
வனிலாவைத் தாக்கும் சாறு உறிஞ்சும் பூச்சிகள் கட்டுப்பாடு: வனிலாவை குறைந்த எண்ணிக்கை உடைய பூச்சிகளே தாக்கி சேதம் விளைவிக்கின்றன.
வனிலா நாவாய்பூச்சி: இளம் குஞ்சுகளும் முதிர்ந்த பூச்சிகளும் தண்டு நுனி மற்றும் பூக்களில் உள்ள சாற்றை உறிஞ்சி சேதம் விளைவிக்கின்றன. பூச்சிகள் தாக்கிய மொட்டு மற்றும் தண்டு நுனி வாடி பிறகு கருகி 3 முதல் 5 நாட்களில் கீழே உதிர்ந்துவிடும். முதிர்ந்த பூச்சி கருப்பு நிறத்தில் காணப்படும்.
கட்டுப்படுத்தும் முறைகள்: பூச்சி தாக்கிய பூக்கள், மொட்டு, தண்டு நுனி ஆகியவற்றை சேகரித்து அழித்துவிட வேண்டும். இளம் குஞ்சுகள் மற்றும் முதிர்ந்த பூச்சிகள் மற்றும் முட்டை குவியலை சேகரித்து அழித்துவிட வேண்டும். ஜனவரி மாதங்களில் பூச்சிகளின் நடமாட்டத்தை கண்காணித்து பிறகு பூச்சிகள் தாக்குதல் இருப்பின் அதனைக் கட்டுப்படுத்த மோனோகுரோட்டோபாஸ் 1மிலி/1லிட்டர் தண்ணீர் என்ற அளவில் கலந்து காலை, மாலை நேரங்களில் தெளிக்கலாம்.
இமரல்டு நாவாய்பூச்சி: இதன் தாக்குதல் குளிர்பிரதேசங்களில் அதிகம் காணப்படுகிறது. இளம் குஞ்சுகள் மஞ்சள் நிறத்திலும், முதிர்ந்த பூச்சிகள் பச்சை நிறத்திலும் இருக்கும். இளம் குஞ்சுகள், மொட்டுகள், தண்டு கொடிகளில் உள்ள சாற்றை உறிஞ்சி சேதம் உண்டாக்கும். பூச்சிகளின் தாக்குதல் அதிகமாக இருக்கும்போது பூக்களின் மொட்டுகள் உதிர்ந்துவிடும். தாக்கப்பட்ட இலைகள் மஞ்சள் நிறமாக காணப்படும்.
கட்டுப்படுத்தும் முறைகள்: * பூச்சி தாக்கப்பட்ட இலைகள், முட்டை குவியல், இளம் மற்றும் முதிர்ந்த நாவாய் பூச்சிகளை சேகரித்து அழித்து விட வேண்டும். *மோனோ குரோட்டோபாஸ் 1 மிலி/1லிட்டர் தண்ணீர் என்ற அளவில் கலந்து காலை அல்லது மாலை நேரங்களில் தெளிக்கலாம். * இளம் குஞ்சுகளும் முதிர்ந்த நாவாய் பூச்சிகளும் காய்களில் உள்ள சாற்றை உறிஞ்சி சேதப்படுத்தும். இதனால் காய்கள் சிறியதாகவும் பின் சுருங்கியும் காணப்படும். பூச்சி தாக்குதல் அதிகமாக இருக்கும்போது இளம் காய்கள் அதிக அளவில் உதிர்ந்துவிடும். இதனால் மகசூல் பெருமளவு குறைந்துவிடுகிறது. முதிர்ந்த பூச்சிகள் பச்சை நிறத்தில் காணப்படும். இந்த பூச்சிகளின் மூன்றாவது ஜோடி கால்களில் இலைபோன்ற அமைப்பு காணப்படும். இதனால் இதற்கு 'இலை பாதம் நாவாய்பூச்சி' என்று பெயரிடப்பட்டுள்ளது.
செதில் பூச்சி தாக்கிய பயிரை சேகரித்து அழித்துவிட வேண்டும். மோனோகுரோட்டோபாஸ் 1மிலி/1 லிட்டர் தண்ணீர் என்ற அளவில் கலந்து காலை அல்லது மாலை நேரங்களில் தெளித்து கட்டுப்படுத்தலாம். (தகவல்: கு.கோவிந்தன், சா.ராஜதுரை மற்றும் தொண்டைமான், வேளாண் பூச்சியியல் துறை மற்றும் தோட்டக்கலைத்துறை, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், கோயம்புத்தூர்-641 003)
-டாக்டர் கு.சௌந்தரபாண்டியன்.

