
சர்பகந்தா சாகுபடி : இந்த மூலிகை தாவரவியல் முறைப்படி ராவோல்பியா செர்பன்டைனா என்பதாகும். மிதமானது முதல் ஆழமான மண், வண்டல் மண், கருப்பு மண்ணில் அடர்த்தியாகவும், பெரியதாகவும் வளரும். இது 1500 முதல் 3500 மி.மீ வரை மழையளவும் 10-38 டிகிரி செல்சியஸ் வெப்பமும் உடைய பகுதிகளில் செழித்து வளரும். கடல் மட்டத்திலிருந்து 1300 முதல் 1400 மீட்டர் எம்.எஸ்.எல். உயரம் வரை நன்கு வளரக்கூடிய ஒரு நீண்ட கால பயிராகும். சர்பகந்தாவிலிருந்து 200க்கும் மேற்பட்ட மருந்துப் பொருட்கள் பிரித்தெடுக்கப்படுகின்றன.
இரண்டு அல்லது மூன்று முறை உழவு செய்து பண்படுத்தப்பட்ட நிலத்தில் எக்டருக்கு 10 டன் தொழுஉரமிட்டு உழுத நிலத்தில் 60 செ.மீ இடைவெளியில் பார்கள் அமைத்து அதன் பக்கவாட்டில் நாற்றுகளை 30 செ.மீ. இடைவெளியில் நடவு செய்ய வேண்டும். சர்பகந்தா இனப்பெருக்கத்திற்கு வேர்க்கரணைகள், தண்டுக்கரணைகள் அல்லது விதைகள் உபயோகிக்கப்படுகிறது. விதைகள் 10-74 சதம் வரை முளைக்கும் திறன் கொண்டது. செப்டம்பர் முதல் நவம்பர் வரை சேகரிக்கப்பட்ட விதைகள் நன்கு முளைக்கும். ஒரு எக்டர் விதைப்பதற்கு 5-6 கிலோ விதை தேவைப்படும். நாற்றங்கால்களை மேட்டுப்பாத்திகளாக, அமைத்து நன்கு மக்கிய தொழு உரத்தை 1 சதுர மீட்டருக்கு 1 கிலோ வீதம் இட்டு 6-7 செ.மீ. இடைவெளியில் விதைகளை விதைக்க வேண்டும். நாற்றங்கால் தயார் செய்ய மே-ஜூன் மாதம் சிறந்தது.
நட்ட இரண்டு மாதங்கள் ஆனபின் நாற்றுகளை நடவு வயலில் நட வேண்டும். நாற்றுகள் 4-6 இலைகள் கொண்டதாக இருக்கும்போது 30ஙீ60 செ.மீ. இடைவெளியில் நடவு செய்ய வேண்டும். வேர்க்கரணைகளால் 2.5-5 செ.மீ நீளமும், தண்டுக்கரணைகள் என்றால் 12-20 செ.மீ. நீளமும் இருத்தல் வேண்டும். வேர் உருவாவதை துரிதப்படுத்த செராடிக்ஸ் ஹார்மோனில் நனைத்து நடுதல் நல்லது. எக்டருக்கு 10-15 டன் தொழுஉரம் இட வேண்டும். எக்டருக்கு 60:30:30 கிலோ தழை, மணி, சாம்பல் சத்துக்களை ஆண்டுதோறும் 2 முதல் 3 முறை இடவேண்டும். இதில் தழைச்சத்தின் அளவில் 2 அல்லது 3 முறையாக பிரித்து 3 மாத இடைவெளியில் அளிப்பது நல்லது.
நடவு செய்தவுடனும், பின்பு 3 நாட்களுக்கு ஒருமுறையும், நீர்ப்பாசனம் செய்ய வேண்டும். பின்னர் தேவைக்கேற்ப 5-7 நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் விட வேண்டும். அனோமலா பொலைட்டா வேர்புழுக்கள், ஸ்பிஞ்சிட்டெய்லிபில்லா நீரி அந்துப்பூச்சி, கூண் வண்டுகள், புழுக்கள் தாக்குதல் இருந்தாலும் சேதம் அதிகம் இருப்பதற்கு வாய்ப்பில்லை.
நோய்களில் செர்கோஸ்போரா ராவெல்கபியே இலைப்புள்ளி நோய், செர்கோஸ்போரா சொபண்டினா இழைபுழு நோய், ஆல்டெர்நெரியா டினுயிஸ் இணபக் இலைக்கருகல்நோய், இலைத்துளை நோய் ஆந்தரக்னோஸ் போன்ற நோய்களின் தாக்குதல் அதிகம் காணப்படும். இதனைக் கட்டுப்படுத்த 0.2 சதம் 'சிஏனப்' அல்லது 'மான்கோசெப்' தெளிக்கலாம். மேலும் நச்சுயிரினால் உண்டாகும் தேமல் நோய், தலைக்கொத்து நோய் தென்பட்டால் உடனே செடியை வேரோடு அகற்றி எரித்து விட வேண்டும்.
அறுவடை : சர்பகந்தா விதைத்த 2முதல் 3 ஆண்டுகளில் அறுடைக்கு தயாராகிறது. நவம்பர் - டிசம்பர் மாதங்களில் இலைகள் உதிர்ந்தவுடன் வேர்ப்பகுதியில் அதிக மருந்து, இரசாயனப் பொருட்கள் இருக்கும். அப்போது அறுவடை செய்வது நல்லது. அறுவடையின்போது வேர்களை கருவிகளை கொண்டு ஆழமாகத் தோண்டி எடுக்க வேண்டும்.
தோண்டி எடுக்கப்பட்ட வேர்களை நன்கு கழுவி 1 முதல் 2 செ.மீ. நீளமுள்ள துண்டுகளாக வெட்டி 1-10 சதம் ஈரப்பதம் வரும் வரை உலர்த்தி பின்பு பாலிதீன் உறை கொண்ட சாக்குப்பைகளில் அடைத்து ஈரமற்ற பகுதியில் சேமித்து வைக்கலாம். ஒரு எக்டருக்கு 1.5 முதல் 2.5 டன் உலர்ந்த வேர்கள் கிடைக்கும். இதில் 40 முதல் 45 சதம் வேர்ப்பட்டையாக மகசூலைப் பெறலாம். வேர்ப்பட்டைகளிலிருந்து 30 சதம் இரசாயன மூலப்பொருட் களான ரிசர்பைன், அஜ்மலைன், சொபண்டைன் போன்றவைகள் பெறப்படுகின்றன.
(தகவல் : முனைவர் ப.பாலசுப்பிரமணி, முனைவர் எம்.தமிழ்செல்வன், பி.பானுபிரியா, மானாவாரி வேளாண்மை ஆராய்ச்சி நிலையம், செட்டிநாடு. போன்: 04565 - 283 080).
- டாக்டர் கு.சௌந்தரபாண்டியன்

