PUBLISHED ON : ஜூலை 08, 2026

கால்நடை தீவனம், உணவு பதப்படுத்தும் தொழில்கள், உயிரி எரிபொருள் தயாரிப்பு உள்ளிட்ட பல துறைகளில் மக்காச்சோளம் முக்கிய மூலப்பொருட்களாக உள்ளது.
பருவநிலை, மண் வகை
மக்காச்சோள வளர்ச்சிக்கு 25 முதல் 32 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை, ஆண்டிற்கு 500 முதல் 800 மி.மீ., மழை தேவை. பயிரின் பூக்கும், கதிர்விடும் நிலைகளில் போதுமான மண் ஈரப்பதம் இருக்க வேண்டும். பலவகை மண்ணில் வளரும் என்றாலும் வடிகால் வசதியுள்ள வண்டல் மண், மணற்பாங்கான வண்டல் மண் ஏற்றது. மண்ணின் கார, அமிலத் தன்மை 5.5 முதல் 7.5 வரை இருக்க வேண்டும்.
உழவும் விதைப்பும்
நிலத்தை 2 முதல் 3 முறை உழுது கட்டிகள் இல்லாமல் மண்ணை பொடியாக்க வேண்டும். கடைசி உழவின் போது ஏக்கருக்கு 5 டன் மட்கிய தொழுஉரம் இட வேண்டும். வீரிய ஒட்டு ரகங்களாக இருந்தால் ஒரு எக்டேருக்கு 15கிலோ, பிற ரகங்களுக்கு 20 கிலோ விதைகள் தேவைப்படும்.
நீர்ப்பாசன பயிருக்கு இடைவெளி 60 செ.மீ.,க்கு 20 செ.மீ., அளவும் மானாவாரி பயிருக்கு 45 செ.மீ.க்கு 20 செ.மீ., இடைவெளியில் விதைக்க வேண்டும். விதையை 4 செ.மீ., ஆழத்தில் ஊன்றவேண்டும். அல்லது விதைக்கும் கருவியை பயன்படுத்தலாம்.
களை, நீர், உர நிர்வாகம்
விதைத்த 3 முதல் 5 வது நாளில் களை முளைக்கும் முன், 500 கிராம் அட்ராஜின் களைக்கொல்லியை 900 லிட்டர் தண்ணீரில் கலந்து கைத்தெளிப்பான் மூலம் தெளிக்க வேண்டும். அப்போது மண்ணில் ஈரம் இருக்க வேண்டும். விதைத்த 30 முதல் 35 வது நாளில் கையால் களை எடுக்க வேண்டும். மக்காச்சோள பயிர் அதிக வறட்சி, அதிக நீரை தாங்காது. பயிரின் தேவைக்கேற்ப முளைக்கும் பருவத்தில் 2 முறை, வளர்ச்சி பருவத்தில் 3 முறை, பூக்கும் பருவத்தில் 2 முறை (45 முதல் 65 நாட்கள்) தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.
மண் பரிசோதனைக்கு ஏற்பவோ அல்லது பொதுப் பரிந்துரையான எக்டேருக்கு 135: 62.50: 50 கிலோ அளவில் தழை, மணி, சாம்பல் சத்துக்களை இடவேண்டும். எக்டேருக்கு 12 டன் தொழு உரம் அல்லது மட்கிய எருவை அசோஸ்பைரில்லம் உயிர் உரத்துடன் கலந்து மண்ணில் சீராக இட வேண்டும்.
நுண்ணுாட்டச்சத்து பற்றாக்குறையை சரி செய்ய வேளாண்மை பல்கலையின் மக்காச்சோள மேக்சிம், ஊட்டச்சத்துக்கள் மற்றும் வளர்ச்சி ஊக்கிகள் கலந்த 3 கிலோ பூஸ்டரை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து மணி உருவாகும் நேரத்தில் தெளிக்க வேண்டும். இதனால் மணி பிடிக்கும் திறன் அதிகரித்து விளைச்சல் 20 சதவீதம் வரை கூடும்.
பூச்சி, நோய் மேலாண்மை
கோடை உழவு செய்தால் மண்ணிலுள்ள கூட்டுப்புழுக்கள், நோய்கிருமிகளின் தாக்கம் கட்டுப்படுத்தப்படுகிறது. கடைசி உழவின் போது எக்டேருக்கு 250 கிலோ வேப்பம்புண்ணாக்கை இட்டால் படைப்புழுவின் தாக்கத்தை கட்டுப்படுத்தலாம். தீமை செய்யும் பூச்சிகளை தடுத்து நன்மை செய்யும் பூச்சிகளை ஈர்ப்பதற்கு, வரப்புப் பயிராக இரண்டு வரிசைகளில் ஆமணக்கு பயிரை நடலாம்.
வரப்பு சுத்தமாக இருந்தால் குருத்துப்பூச்சிகள் தங்குவதைத் தடுக்கலாம். களைகள், முந்தைய பயிரின் தட்டைகளை அழிக்க வேண்டும். மேலும் எக்டேருக்கு 12 இனக்கவர்ச்சி பொறிகளை அமைக்கலாம்.
எக்டேருக்கு ட்ரைகோகர்மா கைலோனிஸ் முட்டை ஒட்டுண்ணி அட்டையை (2.5 லட்சம் எண்ணிக்கையில்) மூன்று முறை ஒரு வார இடைவெளியில் வயலில் கட்டி வைத்தால் தண்டுத் துளைப்பானை கட்டுப்படுத்தலாம்.
இரவுநேரத்தில் புழுக்கள் தீவிரமாக இருக்கும். ஒரு லிட்டர் தண்ணீரில் 4 கிராம் பவேரியா பேசியானா அல்லது வேப்பங்கொட்டை சாறு 5 சதவீதம் கலந்து மக்காச்சோள குருத்துப் பகுதியில் படுமாறு மாலை வேளையில் தெளிக்க வேண்டும்.
அடிச்சாம்பல் நோய் தென்பட்டால் விதைத்த 20வது, 40வது நாட்களில் மெட்டலாக்ஸில், மேன்கோசெப் அல்லது மேன்கோசெப் மருந்தை ஒரு எக்டேருக்கு 1000 கிராம் தெளிக்க வேண்டும்.
பயிரின் பச்சை இலைகள் உலர்ந்து மஞ்சளாக இருந்தால் கதிர்கள் முற்றி காணப்படும். கதிரின் மேலுறையை நீக்கி பார்த்தால் விதைகள் கடினமாகவும் காய்ந்தும் காணப்படும். இதுவே அறுவடைக்கு ஏற்ற நிலை.
- சபரிநாதன், அருண்ராஜ்தொழில்நுட்ப வல்லுனர்கள்,சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையம்,பெரியகுளம், தேனி
