
புதிய பால்காளான் இரகம் கோ.3: டிரைகோ லோமா ஜைஜான்ஷியம் என்ற இப்பால் காளான் தமிழகம் முழுவதும் வளர்ப்பதற்கு ஏற்றது. மொட்டு குடைவடிவத்துடன் இருக்கும். மிகவும் மென்மையாகவும் 4 செ.மீ. பரப்பளவும் கொண்டது. தண்டுப்பகுதி 6.5.செ.மீ நீளமும் மையப்பகுதியில் இணைந்தும் தண்டின் அடிப்பகுதி பருமனாகவும், மேல்பகுதி குறுகியதாகவும், பின் முதிர்ச்சி பருவத்தில் சமமாகவும் காணப்படும். ஏபிகே.2 என்ற பால் காளானோடு ஒப்பிடும்போது அதிக சுவையை கொண்டுள்ளது.
படுக்கை வித்து தயார் செய்யும் முறை: தாய் காளானிலிருந்து திசுவைப் பிரித்தெடுத்து உருளைக்கிழங்கு கடற்பாசி குளுக்கோஸ் ஊடகம் கொண்டு நிரப்பப்பட்ட சோதனைக்குழாயில் இட்டு வளர்த்து பின்னர் அவற்றிலிருந்து தாய் வித்தினை தயார் செய்ய வேண்டும். பின்னர் இந்தத் தயார் வித்திலிருந்து முதல் தலைமுறை படுக்கை வித்து மற்றும் இரண்டாம் தலைமுறை படுக்கை வித்து தயார் செய்ய வேண்டும்.
படுக்கை தயாரிக்கும் முறை: உருளை வடிவ படுக்கை பயன்படுத்தப்படுகிறது. நன்கு பொன்னிறமான புதிதாக அறுவடை செய்த வைக்கோல் சிறந்தது. வைக்கோலை சிறுசிறு துண்டுகளாக வெட்ட வேண்டும். வைக்கோலை தொற்று நீக்கம் செய்த பின் தான் படுக்கை தயாரிக்க பயன்படுத்த வேண்டும்.
கொதி நீரில் வேகவைக்கும் முறை: வைக்கோல் துண்டுகளை 4 மணி நேரம் வெந்நீரில் ஊறவைக்க வேண்டும் தண்ணீரை வடித்து விட்டு அதனை வேறொரு தண்ணீர் உள்ள பாத்திரத்தில் நிரப்பி சாக்குப்பையினால் மூடிவிட வேண்டும். ஆவி வரும் வரை வேகவைத்து அதாவது ஒருமணி நேரம் வேகவைத்த பின்னர் அந்த வைக்கோலை நிழலான இடத்தில் உலர்த்த வேண்டும். வைக்கோலை எடுத்துப் பிழிந்தால் கையில் தண்ணீர் ஒட்ட வேண்டும். ஆனால் தண்ணீர் சொட்டக் கூடாது. ஈரப்பதம் 65 முதல் 70 சதம் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
காளான் படுக்கை தயாரிக்க 2 அடி நீளம் 1 அடி அகலம், கொண்ட பாலிதீன் பையில் அடிப்பாகத்திற்கு நூல் கொண்டு கட்டி உட்புறமாக திருப்பி விட வேண்டும். பின்னர் பையினுள் 15 செ.மீ அளவிற்கு வைக்கோல் துண்டுகளை நிரப்ப வேண்டும். பின்னர் படுக்கை வித்திலிருந்து ஒருபிடி காளான் விதையை எடுத்து ஓரங்களில் தூவ வேண்டும். மீண்டும் வைக்கோல் துண்டுகளை பரப்பி அதன் மேல்விதையினை பரப்ப வேண்டும். இதுபோன்று 5 அடுக்கினை உருவாக்கி படுக்கை தயார் செய்ய வேண்டும்.
காளான் வளர்க்கும் முறை: பால் காளான் வளர்ப்பதற்கு தென்னங்கீற்று கொட்டகையும், நீலநிற பாலிதீன் கூண்டும் தேவைப்படும். தயார் செய்யப்பட்ட உருளை வடிவ படுக்கைகளை தென்னங்கீற்றுக் கொட்டகையினுள் கட்டி தொங்கவிட வேண்டும். தென்னங்கீற்று கொட்டகை 25-30 செ.மீ வெப்பநிலையும், 85-90 சதம் ஈரப்பதமும் கொண்டு இருக்க வேண்டும். உருளை வடிவப்படுக்கை முழுவதும் வெண்ணிற பூசனம் பரவி விடும். பின்னர் இவ்வுருளை வடிவ படுக்கைளில் 2 சம பாத்திகளாக வெட்டி அதன்மேல் மேற்பூச்சு கலவையினை இடவேண்டும்.
மேற்பூச்சு கலவை தயாரிக்க ஆறு குளங்களிலிருந்து எடுத்த மண்ணே சிறந்ததாகும். 1 கிலோ மண்ணிற்கு 10 கிராம் கால்சியம் கார்பனேட் கலந்து அதன்மேல் லேசாக தண்ணீர் தெளிக்க வேண்டும். இம்மண்ணை பைகளில் நிரப்பி 20 இராத்தல் அழுத்தத்தில் வெப்பமூட்டியினுள் 2 மணிநேரம் வைத்து தொற்று நீக்கம் செய்ய வேண்டும்.
இரண்டாக பிரித்தெடுத்தப் படுக்கையின் மேல் 2 செ.மீ. அளவிற்கு மேற்பூச்சு மண்ணையிட்டு அதனை நீலநிற பாலிதீன் கூட்டினுள் வைத்து பராமரிக்க வேண்டும். படுக்கையின் மேல் தினமும் லேசாக தண்ணீர் தெளித்து வரவேண்டும்.
பாலிதீன் கூண்டு 30 அடி நீளமும், 15 அடி அகலமும் கொண்டதாக இருக்க வேண்டும். தரைப்பகுதியில் 3 அடி அழத்திற்கு ஹாலே பிளாக் கல் கொண்டு அமைக்க வேண்டும். எஐ டைப் / ஃ ஆங்கிள் கொண்ட அரைவட்ட வடிவ கூரை தயார் செய்து நீலநிற சிலீபாலின் தாளைக் கொண்டு நன்கு அழுத்தமாக மூடி கூண்டு போன்று அமைக்க வேண்டும். இவ்வாறு அமைக்கப்பட்ட கூண்டில் நாள் ஒன்றுக்கு 5-10 கிலோ காளான் உற்பத்தி செய்யலாம். (தகவல் : வே.பிரகாசம், ப.அகிலாதேவி, கு.திரிபுவனமாலா, மூ.வினோதினி, பயிர் நோயியல் துறை, காளான் ஆராய்ச்சி பயிற்சி மையம், த.வே.ப.கழகம், கோயம்புத்தூர்-641 003. போன் : 98422 43797.
- டாக்டர் கு.சௌந்தரபாண்டியன்

