் விவசாயத்தை 70 சென்ட் நிலத்தில் செய்து ஆண்டுக்கு 3 லட்சம் வருமானம் பார்த்து வருகிறார் விவசாயி. விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில் அருகே உள்ள ரெங்கப்பநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த விஜயரங்கன். பிரஜிவல் ரகசம்பங்கி வீரிய ரகம் அனைத்துப் பட்டங்களிலும் சாகுபடி செய்யலாம். இயற்கை உரங்களான ஆட்டு எரு, மாட்டுச்சாணம், மட்கிய குப்பைகள் மற்றும் பசுந்தாள் உரம், தக்கைப்பூண்டு, தட்டைப்பயறு கலந்து விதைத்து சாகுபடியை செய்து சாதனை படைக்கிறார். (தகவல்: விஜயரங்கன், 94447 88004)
-டாக்டர் கு.சௌந்தரபாண்டியன்.

